இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) வரும் நவம்பர் 26-ம் தேதி ஓஷன்சாட்-3 மற்றும் 8 நானோ செயற்கைக்கோள்களை பி.எஸ்.எல்.வி-54 ராக்கெட் மூலம் விண்ணுக்கு செலுத்துகிறது. இதில், பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனமான பிக்செல் (Pixxel) தயாரித்த ‘ஆனந்த்’ (Anand) ஹைப்பர் ஸ்பெக்ட்ரல் இமேஜிங் செயற்கைக்கோளும் (hyper spectral imaging satellite) அனுப்பபடுகிறது. பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் முதல் முறையாக அனுப்பபடுகிறது. முதல் முறையாக இந்தியாவில் அனுப்புகிறது.
இந்நிறுவனம் முந்தைய 2 செயற்கைகோள்களை ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் அனுப்பியது. அமெரிக்காவின் கேப் கனாவெரலில் இருந்து SpaceX Falcon-9 ராக்கெட் மூலம் ‘Iteration-1’ மற்றும் ‘Iteration-2’என்ற 2 டெமோ செயற்கைக்கோள்களை ஏவியுள்ளது. பிக்செல் நிறுவனம் ஹைப்பர் ஸ்பெக்ட்ரல் இமேஜிங் செயற்கைக்கோள்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. இது பூமியில் உயர்தரத்துடன், தெளிவான புகைப்படங்களை எடுக்க உதவுகிறது.
ஆனந்த் செயற்கைக் கோள் 15 கிலோவிற்கும் குறைவான எடை கொண்டது மற்றும் 150+ அலைநீளத்தை கொண்டது என்று நிறுவனத்தின் இணை நிறுவனர் அவைய்ஸ் அகமது கூறினார். “இந்த செயற்கைக்கோள் வாயுக்கள், மீத்தேன் கசிவுகள், நிலத்தடி எண்ணெய், பூச்சி தாக்குதல்கள் மற்றும் பிற பயிர் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும், தற்போதுள்ள மல்டி ஸ்பெக்ட்ரல் செயற்கைக்கோள்களால் இதை செய்ய முடியாது” என்றார்.

பிலானியில் உள்ள பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸில் (BITS) கல்லூரி நண்பர் க்ஷிதிஜ் கண்டேல்வாலுடன் இணைந்து அகமது கடந்த 2019-ம் ஆண்டு நிறுவனத்தை தொடங்கினார்.
ஹைப்பர் ஸ்பெக்ட்ரல் இமேஜிங் விண்ணில் என்ன செய்கிறது?
விண்வெளியில் 3 வகையான இமேஜிங் செய்ய முடியும். சிவப்பு-பச்சை-நீலம் இமேஜிங், மல்டி ஸ்பெக்ட்ரல் இமேஜிங் மற்றும் ஹைப்பர் ஸ்பெக்ட்ரல் இமேஜிங். ஹைப்பர்ஸ்பெக்ட்ரல் இமேஜிங் நூற்றுக்கணக்கான அலைநீளங்களில் தரவை சேகரிக்கிறது. electromagnetic spectrum மூலம் தரவுகளைச் சேகரித்து ஆய்வு செய்கிறது.
ஹைப்பர் ஸ்பெக்ட்ரல் இமேஜிங்கின் நோக்கம் ஒரு காட்சியின் படத்தில் இருக்கும் ஒவ்வொரு பிக்சலுக்கான ஸ்பெக்ட்ரத்தையும் சேகரிப்பதாகும். வழக்கமான சிவப்பு-பச்சை-நீலம் அல்லது மல்டி ஸ்பெக்ட்ரல் இமேஜிங்கில் இது சாத்தியமில்லை. படங்களை தெளிவாக எடுக்க இந்த வகையான இமேஜிங் உதவும்.
எடுத்துக்காட்டாக, ஹைப்பர் ஸ்பெக்ட்ரல் இமேஜிங் மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பற்றிய விவரங்களை அளிக்கும். எண்ணெய் கசிவுகள் மற்றும் எரிவாயு கசிவுகளைக் கண்டறிய இது பயன்படுத்தலாம் என்பதால், சுற்றுச்சூழல் துறையில் சாத்தியமான பயன்பாட்டிற்கான உறுதியையும் தொழில்நுட்பம் கொண்டுள்ளது.
விவசாயம், எண்ணெய், எரிவாயு, சுரங்கத் துறைகளில் பயன்படுத்தலாம் என்பதால் பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது என நிறுவனத்தின் அதிகாரிகள் கூறினர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil