தமிழக பட்ஜெட்டில் இயற்கை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. அதில் முக்கியமான ஒன்று நீலகிரி வரையாடு பாதுகாப்பு திட்டமாகும். நீலகிரி வரையாடுகளை பாதுகாக்கும் பொருட்டு இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி வரையாடு எங்கே காணப்படும்? அதன் சிறப்பு என்ன?
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் குறிப்பாக, அதன் தெற்குப் பகுதியில் மட்டுமே காணப்படும் புல்வெளி சுற்றுச்சூழலில் வாழ்பவை நீலகிரி வரையாடுகள். உலகின் வேறெந்த பகுதிகளிலும் காணப்படாத இந்த ஆடுகள் அதிக மழைப்பொழிவு, கடல் மட்டத்தில் இருந்து 300 மீட்டர் முதல் 2600 மீட்டர் உயரத்தில் இருக்கும் மலைப்பகுதிகளில் மட்டுமே வாழ்ந்து வருகின்றன. தமிழகத்தின் நீலகிரி, ஆனைமலை, மேகமலை, பழனிமலை, சிறுவாணி போன்ற பகுதிகளிலும் கேரளத்தில் மூணாறு, இரவிக்குளம் தேசியப் பூங்கா, அகஸ்தியர் மலை போன்ற கைவிட்டு எண்ணக் கூடிய ஒரு சில இடங்களில் மட்டுமே காணப்படுகிறது. தமிழகத்தின் மாநில விலங்கான வரையாடுகள் இறைச்சிக்காகவும், தோலுக்காகவும் அதிக அளவில் வேட்டையாடப்பட்டன. எனவே அதன் எண்ணிக்கை குறைய துவங்கியது. அதே போன்று மக்கள் தொகை அடர்த்தி மற்றும் காடுகளின் பரப்பு குறைதல் போன்ற காரணங்களாலும் இந்த விலங்குகளின் எண்ணிக்கை குறைய துவங்கியது.
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வரையாடுகள் தொடர்பாக ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறது WWF. தமிழக வனத்துறை நடத்தும் கணக்கெடுப்பில் தேவையான உதவிகளையும் வழங்கி வருகிறது. இறுதியாக 2015ம் ஆண்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன் முடிவுகள் வெளியிடப்பட்டது. 3122 வரையாடுகள் தமிழகம் மற்றும் கேரள வனப்பகுதியில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இரவிக்குளம் தேசியப் பூங்காவில் மொத்தம் 700 வரையாடுகள் உள்ள நிலையில் 626 வரையாடுகள் ஆனைமலை புலிகள் காப்பகத்திலும் 463 வரையாடுகள் முக்குர்த்தி தேசிய பூங்காவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வரவேற்கும் இயற்கை ஆர்வலர்கள்
இந்தியா முழுவதும் யானைகள் மற்றும் புலிகளுக்கு தரப்படும் முக்கியத்துவம் அதிக அளவில் இத்தகைய தனித்துவமான விலங்குகளுக்கு வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எப்போதும் விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் இருக்கும். இந்நிலையில் நீலகிரி வரையாட்டின் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ள இந்த நிதி அவர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. வனவிலங்குகளை பாதுகாக்க எடுக்கப்படும் முன்னெடுப்புகளில் இது மிகவும் முக்கியமான ஒன்றாகும். முதல்வருக்கு நன்றி என்று சுற்றுச்சூழல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஐ.ஏ.எஸ். சுப்ரியா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.
இது தொடர்பாக தி தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்திடம் பேசிய பூவுலகின் நண்பர்கள் அமைப்பில் பணியாற்றும் சுந்தர், “நம்முடைய வீட்டுக் குழந்தைகளிடம் கேட்டால் வரிக்குதிரை இது, நீர்யானை இது, ஒட்டகச்சிவிங்கி இது என்று அனைத்தையும் சரியாக கூறுவார்கள். ஆனால் நம்முடைய மாநிலத்தில் வளரும், தனித்துவமான விலங்குகளைப் பற்றி கேட்டால் யாருக்கும் எதுவும் தெரியாது. நம்முடைய சூழலை மாணவர்களுக்கு தொடர்புப்படுத்தும் வகையில் பாடத்திட்டங்கள் இருக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும் எங்களுக்கு அரசின் இந்த முன்னெடுப்பு மிகவும் மகிழ்ச்சி அளித்துள்ளது” என்று கூறுகிறார்.
”உண்மையில் கூறப்போனால், நீலகிரி வரையாடுகள் அதிக அளவில் காணப்பட வேண்டிய உதகை சுற்றுவட்டாரப் பகுதியில் இதன் எண்ணிக்கை குறைந்து வருவது வருத்தத்தையே தருகிறது. அதன் வாழ்விடங்கள் துண்டாடப்பட்டுள்ளதே இதற்கு முக்கியமான காரணம் என்று கூறுகிறார்” நீலகிரியை சேர்ந்த சுற்றுசூழல் ஆராய்ச்சியாளார் காட்வின் வசந்த் பாஸ்கோ. “க்ளென்மார்கன் மலைப்பகுதியில் இருந்து அதற்கு மிக அருகில் இருக்கும் மற்றொரு வாழ்விடத்திற்கு வரையாடுகளால் செல்ல இயலாத அளவிற்கு மனித இடர்பாடுகள் இருக்கின்றன. இரண்டு வாழ்விடங்களுக்கு இடையேயான பாதைகள் பலப்படுத்தப்பட வேண்டும். இரு குழுவுக்கும் இடையே நடைபெறும் இனப்பரிமாற்றம் ஆரோக்கியமான புதிய வரையாடு சந்ததிகளை உருவாக்க உறுதுணையாக இருக்கும்” என்றும் கூறுகிறார் அவர்.
அதன் அழிவுக்கு காரணம் என்ன?
உலக வனவிலங்கு நிதியம் அமைப்பின், மேற்குத்தொடர்ச்சி மலை - நீலகிரி குழுத் தலைவர் சங்கேத் பாலே இது குறித்து கூறும் போது, “அரசு இந்த முன்னெடுப்பை எடுத்ததன் விளைவாக புல்வெளி பரப்பை பாதுகாக்கும் முயற்சியையும் துவங்கியுள்ளது. வரையாடுகள் இருக்கிறது என்றால் அந்த பகுதி ஆரோக்கியமான பண்புகளைக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். நீலகிரியில் இருக்கும் சோலைக்காடுகள்- புல்வெளி மண்டலம் பாதுகாக்கப்படும் என்றால் அங்கே உற்பத்தியாகும் ஆறுகளின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்” என்றார்.
பல ஆண்டுகளாக நீலகிரி வரையாடு குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டாலும், வாழ்விடங்கள் மிகவும் தனித்து விடப்பட்டிருப்பதாலும், எளிதில் அணுகக் கூடியதாக இல்லை என்பதாலும் கோவை முதல் கன்னியாகுமரி வரை உள்ள வரையாடு இருப்பிடங்கள் குறித்து முறையே ஆய்வு செய்ய இயலவில்லை என்று கூறினார்.
நீலகிரி, ஆனைமலை மற்றும் இரவிக்குளம் பகுதியில் இருக்கும் வரையாடுகளின் எண்ணிக்கை நிலையாக உள்ளது. ஆனாலும் 20 முதல் 30 வரையாடுகளைக் கொண்டிருக்கும் சிறிய வாழ்விடங்கள் விரைவில் வரையாடுகளை இழக்கும் அபாயத்தில் இருக்கிறது என்று கூறினார் WWF-ன் நீலகிரி வரையாடு பாதுகாப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.ஏ. ப்ரெதித். வாழ்விடசுருக்கம், காட்டுத்தீ, காலநிலை மாற்றம், இனப்பெருக்க காலத்தில் ஏற்படும் அழுத்தங்கள் ஆகியவையும் வரையாடுகளின் எண்ணிக்கைக்கு குறைவுக்கு வழி வகுக்கும். அரசு கொண்டு வந்திருக்கும் இந்த திட்டம் மூலமாக இத்தகைய பிரச்சனைகளுக்கு தீர்வு காணவேண்டும் என்றும் அவர் கூறினார்.
தமிழக பட்ஜெட் 2022: சென்னையில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க ரூ.500 கோடி நிதி
ஆனைமலையில் இதன் நிலை என்ன?
ஆனைமலையில் உள்ள வால்பாறைக்கு செல்லும் பகுதியிலும் இரவிக்குளம் பகுதியிலும் மட்டுமே இந்த வரையாட்டை மக்கள் வெகு அருகில் நின்று பார்க்க இயலும். மிகவும் கூச்ச சுபாவம் கொண்ட இந்த விலங்கு பெரும்பாலான பொழுதுகளில் மக்கள் கண்களில் அகப்படாமல் இருக்கும் ஒன்றாகும்.
“சாலைகளில் இப்படி காணப்படும் நீலகிரி வரையாடுகள் அளவில் மிகவும் குறைவானவை தான். பொதுவாக கிராஸ் ஹில்ஸ் மற்றும் இரவிக்குளம் தேசியப் பூங்காவில் மக்களால் இதனை மிக அருகில் சென்று பார்க்க இயலும். ஏற்கனவே அரசின் கடுமையான சட்டங்களால் வரையாடு வேட்டையாடப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த நிதியானது அதன் வாழ்விடங்களை மேம்படுத்தவே அதிகம் பயன்படுத்தப்பட வேண்டும்” என்று தெரிவிக்கிறார் ஆனைமலையை சேர்ந்த இயற்கை ஆர்வலர் ப்ரவீன் சண்முகானந்தம்.
”பெரிய பெரிய தலைவர்களை தெரியும், கட்சி ஆட்களைத் தெரியும் என்று கிராஸ்ஹில்ஸ் பகுதிக்கு அதிகமாக, சட்டத்திற்கு புறம்பாக நிறைய பேர் சென்று வருகின்றனர். மிகவும் கடுமையான விதிமுறைகள் கொண்டு வந்து, மனித இடையூறுகளில் இருந்து வரையாடுகளை பாதுகாக்கவும், அதன் வாழிடத்தை மேம்படுத்தவும் இந்த நிதி பயன்படுத்தப்பட வேண்டும். அதே போன்று உயர்ந்த மலைப்பகுதிகளில் மட்டுமே காணப்படும் சோலைக்காடு சுற்றுச்சூழல் மண்டலத்தில் இருக்கும் களைச்செடிகளை அகற்றி, அதன் இயற்கைத் தன்மை உறுதி செய்யப்படும் பட்சத்தில், உணவுக்காக அதிகமாக வரையாடுகள் வெளிவருவதும் தவிர்க்கப்படும்” என்றும் கூறுகிறார் அவர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.