இந்தியா, அமெரிக்கா எனப் பல உலக நாடுகள் விண்வெளியில் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது. விண்வெளியின் பல்வேறு பகுதிகளில் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது. ராக்கெட் மூலம் செயற்கைக்கோள்கள் அனுப்பபட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது. ராக்கெட், செயற்கைக்கோளை சுமந்து விண்ணுக்கு செல்லும். செயற்கைக்கோள் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்ட பிறகு ராக்கெட் மீண்டும் பூமிக்கு வந்துவிடும். இவ்வாறு பல திட்டங்களின் முயற்சிகள் வெற்றி பெறும். சில முயற்சிகள் தோல்வியில் முடியும். பல்வேறு நாடுகள் விண்வெளிக்கு தங்களது செயற்கைகோளை அனுப்பி ஆய்வு செய்து வருகின்றன.
அந்தவகையில், விண்வெளி பயண வழியில் ராக்கெட், செயற்கைக்கோள் கோளாறு, செயலிழப்பு அல்லது ராக்கெட் திரும்ப பெறாமல் இருப்பது போன்ற பல்வேறு காரணங்களால் விண்வெளியில் கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. விண்வெளிக்கு அனுப்பப்படும் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் விண்வெளியில் மிதக்கும் குப்பைகளை அகற்ற அமெரிக்க அரசு புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது.
அமெரிக்க ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் இதற்கான வாக்கெடுப்பு நடத்தி விதிகளை கொண்டு வந்துள்ளது. குறைந்த புவி சுற்றுப்பாதைக்கு அனுப்பபடும் செயற்கைக்கோள்களின் குப்பைகளை 5 ஆண்டுகளுக்குள் அப்புறப்படுத்த வேண்டும் என்று விதிகள் கொண்டு வந்துள்ளது. அதாவது செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்படும் பணிகள் முடிந்ததும் ராக்கெட் உள்பட மற்ற பொருட்கள் பூமிக்கு கொண்டு வரவேண்டும். அங்கேயே விட்டுவிடக் கூடாது எனக் கூறுகிறது. முன்பு இந்த விதி, விண்கலங்கள் 25 ஆண்டுகளுக்குள் பூமிக்கு திரும்ப வேண்டும் என இருந்தது.
கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் தலைவர் ஜெசிகா ரோசன்வொர்செல் கூறுகையில், இந்த புதிய விதி விண்வெளியில் குப்பைகள் தேங்குவதை குறைக்க உதவும். மேலும், விண்வெளியில் சுற்றித்திரியும் பொருட்கள் ஒன்றோடு ஒன்று மோதும் ஆபத்தை குறைக்கும் என்றார்.
1957 முதல் 10,000 செயற்கைக்கோள்கள் அனுப்பபட்ட நிலையில், இதில் பாதிக்கும் மேற்பட்டவை செயல்படவில்லை. செயல்படாதவைகளும் விண்ணில் சுற்றி வந்து குப்பைகளை சேர்க்கிறது என அமெரிக்க தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
செயலிழந்த செயற்கைக்கோள்கள், ராக்கெட் கோர்கள் மற்றும் பிற குப்பைகள் விண்ணில் சுற்றி வருகிறது. விண்வெளி கழிவுகளை உருவாக்கியுள்ளது. இது எதிர்கால விண்வெளி பயணங்களுக்கு சவால்களை உருவாக்குகின்றன என ஆணையம் தெரிவித்தது. கடந்த ஆண்டு இறுதி வரை 4,800க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் சுற்றுப்பாதையில் இயங்குகின்றன. அவற்றில் பெரும்பாலானவை வணிக பயன்பாட்டிற்கான குறைந்த-பூமி சுற்றுப்பாதை செயற்கைக்கோள்களாகும்.
நாசா விண்வெளி குப்பைகள் மற்றும் அதை அகற்றுவது குறித்து ஆய்வு செய்ய பல கல்வி நிறுவன ஆய்வுக்கு நிதியளித்துள்ளது. விண்வெளி குப்பைகளை அகற்ற நவீன தொழில்நுட்ப வளர்ச்சியையும் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.