Indian Cricket TAMIL NEWS: சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்திய கிரிக்கெட் அணி தனி முத்திரையை பதித்துள்ளது. 3 ஃபார்மெட்டுகளிலும் ஆதிக்கம் செலுத்தி வரும் நாட்டின் தேசிய அணி எப்போதும் வெற்றிகரமான கிரிக்கெட் அணிகளில் ஒன்றாக உள்ளது. மேலும் எண்ணற்ற சாதனைகளையும், பதிவுகளையும் கொண்ட பெருமையும் பெற்ற அணியாக வலம் வருகிறது.
இந்திய கிரிக்கெட்டில் பெரும் திருப்புமுனை கடந்த 1983 ஆம் ஆண்டில் நடந்தது. அப்போது இந்திய அணியை வழிநடத்திய ஜாம்பவான் வீரர் கபில்தேவ், அணி உலக கோப்பையை முத்தமிட உதவினார். இது அரும்பெரும் சாதனையாக பார்க்கப்படும் நிலையில், அவருக்கு பிறகு வந்த சில சிறந்த கேப்டன்களும் இந்திய அணியை உலக கோப்பை முதல் சர்வதேச அளவிலான கோப்பைகளை தூக்கிப்பிடிக்க உதவினர்.
முகமது அசாருதீன், சவுரவ் கங்குலி, எம்எஸ் தோனி, விராட் கோலி போன்ற சக்திவாய்ந்த கேப்டன்கள் இந்திய அணி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் எதிரணிகள் மீது தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் அணியாக இருந்த வரலாற்றை எழுதினர். மேலும் சொந்த மண்ணிலும், அயல்நாட்டு மண்ணில் தொடர்களை கைப்பற்றி பிசிசிஐ-யின் அறையில் கோப்பைகளை அலங்கரித்த பெருமையையும் பெற்றனர்.
இவர்கள் போன்ற பல சிறந்த கேப்டன்களைத் தவிர, அணியில் இருந்த சில மூத்த வீரர்கள் அவ்வப்போது கேப்டனாக செயல்பட்டு இந்திய அணியை சர்வதேச அரங்கில் தலைநிமிரச் செய்துள்ளனர். அப்படியான வீரர்களில் ஒருவராக முன்னாள் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா இருக்கிறார். இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 2005 ஆம் ஆண்டில் அறிமுகமான இவர், 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
சுமார் 15 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் வாழ்க்கையில் ரெய்னா, 226 ஒருநாள், 78 டி-20, 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். மொத்தமாக 7 சதங்களையும், 48 அரைசதங்களையும் விளாசி, 6000-கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். தவிர, ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 205 போட்டிகளில் விளையாடி 5000-க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் பகுதி நேர கேப்டனாக இருந்த ரெய்னா அணியை சிறப்பாக வழிநடத்தி செயல்பட்டார். அவரது தலைமையிலான இந்திய அணி 12 ஒருநாள் போட்டிகளில் 6 போட்டிகளிலும் 3 டி20 போட்டிகளில் மூன்றையும் வென்று அசத்தியது. மேலும், ரெய்னா அணியின் கேப்டனாக செயல்பட்ட காலகட்டத்தில், பல இந்திய கிரிக்கெட் வீரர்கள் சர்வதேச அளவில் அறிமுகமாகியுள்ளனர். அவர்களில் முக்கிய இரண்டு வீரர்களை இங்கு பார்க்கலாம்.
அமித் மிஸ்ரா
இந்திய அணியில் கலக்கிய சுழல் மன்னர்களில் ஒருவரான அமித் மிஸ்ரா, தற்போது சுழல் வித்தை காட்டி வரும் ரவிச்சந்திர அஸ்வின், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆகிய மூன்று வீரர்களும், கடந்த 2010 ஆம் ஆண்டில் ஜிம்பாப்வேக்கு எதிராக நடந்த டி20 தொடரில் அறிமுகமாகினர். அந்த தொடருக்கான இந்திய அணியை சுரேஷ் ரெய்னா வழிநடத்தினார்.
அமித் மிஸ்ரா டி20 ஃபார்மெட்டில் மிகச்சிறந்த பந்துவீச்சாளர். அவர் ஒரு மாஸ்டர் என்றே கூறலாம். மற்றும் ஐபிஎல்லில் சுழல் ஜாலம் செய்யும் சிறந்த பந்துவீச்சாளர்களில் அவரும் ஒருவர். அவருக்கு இருந்த மிகுதியான பிரச்சினையால் சர்வதேச அளவில் பல ஆட்டங்களில் தொடர்ந்து அவரால் பங்கேற்க முடியவில்லை. இருப்பினும், 22 டெஸ்ட் போட்டிகளில் 76 விக்கெட்டுகளையும், 36 ஒருநாள் போட்டிகளில் 64 விக்கெட்டுகளையும், 10 டி-20களில் 16 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். மேலும், 154 ஐபிஎல் போட்டிகளில் 166 விக்கெட்டுகளையும் சாய்த்து அசத்தியுள்ளார்.
விராட் கோலி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக விராட் கோலி 2010 ஆம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக சுரேஷ் ரெய்னாவின் தலைமையிலான இந்திய அணியில் தான் அறிமுகமானார் என்பது பல ரசிகர்களுக்குத் தெரியாது. இந்த தலைமுறையின் சிறந்த கிரிக்கெட் வீரராக கருதப்படும் கோலி, சர்வதேச கிரிக்கெட் ஏகப்பட்ட சாதனைகளை படைத்துள்ளார். மேலும், பல வீரர்கள் படைத்த சாதனையையும் முறியடித்துள்ளார். தவிர, ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, அவர் அனைத்து ஃபார்மெட்டுகளிலும் இந்தியாவின் கோ-டு மேட்ச்-வின்னராக இருந்தார்.
ஜூன் 12, 2010 அன்று இந்திய டி-20 அணியில் இணைந்த அவர் ஜிம்பாவேக்கு எதிரான ஆட்டத்தில் 5வது வீரராகக் களமாடி 26 ரன்களை எடுத்தார். அதே ஆண்டில் நடந்த டி20 உலகக் கோப்பையிலும், 2014 மற்றும் 2016 டி20 உலகக் கோப்பையிலும் இந்திய அணியில் அதிக ரன்களை குவித்த வீரராக அவர் வலம் வந்தார்.
கோலி தற்போதுவரை இந்திய அணிக்காக 102 டெஸ்ட், 260 ஒருநாள் மற்றும் 99 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி, முறையே 8074, 12344 மற்றும் 3308 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், 70 சர்வதேச சதங்களை விளாசியுள்ள அவர் மூன்று வடிவங்களிலும் சராசரியாக 50 க்கு மேல் பெற்றுள்ளார். சமீபத்திய காலமாக தற்காலிக ஃபார்ம் அவுட்டில் இருக்கும் கிங் கோலி இப்போது இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள ஆர்வமுள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருந்து வருகிறார்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.