நாசாவிற்கான 26-வது வணிக மறுவிநியோகப் பணியின் ஒரு பகுதியாக ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கிட்டத்தட்ட 3,500 கிலோகிராம் கொண்ட அறிவியல் பரிசோதனைகள் மற்றும் பிற பொருட்கள் வெற்றிகரமாக அனுப்பி வைக்கப்பட்டது. இந்திய நேரப்படி நேற்று (நவம்பர் 27) அதிகாலை 12.50 மணிக்கு பால்கன் 9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
டிராகன் விண்கலம் மாலை 6 மணியளவில் ராக்கெட்டிலிருந்து பிரிந்து சர்வதேச விண்வெளி நிலையம் சென்றதாக நாசா கூறியுள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் விஞ்ஞானிகளின் பயன்பாட்டிற்காக டிராகன் விண்கலம் மூலம் சில பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மருத்துவ கிட்
"மூன் மைக்ரோஸ்கோப்" என்பது விண்வெளி நிலையத்தில் இருக்கும் விஞ்ஞானிகளின் மருத்துவ சோதனைக்கான ஒரு கருவியாகும். சிறிய கையடக்க கருவியாகும். இது ரத்த மாதிரிகளை சோதனை செய்ய உதவும். இந்த கிட் மூலம் விண்வெளி வீரர்கள் தாமாகவே ரத்த பரிசோதனை செய்து, அதன் மாதிரிகளை பூமியில் உள்ள நாசா அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கலாம். இங்குள்ள
மருத்துவர்கள் நோய் கண்டறிந்து சிகிச்சை முறைகளை பரிந்துரைப்பர்.
இந்த சோதனைக் கருவியை விண்வெளி, நிலவு, செவ்வாய் கிரகத்தில் பயன்படுத்தலாம். அங்குள்ள வீரர்களின் உடல் நலத்தை மேம்படுத்தப்பட்ட கருவி மூலம் கண்டறியும் திறன்களை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. தண்ணீர் மற்றும் உணவு மாசு ஆகியவையை சோதிக்கவும் இதைப் பயன்படுத்தலாம். நாசாவின் கூற்றுப்படி, ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் மருத்துவ கண்காணிப்பை மேம்படுத்த வன்பொருள் உதவும் எனக் கூறப்பட்டுள்ளது.
விண்வெளியில் தக்காளி
தற்போது, விண்வெளியில் உள்ள வீரர்கள் பூமியில் தயார் செய்யப்பட்ட பேக்டு உணவுகளையே (pre-packaged food) சார்ந்து உள்ளனர். இதை வருங்காலத்தில் மாற்றி விண்வெளியிலேயே உணவு உற்பத்தி செய்ய நாசா திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக நாசா ஆராய்ச்சியாளர்கள் "வெஜ்ஜி" (Veggie) என்ற பெயர் கொண்ட தாவர வளர்ச்சி திட்டத்தை பரிசோதித்து வருகின்றனர். இது கீரைகளை வளர்க்க வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டது.
இந்தநிலையில் தற்போது டிராகன் விண்கலம் மூலம் 'Veg-05' பரிசோதனை மேற்கெள்ளப்பட உள்ளது. இது விண்வெளி தாவர வளர்ச்சி திட்டத்தின் அடுத்த கட்ட முயற்சி. இதன் மூலம் தக்காளியை வளர்க்க நாசா திட்டமிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“