நாசாவின் ஆர்ட்டெமிஸ் 1 பணிக்குப் பிறகு அனைவரது கவனமும் நிலவின் மீது திரும்பியது. நிலவு பயணத் திட்டம் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்தது. மனிதர்கள் மீண்டும் நிலவுக்கு செல்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2023-ம் ஆண்டு இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் நிலவு பயணத் திட்டங்களை எதிர்நோக்கி காத்திருக்கின்றன. தேசிய விண்வெளி முகமைகள், தனியார் விண்வெளி நிறுவனங்கள் நிலவு திட்டங்களை செயல்படுத்த உள்ளனர்.
இந்தியாவின் சந்திரயான்-3
சந்திரயான்-3 திட்டம் சந்திரயான் 2 பணியின் தொடர்ச்சியாக செயல்படுத்தப்படுகிறது. இஸ்ரோவின் சந்திரயான் 2 திட்டத்தில் நிலவில் லேண்டர் மற்றும் ரோவரை தரையிறக்க திட்டமிட்டப்பட்டது. ஆனால் இந்த திட்டம் தோல்வியடைந்தது. இந்நிலையில் இதே திட்டத்தை சந்திரயான்-3 மூலம் ரிப்பீட் செய்யப்படுகிறது.
சந்திரயான்-3 திட்டம் இந்த ஆண்டு ஜூன் மாதம் Launch Vehicle Marks ராக்கெட் மூலம் ஏவப்படுகிறது. (எல்விஎம்3, முன்பு ஜிஎஸ்எல்வி 3 என அழைக்கப்பட்டது) . Propulsion module லேண்டர் மற்றும் ரோவர் கட்டமைப்பை சந்திர மேற்பரப்பில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுற்றுப்பாதைக்கு கொண்டு செல்கிறது. சந்திர சுற்றுப்பாதையில் இருந்து பூமியை ஆய்வு செய்ய ஸ்பெக்ட்ரோ-போலரிமெட்ரி ஆஃப் ஹாபிடபிள் பிளானட் எர்த் (SHAPE) பேலோடையும் உடன் சுமந்து செல்கிறது.
ஐஸ்பேஸின் ஹகுடோ ஆர் மிஷன், ரஷித் ரோவர்
ஹகுடோ-ஆர் என்பது ஜப்பானிய விண்வெளி தொழில்நுட்பமான ஐஸ்பேஸால் உருவாக்கப்பட்ட சந்திர லேண்டர் ஆகும்.
இது டிசம்பர் 11, 2022 அன்று கேப் கனாவரல் உள்ள விண்வெளி தளத்தில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முதல் சந்திரன் ரோவரான ரஷித் ரோவர் மற்றும் நாசாவின் ஃபிளாஸ்லைட் செயற்கைகோளுடன் ஏவப்பட்டது.
2022 டிசம்பரில் ஹகுடோ லேண்டர் ஏவப்பட்டாலும், அது 2023, ஏப்ரல் மாதத்தில் தான் நிலவை சென்றடைகிறது. லேண்டர் மெதுவாக, குறைந்த ஆற்றல் கொண்ட பாதையில் செல்வதால் இவ்வளவு நாட்கள் எடுக்கிறது.
நாசாவின் லூனார் ஃபிளாஸ்லைட் ( Lunar Flashlight)
நாசாவின் லூனார் ஃப்ளாஷ்லைட் விண்கலம், ஐஸ்பேஸின் லேண்டர் மற்றும் ரஷித் ரோவரை சுமந்து சென்ற ஸ்பேஸ்எக்ஸ் எம்1 ராக்கெட் திட்டம் மூலம் ஏவப்பட்டது. அதாவது டிசம்பர் மாதம் ஏவப்பட்டது. ஃபிளாஸ்லைட் விண்கலம் சிறிய செயற்கைக்கோள் ஆகும். பெட்டி அளவு தான் இருக்கும். தற்போது சந்திரனை நோக்கி மூன்று மாத பயணத்தில் உள்ளது. இதுவும் விரைவில் நிலவை அடைந்து ஆய்வு செய்ய உள்ளது.
ரஷ்யாவின் லூனா 25 மிஷன்
பல நாட்கள் தாமதத்திற்குப் பிறகு, ரஷ்யாவின் ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி நிறுவனம் அதன் லூனா-25 பயணத்தை ஜூலை 2023 இல் நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. ஃபோர்ப்ஸின் கூற்றுப்படி, லூனா-25 என்பது திட்டமிடப்பட்ட சந்திர லேண்டர் மிஷன் ஆகும், இது 1976 இல் சோவியத் யூனியனின் லூனா 24 பயணத்திற்குப் பிறகு நாட்டின் முதல் பயணமாகும்.
லூனா 25 மிஷன் நிலவின் தென் துருவத்தில் போகஸ்லாவ்ஸ்கி என்ற பள்ளத்தாக்கு பகுதியில் தரையிறங்கி ஆய்வு செய்யும்படி திட்டமிடப்பட்டுள்ளது.
டியர்மூன் (dearMoon)
ஜப்பானிய கோடீஸ்வரர் யுசாகு மேசாவா மற்றும் குழுவினர் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவன ராக்கெட் மூலம் நிலவுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளனர். இந்த திட்டத்தை 2023-ம் ஆண்டு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும் ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, 2023-ம் திட்டத்தை செயல்படுத்தப்படுமா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. விண்கலம் மற்றும் அதன் ராக்கெட்டுகளின் சோதனைகள் காரணமாக கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. இருப்பினும் 2023-ம் ஆண்டு திட்டம் செயல்படுத்தப்பட்டால் நாசாவின் ஆர்ட்டெமிஸ் 2 சந்திர பயண திட்டத்தை முந்தி முறியடிக்கும்.
ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்ஷிப் ராக்கெட் மூலம் நிலவுக்கு அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. விண்கலம் 3 நாட்கள் சந்திரனை சுற்றி வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“