India’s first private launch pad: அக்னிகுல் காஸ்மோஸ் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ஏவுதளத்தை உருவாக்கியுள்ளது.
விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனமான அக்னிகுல் காஸ்மோஸ் (Agnikul Cosmos) இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ஏவுதளத்தை உருவாக்கியுள்ளது. இது இந்திய விண்வெளி துறையில் மேலும் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது. முன்னதாக கடந்த வாரம் விக்ரம்-எஸ் ஸ்கைரூட் என்ற தனியார் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
விண்வெளி துறையில் தனியார் நிறுவன செயல்பாடுகளுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் செயற்கைகோள்கள், ராக்கெட் தயாரிக்கப்பட்டன. தற்போது ராக்கெட் ஏவுதள அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
விரைவில் ஏவுதல்
இந்த ஏவுதளமும் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ளது. இஸ்ரோவின் ஏவுதள வசதிகளைப் போலவே அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 2 ஏவுதளங்கள் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. அக்னிகுல் ஏவுதளம் (ஏஎல்பி) மற்றும் அக்னிகுல் மிஷன் கட்டுப்பாட்டு மையம் (ஏஎம்சிசி) அமைக்கப்பட்டுள்ளன.
தனியார் ராக்கெட் ஏவுதளத்தை இஸ்ரோ தலைவர் சோம்நாத் திறந்து வைத்தார். ஏவுதளத்தை திறந்து வைத்து பேசுகையில், “இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் தனியார் ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ளது. இப்போது இந்தியா மேலும் ஒரு ஏவுதளத்திலிருந்து ராக்கெட்டுகளை அனுப்ப முடியும்.

இந்த இரண்டு பிரிவுகளையும் இணைக்கும் அனைத்து முக்கியமான அமைப்புகளும் – ஒன்றுக்கொன்று 4 கிமீ தொலைவில் உள்ளவை. கவுண்ட்டவுன் வசதிகளுக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
புதிய ஏவுதளம் குறிப்பாக திரவ நிலை-கட்டுப்படுத்தப்பட்ட ஏவுகணைகளை அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, இது தேவைக்கேற்ப, இஸ்ரோவின் பணிக் கட்டுப்பாட்டு மையத்துடன் தரவு மற்றும் பிற முக்கியமான தகவல்களைப் பகிர உதவும்.
அக்னிகுல் ஏவுதளத்திலிருந்து வரும் மாதங்களில் ராக்கெட் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. சோதனை அடிப்படையில் முதலில் செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்னிகுல் காஸ்மோஸ் இணை நிறுவனர் மொயின் கூறுகையில், “எங்கள் ஏவுதளம் ஸ்ரீஹரிகோட்டாவிற்குள் அமைக்கப்படும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இது இஸ்ரோ மற்றும் இன்-ஸ்பேஸின் ஆதரவால் மட்டுமே சாத்தியமானது. விண்வெளித் துறையில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய சீர்திருத்தங்கள், விண்வெளிக்கு செல்ல வேண்டும் என்கிற அனைவரது கனவும் சாத்தியமாக உதவும்” என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil