நான்கு பந்தில் 92 ரன்கள் தந்த பவுலர்.... 10 ஆண்டுகள் தடை!

0.4 ஓவரிலேயே 89 ரன்கள் இலக்கு கொண்ட ஆட்டம் முடிவுக்கு வந்தது.....

ஒரு விசித்திரமான சம்பவம் வங்கதேச கிரிக்கெட் போட்டியில் அரங்கேறியிருக்கிறது. கடந்த மாதம், டாக்கா 2-வது டிவிஷன் லீக் கிரிக்கெட் போட்டி ஒன்று நடந்தது. இது 50 ஓவர்கள் கொண்ட போட்டியாகும். அப்போது நடந்த ஒரு ஆட்டத்தில் ஆக்சியம், லால்மேட்டியா என்ற இரு அணிகள் மோதின.

இந்தப் போட்டி தொடங்கியதிலிருந்தே பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருந்தது. ‘டாஸ் போட்ட போது, நாணயம் விழுந்த பக்கத்தை பார்க்க லால்மேட்டியா அணி கேப்டனை, நடுவர்கள் அனுமதிக்கவில்லை என புகார் சொல்லப்பட்டது.

பின்னர் எதிரணியான ஆக்சியம், முதலில் பந்துவீசியது. லால்மேட்டியா அணி 14 ஓவர்களுக்கு 88 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. நடுவர்களின் மோசமான தீர்ப்பினால் தான், தங்கள் அணி 88 ரன்களில் சுருண்டதாக, லால்மேட்டியா அணி குற்றம் சாட்டியது. பிறகு, ஆக்சியம் அணி பேட் செய்ய களம் இறங்கியது. முதல் ஓவரை லால்மேட்டியா அணியின் சூஜன் மஹ்மூத் வீசினார்.

முதல் ஓவரிலேயே தொடர்ச்சியாக 13 வைடுகளை வீசினார். வைடாக வீசிய பந்துகள் அனைத்தும் பவுண்டரிக்கு சென்றது. இதனால், 13 வைடு பந்துகளுக்கு ஐந்து ரன்கள் வீதம், 65 ரன்கள் ஆக்சியம் அணிக்கு கிடைத்தது. அடுத்து 3 நோபால்களை வீசினார். இதுவும் பவுண்டரிக்கு செல்ல, அதன்மூலம் 15 ரன்கள் கிடைத்தன. அந்த ஓவரில் மொத்தம் 20 பந்துகளை வீசினார் சூஜன். அதில் நான்கு பந்துகள் மட்டுமே ஒழுங்கானவை. அந்த பந்துகளிலும் தொடக்க வீரர் ரஹ்மான், மூன்று பவுண்டரிகள் அடித்தார். ஆக, நான்கே பந்துகளில் 92 ரன்கள் எடுத்து ஆக்சியம் அணி வெற்றிப் பெற்றது. 0.4 ஓவரிலேயே 89 ரன்கள் இலக்கு கொண்ட ஆட்டம் முடிவுக்கு வந்தது.

நடுவர்களின் ஒருதலைப்பட்ச தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், சூஜன் மஹ்மூத் வைடுகளும், நோபால்களும் வீசியதாக சொல்லப்பட்டது. பின்னர், ஆக்சியம் அணியின் வெற்றியை கேலிக்கூத்தாக்கும் வகையில், சூஜன் மஹ்மூத் செயல்பட்டதாக வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த விஷயத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், இதுகுறித்து அறிக்கை தருமாறு விளக்கம் கேட்டிருந்தது.

இந்நிலையில், லால்மேட்டியா அணி பந்துவீச்சாளர் சூஜனுக்கு 10 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை விதிப்பதாக, வங்கதேச கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. அடுத்த அறிவிப்பு வரும்வரை, லால்மேட்டியா அணி, டாக்கா 2-வது டிவிஷன் போட்டியில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. லால்மேட்டியா அணியின் கேப்டன், பயிற்சியாளர், மேலாளர் ஆகியோருக்கும் தலா 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அடுத்த அறிவிப்பு வரும் வரை டாக்கா 2-வது டிவிஷன் போட்டியில் பங்கேற்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. போட்டி நடுவர்களுக்கும் ஆறுமாத தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று நடந்துகொண்ட, Fear Fighters அணியின் பந்துவீச்சாளர் தஷ்னீம் ஹசனுக்கும் 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவர் ஷேக் சோகையில் கூறிய போது, கிரிக்கெட் விளையாட்டின் நற்பெயருக்கு சூஜன் மஹ்மூத் களங்கம் விளைத்துவிட்டார். நடுவர்களுக்கு  எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அந்த வீரர் இவ்வாறு நடந்துகொண்டதாக வருத்தம் தெரிவித்தார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close