எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் நாசாவின் க்ரூ-6 திட்ட விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இன்று அனுப்பபட இருந்தனர். புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள லாஞ்ச் காம்ப்ளக்ஸ் 39A தளத்தில் இருந்து ஐ.எஸ்.எஸ்ஸிற்கு அனுப்ப திட்டமிடப்பட்டிருந்தது. திட்டமிட்டபடி 4 வீரர்கள் விண்கலத்தில் அமர்ந்து புறப்பட தயாராக இருந்த நிலையில் கடைசி நிமிடத்தில் எஞ்சின் கோளாறு காரணமாக ராக்கெட் ஏவுதல் நிறுத்தப்பட்டது.
அறிக்கைகளின்படி, வானிலை மிகவும் சாதகமாக இருந்தபோதிலும், ராக்கெட் என்ஜின் எரிபொருள் திரவமாகப் பயன்படுத்தப்படும் பைரோபோரிக் கலவையான ட்ரைஎதில்அலுமினியம்-ட்ரைஎதில் போரேன் (TEA-TEB) திரவத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ராக்கெட் ஏவுதல் நிறுத்தப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாளை செவ்வாய்க்கிழமை அதிகாலை 1:22 மணிக்கு அடுத்த ஏவுதல் முயற்சி மேற்கொள்ளப்படும் என்று SpaceX தெரிவித்துள்ளது.
நாசா விண்வெளி வீரர்களான ஸ்டீபன் போவன் மற்றும் வாரன் "வுடி" ஹோபர்க், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) விண்வெளி வீரர் சுல்தான் அல்னியாடி மற்றும் ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸைச் சேர்ந்த விண்வெளி வீரர் ஆண்ட்ரே ஃபெட்யாவ் ஆகியோர் 6 மாத கால ஆய்வுக்காக சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பபட உள்ளனர்.
மஸ்க் விண்கலத்தில் ரஷ்ய விண்வெளி வீரர் ஒருவர் விண்வெளிக்கு அனுப்ப திட்டமிடப்படுவது இது இரண்டாவது முறையாகும். இருப்பினும், அரபு நாட்டைச் சேர்ந்த விண்வெளி வீரர் ஒருவர் விண்வெளிக்கு பயணம் செய்வது இதுவே முதல் முறையாகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/