Rameshbabu Praggnanandha Tamil News: செஸ் விளையாட்டில் சாதனைகளை நிகழ்த்திய பல கிராண்ட் மாஸ்டர்களை நாம் கடந்து வந்திருப்போம். ஆனால், இந்த இளம் கிராண்ட் மாஸ்டர் தனது சிறப்பான நகர்வுகளால் உலக செஸ் அரங்கில் மீண்டும் ஒருமுறை கவனம் ஈர்த்துள்ளார். அவர்தான் 16 வயதுடைய இந்திய கிராண்ட்மாஸ்டர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா.
இளம் கிராண்ட்மாஸ்டர்
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் ஆகஸ்ட் 10, 2005 அன்று பிறந்த பிரக்ஞானந்தாவுக்கு செஸ் விளையாட்டு என்றால் கொள்ளை பிரியம். இதனால் தான் என்னவோ அவர் தனது பயிற்சியை சிறுவயது முதலே தொடங்கி இருக்கிறார். 5 வயதில் போட்டிகளில் களமிறங்கி, தனது ஏழாவது வயதிலேயே உலக சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வசப்படுத்தியுள்ளார். அபிமன்யு மிஸ்ரா, செர்ஜி கர்ஜாகின், குகேஷ் டி, ஜாவோகிர் சிந்தாரோவ் ஆகிய இளம் செஸ் வீரர்கள் கொண்ட பட்டியலில் தனது பெயரையும் 5வது நபராக பதிவு செய்துள்ளார்.
2013-ம் ஆண்டு நடந்த 8 வயதுக்குட்பட்டோருக்கான உலக இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில்தான் பிரக்ஞானந்தா தனது முதல் சாம்பியன் பட்டத்தை வென்றார். அவருக்கு 10 வயது (10 மாதங்கள் மற்றும் 19 நாட்களில்) இருந்தபோது 2016ம் ஆண்டு இளைய சர்வதேச மாஸ்டர் பட்டத்தை வென்றெடுத்தார். அவருக்கு 12 வயது (10 மாதங்கள் மற்றும் 13 நாட்களில்) இருந்த போது, அவர் ரஷ்யாவின் செஸ் நட்சத்திரம் செர்ஜி கர்ஜாகினுக்குப் பிறகு இளைய கிராண்ட்மாஸ்டர் என்ற பட்டத்தை வென்றார்.
குருவிடம் இருந்து வாழ்த்து
சதுரங்க ஆட்டத்தில் இப்படி கட்டம் கட்டி ஆடிவந்த பிரக்ஞானந்தாவின் 'குரு' வேறும் யாரும் இல்லை. ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவரும், இந்தியாவின் முதல் கிராண்ட்மாஸ்டருமான விஸ்வநாதன் ஆனந்த் தான். பிரக்ஞானந்தா இளைய கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்ற பிறகு விஸ்வநாதன் ஆனந்த், அந்த இளம் வீரருக்கு தனது வாழ்த்துக்களை ட்வீட் மூலம் தெரிவித்து இருந்தார்.
Welcome to the club & congrats Praggnanandhaa!! See u soon in chennai?
— Viswanathan Anand (@vishy64theking) June 24, 2018
சில நாட்களுக்கு பிறகு, பிரக்ஞானந்தா தனது குருவை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து உரையாடி மகிழ்ந்தார்.
நம்பர் 1 வீரரை தட்டி தூக்கிய பிரக்
குருவின் ஆசியோடும், குடும்பத்தினரின் அன்பிலும் திளைத்து தொடர்ந்து போட்டிகளில் கலந்து கொண்டு வந்த பிரக்ஞானந்தா, தற்போது நடைபெற்று வரும் ஆன்லைன் ரேபிட் செஸ் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்து அசத்தியுள்ளார். இதன்மூலம், உலக செஸ் அரங்கை மீண்டும் ஒருமுறை தன்பக்கம் கவனம் ஈர்த்து, ஒரு பிரமிப்பான சாதனையை படைத்துள்ளார்.
ஏர்திங்க்ஸ் மாஸ்டர்ஸ் ரபிட் செஸ் போட்டி தற்போது ஆன்லைனில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்ட பிரக்ஞானந்தா வெற்றி, தோல்வி என துவண்டு போயிருந்தார். இறுதியில் ஒரு வெற்றி - 4 தோல்விகள் - இரண்டு ட்ரா என்கிற நிலையில் இருந்தார். அவர் கடைசியாக விளையாடிய 3 ஆட்டங்களிலும் அவருக்கு தோல்வியே மிஞ்சி இருந்தது.
இப்போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான கார்ல்சனும் கலந்து கொண்டிருந்த நிலையில், அவர் 3 ஆட்டங்களில் வெற்றியை ருசித்திருந்தார். அவரது 8வது சுற்று ஆட்டத்தில் தான் பிரக்ஞானந்தாவை சந்தித்தார். பிரக்ஞானந்தாவும் தனக்கு முன் இருந்த சவாலை தைரியமாக சமாளிக்க தயாரானார்.
போட்டி தொடங்கியது. ஆனால், பிரக்ஞானந்தா முகத்தில் துளி கூட பரபரப்பு ஒட்டிக்கொள்ளவில்லை. இந்த இடத்தில் 'அவனுக்கு பயம் இல்லை' என்கிற பொல்லாதவன் பட டையலாக் சேர்த்துக்கொள்ளலாம். அந்த அளவிற்கு மிக சாதுவாக தனது நகர்வை தொடர்ந்திருந்தார் பிரக்ஞானந்தா.
தனக்கு கருப்பு நிற காய்கள் வழங்கப்பட்டு இருந்தாலும், அதைப்பற்றியெல்லாம் கவலை கொள்ளாத அவர், மிகச்சிறப்பான நகர்வுகளை, மிகச் சரியான நேரத்தில் நகர்த்தி முப்பத்தி ஒன்பது நகர்த்தல்களில் வெற்றியை ருசித்தார். இதன்மூலம், உலகின் நம்பர் 1 வீரரை வீழ்த்திய முதல் இந்திய இளம் வீரர் என்கிற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றார். அவருக்கு இந்தியாவில் உள்ள பல்வேறு துறையைச் சேர்ந்த பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் தங்கள் சமூக வலைதள பக்கங்கள் வாயிலாக வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
கார்ல்சனுக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு அவரது திட்டங்களைப் பற்றி அவரிடம் கேட்கப்பட்டபோது, "நான் படுக்கைக்குச் செல்லப் போகிறேன்" என்று கூறி புன்னகைத்துள்ளார் பிரக்ஞானந்தா.
ஆன்லைன் ரபிட் செஸ் போட்டியில் 16 வீரர்கள் பங்கேற்றுள்ள நிலையில், ஒவ்வொரு வெற்றிக்கும் மூன்று புள்ளிகளும் டிராவுக்கு ஒரு புள்ளியும் வழங்கப்படுகிறது. 8 சுற்றுகளின் முடிவில் 8 புள்ளிகளுடன் பிரக்ஞானந்தா 12ஆம் இடத்தில் உள்ளார். கார்ல்சன் 13 புள்ளிகளுடன் ஆறாம் இடத்தில் உள்ளார்.
Praggnanandhaa beats World Champion Magnus Carlsen with the black pieces at the Airthings Masters 2022. It was an online game with a time control of 15+10.
Until now the only Indians to beat Magnus in a tournament game have been Anand and P. Harikrishna. Pragg now joins the list! pic.twitter.com/ZX1emeY9v6— ChessBase India (@ChessbaseIndia) February 20, 2022
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.