'விர்ச்சுவல் ரியாலிட்டி' (Virtual Reality) தொழில்நுட்பம் மூலம் விளையாடும் கிரிக்கெட் கேமை 'புரோயுகா' (ProYuga) நிறுவனம் உருவாக்கியுள்ளது. அதனை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் விழா சமீபத்தில் உ.பி. மாநிலத்தில் நடைபெற்றது. இதில், இந்திய குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்தும், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யனாத்தும் கலந்து கொண்டனர்.
வரும் ஏப்ரல் மாதம் உலகம் முழுவதும் இந்த 'விர்ச்சுவல் கிரிக்கெட்' கேம் லான்ச் செய்யப்பட உள்ள நிலையில், விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், விர்ச்சுவல் கிரிக்கெட் மாஸ்க் அணிந்து, இந்த விளையாட்டின் முதல் பந்தை எதிர்கொண்டு பேட்டிங் செய்தார்.
'விர்ச்சுவல் கிரிக்கெட்' விளையாட்டை டெல்லி ஐஐடி-யின் முன்னாள் மாணவர் த்ரிவிக்ரம் ரெட்டி, தனது நண்பரும் ஹைதராபாத் ஐஐடி-யின் முன்னாள் மாணவருமான வசந்துடன் இணைந்து உருவாக்கியுள்ளார்.
'விர்ச்சுவல் கிரிக்கெட்' அனுபவம் எப்படி இருக்கும் தெரியுமா?
'விர்ச்சுவல் கிரிக்கெட்' சாதனத்தை அணிந்த பின், நீங்கள் லார்ட்ஸ், ஈடன் கார்டன்ஸ் போன்ற மிகப்பெரிய மைதானத்தின் விக்கெட்டில், கையில் பேட்டுடன் நின்றுக் கொண்டிருப்பீர்கள். மைதானம் முழுவதும் ரசிகர்கள் ஆராவாரம் செய்துக் கொண்டிருப்பார்கள். எதிரணி பவுலர் உங்களை ஒரு முறை முறைத்துவிட்டு, உங்களை நோக்கி மின்னல் வேகத்தில் ஓடி வருவார். அவரை நீங்கள் விளாச வேண்டும்.
இவையனைத்தும், உங்கள் கண் முன்னே மிகவும் தத்ரூபமாக தோன்றும். உண்மையான கிரிக்கெட் அரங்கில் நீங்கள் விளையாடுவது போன்ற உணர்வைத் தரும். ஒரு சாதாரண கேம் தானே என்று சொல்லி, நீங்கள் அவ்வளவு சீக்கிரம் கடந்துவிட முடியாது. அத்தனையும் நிஜம் போன்றதொரு உணர்வை உங்களுக்கு ஏற்படுத்தும்.
ஒவ்வொரு முறையும் பரிமாண வளர்ச்சி பெறும் கிரிக்கெட் விளையாட்டின், அடுத்தக்கட்ட மிகப்பெரிய நகர்வாக வல்லுனர்கள் இதனை பார்க்கின்றனர்.
இந்தாண்டு ஏப்ரல் மாதம் 'விர்ச்சுவல் கிரிக்கெட்' விளையாட்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த விளையாட்டை உருவாக்கிய த்ரிவிக்ரம் ரெட்டி தான், 'புரோயுகா' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.