Indian Cricket Team | U19 ICC World Cup: தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக்கோப்பை கிரிக்கெட் தொடரில், நேற்று முன்தினம் நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில், இந்தியா – தென்ஆப்பிரக்க அணிகள் மோதியது. இதில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற 2-வது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் ஆஸ்திரேலியா அணிகள் மோதியது. இந்த வெற்றியின் மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள ஆஸ்திரேலியா அணி, நாளை மறுநாள் (பிப்ரவரி 11) பினோனி வில்லேமோர் பார்க் மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணியுடன் மோத உள்ளது.
இளைஞர் உலககோப்பை கிரிக்கெட் வரலாறு
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சார்பில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலககோப்பை கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதன் முதல் தொடர் 1988-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. டெஸ்ட் அந்தஸ்து பெற்ற, இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து மற்றும் ஐசிசியின் ஒரு அணி என மொத்தம் 8 அணிக்ள இந்த தொடரில் பங்கேற்றது.
இந்த போட்டியில் தமிழகத்தை சேர்ந்த மயில்வாகனன் செந்தில்நாதன் தலைமையில் களமிறங்கிய இந்திய அணி 7 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி மட்டுமே பெற்று அரையிறுதி சுற்று வாய்ப்பை இழந்தது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை சந்தித்த ஆ்திரேலியா அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐசிசியின் 19 வயதுக்குட்பட்டோருக்கான முதல் உலககோப்பையை வென்றது.
அதனைத் தொடர்ந்து, 10 வருடங்கள் இடைவெளி ஏற்பட்ட நிலையில், மீண்டும் 1988-ம் ஆண்டு இளைஞர் உலககோப்பை தொடர் நடத்தப்பட்டது. இந்த முறை 11 அணிகள் போட்டியிட்ட இந்த தொடரில், இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த போட்டியில் அமித் பக்கிஸ் தலைமையில் களமிறங்கிய இந்திய அணி அரையிறுதி சுற்றுடன் வெளியேறியது.
இந்தியா வென்ற முதல் சாம்பியன் பட்டம் – முகமது கைஃப்
1998-ம் ஆண்டு முதல் 2 ஆண்டுக்கு ஒருமுறை இளைஞர் உலககோப்பை தொடர் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி 2000-ம் ஆண்டு, இலங்கையில் நடைபெற்ற முகமது கைஃப் தலைமையில் இந்திய அணி களமிறங்கியது. இதில் லீக் சுற்றில் இலங்கை, இங்கிலாந்து, நேபாளம் ஆகிய அணிகளை வீழ்த்தி தொடர் வெற்றி கண்ட இந்திய அணி, வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளை வீழ்த்தியது.
இதில் நெதர்லாந்து அணிக்கு எதிராக ஆட்டம் மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியா அணியை 170 ரன்கள் வித்தியசத்தில் வீழ்த்தி இந்திய இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதேபோல் 2-வது அரையிறுதியில், பாகிஸ்தான் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
2000-ம் ஜனவரி 28-ந் தேதி கொழும்பு மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 178 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஜோகன் முபாரக் 58 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் ஸ்ரீவர்த்தவா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
அடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 40.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய அணி தரப்பில் ஆர்.எஸ்.ரிக்கி 8 போட்டிகளில் விளையாடி 340 ரன்கள் எடுத்திருந்தார். யுவராஜ் சிங் 8 போட்டிகளில் விளையாடி 203 ரன்கள் எடுத்ததுடன், 12 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆல்ரவுண்டராக அசத்தியிருந்தார்.
2006 இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் – ரவிகாந்த் சுக்லா
2002-ம் ஆண்டு நியூசிலாந்தில் நடந்த தொடரில், தென்ஆப்பிரிக்க அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. அடுத்து 2004-ம் ஆண்டு வங்கதேசத்தில் நடந்த தொடரில், வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய பாகிஸ்தான் அணி முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. 2006-ம் ஆண்டு மீண்டும இலங்கையில் நடைபெற்ற உலககோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 109 ரன்களில் சுருண்டது. இந்திய அணி தரப்பில் பியூஷ் சாவ்லா 4 விக்கெட்டுகள், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர். அதன்பிறகு 110 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி வெறும் 71 ரன்களில் சுருண்டது. பந்துவீச்சில் அசத்திய பியூஷ் சாவ்லா பேட்டிங்கில் 25 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். இந்த போட்டியில் இந்தியர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன் இதுதான்.
அதே சமயம் இந்த தொடரில் இந்திய அணியின் புஜாரா, 349 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமை பெற்றார். இந்திய அணியின் இந்த தோல்வி பெரும் ஏமாற்றத்தை அளித்த நிலையில், பாகிஸ்தான் தொடர்ந்து 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது.
2008- மலேசிய உலககோப்பை – விராட் கோலி
2008-ம் ஆண்டு மலோசியாவில் நடைபெற்ற இளைஞர் உலககோப்பை தொடரில் விராட் கோலி தலைமையில் களமிறங்கிய இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, பப்புவா நியூ கினியா உள்ளிட்ட அணிகளை வீழ்த்தியது. அதன்பிறகு அரையிறுதியில், நியூசிலாந்து அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி இறுதிப்போட்டியில் தென்ஆப்பிரிக்க அணியை சந்தித்தது.
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக டான்மை ஸ்ரீனிவாஸ்தா 46 ரன்கள் எடுத்தார். அடுத்து 160 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென்ஆப்பிரிக்க அணி 103 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில், மறை குறுக்கீடு காரணமாக டக்வெர்த்த லூயிஸ் விதிப்படி இந்தியா 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த தொடரில் விராட்கோலி 235 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் 3-வது இடம் பிடித்தார். டன்மைன் ஸ்ரீனிவாஸ்தா 262 ரன்கள் குவித்து முதலிடம் பிடித்தார். ரவீந்திர ஜடேஜா 10 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார்.
2012 – ஆஸ்திரேலியா உலககோப்பை – உன்முகுந்த் சந்த்
2010-ம் ஆண்டு நியூசிலாந்தில் நடைபெற்ற உலககோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், 2012 –ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் உலககோப்பை தொடர் நடத்தப்பட்டது. இந்த தொடரில் உன்முகுந்த் சந்த் தலைமையில் களமிறங்கிய இந்திய அணி லீக் சுற்றில் ஜிம்பாப்வே, பப்புவா நியூ கினியா அணிகளை வீழ்த்திய நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோல்வியை தழுவியது.
அரையிறுதியில் நியூசிலாந்து அணியை 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வந்தித்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமறிங்கிய ஆஸ்திரேலியா அணி 225 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் சந்தீப் சர்மா 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
தொடர்ந்து 226 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 97 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தாலும், 5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் உன்முகுந்த் சந்த் – சமித் படேல் ஜோடி அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தது. சதமடித்த சந்த் 111 ரன்களுடனும், சமித் பட்டேல் 62 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதன் மூலம் இந்திய அணி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
2018 – நியூசிலாந்து உலககோப்பை – ப்ரித்வி ஷா
2014-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீகரத்தில் நடந்த உலககோப்பை தொடரில், பாகிஸ்தானை வீழ்த்தி தென்ஆப்பிரிக்க அணி சாம்பியன் பட்டம் வென்றது, 2016-ம் ஆண்டு வங்கதேசத்தில் நடந்த உலககோப்பை தொடரில் இஷான் கிஷன் தலைமையில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து.
2018-ம் ஆண்டு நியூசிலாந்தில் நடைபெற்ற உலககோப்பை தொடரில் ப்ரித்வி ஷா தலைமையில் களமிறங்கிய இந்திய அணி இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை சந்தித்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி 216 ரன்கள் எடுத்தது. அடுத்து 2017 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தொடக்க வீரராக களமிறங்கிய மன்ஜோத் கல்ரா சதமடித்து அசத்திய நிலையில், ஹார்விக் தேசாய் 47 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்த தொடரில் 372 ரன்கள் குவித்து சுப்மான் கில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
2022- வெஸ்ட் இண்டீஸ் உலககோப்பை – யாஷ் துல்
2020-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற உலககோப்பை கிரிக்கெட் தொடரில், பிரியம் கர்க் தலைமையில் களமிறங்கிய இந்திய அணி இறுதிப்போட்டியில் வங்கதேச அணியிடம் டக்வெர்த்த லூயிஸ் விதிமுறையின் கீழ் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதன்பிறகு 2022-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் உலககோப்பை யாஷ் துல் தலைமையில் களமிறங்கிய இந்திய அணி இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை சந்தித்து.
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 189 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் ராஜ் பவா 5 விக்கெட்டுகளும், ரவிக்குமார் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த தொடரில் இந்திய அணியின் ரகுவன்ஷி 278 ரன்களும், வி.கே.ஒட்டவால் 12 விக்கெட்டுகளும் எடுத்திருந்தனர்.
2024 – தென்ஆப்பிரிக்க உலககோப்பை – உதய் ஷரன்
தற்போது தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் உலககோப்பை தொடரில் உதய் ஷரன் தலைமையில் களமறிங்கியுள்ள இந்திய அணி அரையிறுதியில் தென்ஆப்பிரிக்க அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதேபோல் அரையிறுதியில் பாகிஸ்தான் அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா அணியும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.
நாளை மறுநாள் பொனோனி வில்லேமூர் பார்க் மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா – இந்தியா அணிகள் மோதுகின்றன. யு-19 உலககோப்பை தொடரில் ஏற்கனவே 2 முறை ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு வெற்றி பெற்றுள்ள இந்திய அணி இந்த முறையும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து 6-வது முறையாக கோப்பை வெல்லும் என்பதே இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.