இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் ஆகஸ்ட் 23-ம் தேதி வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கப்பட்டது. இதன் மூலம் நிலவில் தரையிறங்கிய 4-வது நாடு, தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. விக்ரம் லேண்டர் தரையிறங்கியப் பின் அதிலிருந்து பிரக்யான் ரோவர் வெளிவந்து தற்போது நிலவின் மேற்பரப்பில் நகர்ந்து சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
அதேபோல் சீனாவின் யுடு 2 (Yutu 2) ரோவரும் நிலவில் ஆய்வு செய்து வருகிறது. இந்த இரண்டு ரோவரும் நிலவில் சந்திக்குமா? இவர்களுக்கு உள்ள இடையில் உள்ள தூரம் எவ்வளவு? என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
சீனாவின் சாங்'இ-4 (Chang'e-4) விண்கலம் ஜனவரி 3-ம் தேதி 2019 அன்று நிலவின் தென் துருவ-ஐட்கின் படுகையில் உள்ள வான் கர்மன் பள்ளத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இது சந்திரனின் தொலைதூரத்தில் கட்டுப்படுத்தப்பட்ட தரையிறக்கம் செய்த முதல் விண்கலம் ஆகும். நாசா கூற்றுப்படி, இது 45.4561 S அட்சரேகை, 177.5885 E தீர்க்கரேகையில் தரையிறங்கியது.
விக்ரம் லேண்டருக்கான சந்திரயான் 3 திட்டமிடப்பட்ட தரையிறங்கும் தளம் 69.367621 எஸ், 32.348126 இ என்றும்அது திட்டமிட்ட பகுதிக்குள் நன்றாக தரையிறங்கியதாகவும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) கூறியது.
இப்போது ஹைதராபாத்தில் XDLINX ஆய்வகங்களில் பணிபுரியும் முன்னாள் ISRO NASA விஞ்ஞானி சையத் அகமது கூறுகையில், ரோவர்களுக்கு இடையேயான தூரம் தோராயமாக 1,948 கி.மீ இருக்கும் என்று கூறினார்.
மற்றொரு விண்வெளி நிபுணரான சண்முக சுப்ரமணியன், சந்திரனில் இருக்கும் 2 ரோவர்களுக்கு இடையேயான தூரம் தோராயமாக 1,891 கிமீ (± 5 கிமீ மாறுபாடுகளுடன்) இருப்பதாகக் கணக்கிடுகிறார். நிலவில் 2 ரோவர்கள் இருப்பது இதுவே முதல் முறையாகும் என்று கூறினார்.
பிரக்யான் யுடு 2-ஐ சந்திக்குமா?
இரண்டு ரோவர்களும் சந்திக்க வாய்ப்பே இல்லை. பிரக்யான் ரோவர் சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் ஆய்வு செய்ய வைக்கப்பட்டுள்ள நிலையில், அது அதன் லேண்டரான விக்ரமிலிருந்து 500 மீட்டர் வரை மட்டுமே நகர்ந்து செல்லும் திறன் கொண்டது. மறுபுறம், சீனாவின் ரோவர் அதன் ஆரம்ப தரையிறங்கும் தளத்திற்கு ஒப்பீட்டளவில் நெருக்கமாக உள்ளது.
சீனாவின் ரோவரைப் போலல்லாமல், பிரக்யான் ரோவர் பணி காலம் ஒரு சந்திர நாள் (சுமார் 14 பூமி நாட்கள்) மட்டுமே ஆகும். சீனாவின் யுடு 2 ரோவர் 2019 தொடக்கத்தில் இருந்து செயல்பட்டு வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”