நட்சத்திரங்களை ரசிக்காதவர்கள் இருக்க மாட்டார்கள். வானில் நட்சத்திரங்கள் பிரகாசமாகவும், மிக அழகாகவும் இருக்கும். 80, 90 கிட்ஸ்களுக்கு நட்சத்திரங்களை எண்ணி விளையாடுவது சிறந்த நினைவாக இன்றளவும் இருக்கும். நட்சத்திரங்கள் எப்போதும் பிரமிப்பாகவும், அழகாகவும் இருக்கின்றன. அந்தவகையில், அமெரிக்காவின் ஆய்வு படி நட்சத்திரங்கள் ஆண்டுதோறும் குறைந்து வருவதாக கூறியுள்ளது.
இரவு நேரத்தில் அதிகரித்து வரும் ஒளி மாசுபாட்டால் நட்சத்திரங்கள் மங்குவதாக புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இரவுநேர வெளிச்சத்தால் ஏற்படும் விளைவு தீவிரமடைந்து வருவதாக கூறியுள்ளது. ஒளி மாசுவால் வானில் அதிகளவு செயற்கை வெளிச்சம் ஏற்படுகிறது. 2011 முதல் 2022 வரையில் நட்சத்திரங்களின் எண்ணிக்கை 10% குறைந்துள்ளது. இரவு நேர வானத்தின் பிரகாசம் அதிகரிப்பதால் ஒளிமாசுபாட்டால் ஆண்டுதோறும் 7 முதல் 10% வரையில் நட்சத்திரங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. செயற்கைக்கோள் தரவுகளைப் பயன்படுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சாண்டியாகோ டி கம்போஸ்டெலா பல்கலைக்கழகத்தின் இயற்பியலாளர் ஃபேபியோ ஃபால்ச்சி கூறுகையில், "ஆண்டுதோறும் நட்சத்திரங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மங்கி மறைந்த அளவிலான நட்சத்திரங்களை கண்டால் நீங்கள் அதிகம் ஒளி மாசடைந்த பகுதியில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். அதே நேரம் பிரகாசமான நட்சத்திரங்களை கண்டால் குறைந்த அளவில் மாசடைந்த பகுதியில் உள்ளீர்கள்" என்று கூறினார்.
மற்றொரு ஆராய்ச்சியாளர் கூறுகையில், ஒரு குழந்தை பிறக்கும் போது 250 நட்சத்திரங்கள் தெரிகிறது என்றால் அந்த குழந்தைக்கு 18 வயதாகும் போது, 100 நட்சத்திரங்கள் மட்டுமே தெரியும். அந்த அளவிற்கு ஒளி மாசு அதிகரித்து வருகிறது என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/