நேஷனல் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (நாசா) வின் கியூரியாசிட்டி ரோவர் செவ்வாய் கிரகத்தின் ஒரு பகுதியில் பழங்கால ஏரி ஒன்று இருந்ததற்கான புதிய ஆதாரத்தை கண்டுபிடித்துள்ளது. இது உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ரோவர் செவ்வாய் கிரகத்தின் "சல்பேட்- பேரிங் யூனிட்" என்று அழைக்கப்படும் ஒரு பகுதி வழியாக பயணித்து இதை கண்டுபிடித்துள்ளது. மேலும் "இது வெறும் நீர் துளிகள் இருப்பதற்கான" ஆதாரங்களைக் காண்பிக்கும் என்று நினைத்தார்கள். ஏனெனில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உருவான பாறைகள் தற்போது காய்ந்து வருகின்றன. ஆனால் தற்போதைய கண்டுபிடிப்பு அவர்களுக்கு பெரிய ஆச்சரியம் அளித்துள்ளது. மேலும் தண்ணீர் குறித்து விரிவான ஆய்வுகளை முன்னெடுக்க உதவியாக வந்துள்ளது.
நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தின் கியூரியாசிட்டி ரோவர் திட்ட விஞ்ஞானி அஷ்வின் வாசவாடா கூறுகையில், "இது செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதற்கான சிறந்த ஆதாரம். கியூரியாசிட்டி ரோவர் திட்டப் பயணத்தில் நீர் மற்றும் அலைகள் தொடர்பாக எங்களுக்கு கிடைத்த சிறந்த சான்று இதுவாகும். ரோவர் ஆயிரக்கணக்கான அடி ஏரி படிவுகளின் வழியாக பயணித்தது. ஆனால் இது போன்ற ஆதாரங்களை நாங்கள் பார்க்கவில்லை. அந்த இடம் வறண்டு இருக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அங்கு தான் நாங்கள் நீர் இருப்பதற்கான ஆதாரத்தை கண்டோம்" என்று கூறினார்.
2014-ம் ஆண்டு முதல், கியூரியாசிட்டி ரோவர் செவ்வாய் கிரகத்தின் மவுண்ட் ஷார்ப் மலையின் அடிவாரத்தில் பயணித்து வருகிறது. இது 3 மைல் உயரமான (5 கிலோமீட்டர் உயரம்) மலையாகும். இது ஒரு காலத்தில் ஏரிகள் மற்றும் நீரோடைகளால் ஆனது. சிவப்பு கிரகத்தில் ஏதேனும் நுண்ணுயிர் உருவாகியிருந்தால் (Microbial life) அதன் வளமான வளர்ச்சி சூழலுக்கு இந்த பகுதி நன்றாக இருந்திருக்கும் என்று நாசா கூறியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“