சிறுகோள்கள் சூரியனைச் சுற்றி வரும் பாறைப் பொருள்கள் மற்றும் ஆரம்பகால சூரிய மண்டல உருவாக்கத்தின் எச்சங்கள் ஆகும். சிறிய பாறைகள் முதல் பல நூறு கிலோமீட்டர் விட்டம் கொண்ட பெரிய அளவுகளிலும் இந்த சிறுகோள்கள் இருக்கும்.
அந்த வகையில் தற்போது இரண்டு பெரிய சிறுகோள்கள் பூமியை நோக்கி வருவதை விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இந்த இரண்டு சிறுகோள்களும் 500 முதல் 850 மீட்டர் விட்டம் கொண்டதாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
பூமிக்கு அருகில் வரும் இரண்டு சிறுகோள்கள் 488453 (1994 XD) மற்றும் 2020 DB5 என பெயரிடப்பட்டுள்ளன.
488453 (1994 XD ஜூன் 12 அன்று பூமிக்கு அருகில் வரும் என்றும் 2020 DB5 ஜூன் 15 அன்று பூமியை நெருங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு சிறுகோள்களும் 150 மீட்டருக்கு அதிகமான விட்டத்தை கொண்டுள்ளதால் அபாயகரமான சிறுகோள்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
சிறுகோள் 488453 (1994 XD
சிறுகோள் 488453 (1994 XD) திங்கட்கிழமை பூமியை நெருங்கும் மற்றும் மணிக்கு 77,292 கிலோமீட்டர் வேகத்தில் கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறுகோள், பூமிக்கு 31,62,498 கிலோமீட்டர் தொலைவில் வந்து செல்லும்.
சிறுகோள் (2020 DB5)
இந்த சிறுகோள் பூமிக்கு அருகில் வரும் ஜூன் 15ம் தேதி வரும் என்றும் கிட்டத்தட்ட 43,08,418 கிலோமீட்டர் தொலைவில் கடந்து செல்லும் என்றும் விஞ்ஞானிகள் கூறினர். இந்த சிறுகோள் மணிக்கு 34,272 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.
நாசா தீவிர கண்காணிப்பு
சிறுகோளின் சுற்றுப்பாதை தீர்மானிக்கப்பட்டவுடன், விஞ்ஞானிகள் அதிநவீன கணித மாதிரிகள் மற்றும் சுற்றுப்பாதை கணக்கீடுகளைப் பயன்படுத்தி அதன் எதிர்காலப் பாதையை கணிக்கின்றனர். இந்த கணிப்புகள் பூமியுடன் சாத்தியமான தாக்கங்களை அடையாளம் காண உதவுகின்றன.
தற்போது அறியப்பட்ட சிறுகோள்கள் பூமிக்கு எவ்வித அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்றும் வருங்காலங்களில் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க கண்காணிப்பது மிகவும் முக்கியமானது என்றும் நாசா கூறியது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil