50 டெஸ்ட்களில் 275 விக்கெட் : அஸ்வின் புதிய சாதனை!

50 டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனையை அஸ்வின் படைத்திருக்கிறார். அதிவேகமாக 250 விக்கெட்டுகள் வீழ்த்தியவரும் அஸ்வினே!

50 டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற புதிய சாதனையை தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்திருக்கிறார்.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி காலே கிரிக்கெட் மைதானத்தில் இன்று (ஜூலை 26) தொடங்கியது. இந்தப் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்றதன் மூலமாக தமிழக வீரர் அஸ்வின் தனது 50-வது டெஸ்டில் ஆடுகிறார்.

கடந்த 2011-ம் ஆண்டு மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக டெல்லியில் தனது டெஸ்ட் கிரிக்கெட் அரங்கேற்றத்தை ஆரம்பித்த அஸ்வின், 6 ஆண்டுகளில் இந்த மைல்கல்லை எட்டியிருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டிலும், இந்திய கிரிக்கெட்டிலும் ஒரு வீரர் 50 டெஸ்ட்களில் விளையாடுவது பெரிய சாதனையாக தோன்றுவதில்லைதான். ஆனால் இந்த 50 டெஸ்ட்களில் விக்கெட் வேட்டையில் அஸ்வின் நிகழ்த்தியிருப்பதுதான் அபார சாதனை!

இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 275 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார் அஸ்வின். சர்வதேச அளவில் முதல் 50 போட்டிகளில் இவ்வளவு விக்கெட்டுகளை எந்த வீரரும் வீழ்த்தியதில்லை. ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஜாம்பவான் டென்னிஸ் லில்லி தனது முதல் 50 போட்டிகளில் 262 விக்கெட்டுகள் எடுத்திருந்ததே இதுநாள் வரை சாதனையாக இருந்தது. அந்த சாதனையை அஸ்வின் 50-வது போட்டியில் களம் இறங்கியதுமே முறியடித்தார்.

ஏற்கனவே அதிவேகமாக 250 விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற சாதனையை தனது 45 டெஸ்ட் போட்டியில் அஸ்வின் படைத்தது குறிப்பிடத்தக்கது. அந்த சாதனையும் அதற்கு முன்புவரை டென்னிஸ் லில்லியிடம்தான் இருந்தது.

விரைவில் அதிவேகமாக 300 விக்கெட்டுகளை கடந்த வீரர் என்கிற சாதனையை படைக்கும் வாய்ப்பு, 30 வயதான அஸ்வினுக்கு இருக்கிறது. தற்போது இந்த சாதனையையும் டென்னிஸ் லில்லியே ( 56 டெஸ்ட்களில் 300 விக்கெட்கள்) வைத்திருக்கிறார்.

இலங்கையில் நடைபெறும் 3 டெஸ்ட்களில் 25 விக்கெட்டுகளை வீழ்த்தினாலோ, அல்லது மேலும் 2 டெஸ்ட்களை அவகாசமாக எடுத்துக்கொண்டு 300 விக்கெட் இலக்கை அஸ்வின் எட்டினாலோ அந்த புதிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆகிவிடுவார்.

இலங்கையிலேயே அந்த சாதனை அரங்கேறுகிறதா? என்று பார்க்கலாம்.

×Close
×Close