இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான (இஸ்ரோ) சந்திரயான் -3 திட்டத்திற்கு தயாராகி வருகிறது. நிலவு குறித்த ஆய்வுக்காக சந்திரயான் பணி திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமல்ல உலக நாடுகளும் இத்திட்டத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இஸ்ரோ இந்தாண்டு இத்திட்டத்தை செயல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. சந்திரயான்-2 தோல்வியையடுத்து சந்திரயான்-3 திட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இஸ்ரோ தோல்வியிலிருந்து தவறுகளை கற்றுக் கொண்டதாக கூறியுள்ளது.
சந்திரயான்-3 என்பது சந்திரயான்-2 பயணத்தின் தொடர்ச்சியாகும். சந்திர மேற்பரப்பில் விண்கலம் பாதுகாப்பாக தரையிறங்குதல், லேண்டர்-ரோவர் தரையிறங்குதல் மற்றும் சந்திர மண்டலத்தில் இறங்கி ஆய்வு செய்தல் ஆகியவற்றை குறித்து கவனமாக பணி மேற்கொண்டு வருகிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இந்தியாவின் மிக சக்திவாய்ந்த ராக்கெட்டான LVM-III மூலம் சந்திரயான்-3 விண்கலம் ஏவப்பட உள்ளது.
சந்திராயன்-3 நிலவில் என்ன செய்யும்?
சந்திரனின் அமைப்புகள் மற்றும் பல அம்சங்களை நன்கு புரிந்துகொள்வதை இந்த பணி நோக்கமாகக் கொண்டுள்ளது. இஸ்ரோ இந்தப் பணியில் 3 முக்கிய நோக்கங்களை வகுத்துள்ளது. சந்திர மேற்பரப்பில் பாதுகாப்பான மற்றும் மென்மையான தரையிறக்கத்தை நிரூபித்தல், சந்திரனில் ரோவரின் ரோவிங் திறன்களை நிரூபித்தல் மற்றும் தரையிறங்கும் இடத்திலேயே அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ளுதல் ஆகியவை ஆகும்.
சந்திர நில அதிர்வு நடவடிக்கைக்கான கருவி (ஐஎல்எஸ்ஏ) தரையிறங்கும் இடத்தைச் சுற்றியுள்ள நில அதிர்வை அளவிடும் என்று இஸ்ரோ கூறியுள்ளது.
இஸ்ரோ கூறுகையில், சந்திரயான்-3, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட லேண்டர் மாட்யூல் (எல்எம்), ப்ராபல்ஷன் மாட்யூல் (பிஎம்) மற்றும் ரோவர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது, து கிரகங்களுக்கு இடையேயான பயணங்களுக்குத் தேவையான புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி நிரூபிக்கும் நோக்கத்துடன் உள்ளது. சந்திரனின் குறிப்பிட்ட நிலப்பரப்பில் லேண்டர் மென்மையாகவும், பாதுகாப்பான முறையில் தரையிறங்கும் வசதி கொண்டுள்ளது. லேண்டர் இறங்கிய பின் ரோவரை தரையிறக்கி ஆய்வு மேற்கொள்ளும். லேண்டர் மற்றும் ரோவர் சந்திர மேற்பரப்பில் ஆய்வு மேற்கொள்ள பேலோடுகளை சுமந்து செல்லும் எனத் தெரிவித்தள்ளது.
சந்திரயான் 2
2018 இல் சந்திரயான் 2 பணி மேற்கொள்ளப்பட்டது. விண்கலம் வெற்றிகரமாக சந்திரனுக்கு அனுப்பபட்ட நிலையில் ரோவர் தரையிறங்கும் போது சிக்னல் துண்டிக்கப்பட்டு விண்கலம் செயல் இழந்ததாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இஸ்ரோ சந்திரயான் -3 திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்துள்ளது. இந்த பணியானது மேற்பரப்பில் தரையிறங்க முயற்சிக்கும்போது நிலப்பரப்பு நிலைமைகளை சிறப்பாக வழிநடத்தவும் மற்றும் ரோவரை பாதுகாப்பான முறையில் தரையிறக்கும் படியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/