வங்கதேசத்திற்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் 104 பந்துகளில் 176 ரன்கள் விளாசிய தென்னாப்பிரிக்காவின் டி வில்லியர்ஸ், ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். மேலும், 2-0 என்று வங்கதேசத்தை ஒருநாள் தொடரில் வீழ்த்தியிருப்பதால், ‘புரோடியஸ்’ என்று அழைக்கப்படும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி, ஒருநாள் அணிகள் தரவரிசையில், இந்தியாவை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளது.
டி வில்லியர்ஸின் இந்த 176 ரன்கள் விளாசலில், 15 பவுண்டரிகளும், 7 சிக்ஸர்களும் அடங்கும். இதன்மூலம், டேவிட் வார்னர் மற்றும் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி, டி வில்லியர்ஸ் ஒருநாள் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். இதனால், 14-வது முறையாக அவர் ஒருநாள் தரவரிசையில் முதலிடம் பிடிக்கிறார் டி வில்லியர்ஸ். முதன்முதலாக 2010 மே மாதம் 30-ஆம் தேதி அவர் ஒருநாளில் முதலிடம் பிடித்தார். மொத்தமாக 2,124 நாட்கள் தொடர்ந்து அவர் முதலிடத்தில் நீடித்தார். முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் 2,306 நாட்கள் முதலிடத்தில் நீடித்து, அதிக நீட்கள் ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தவர் என்ற பெருமையுடன் உள்ளார்.
டி வில்லியர்ஸின் இந்த முன்னேற்றத்தால், இந்திய கேப்டன் விராட் கோலி இரண்டாம் இடத்தில் உள்ளார். வார்னர் மூன்றாம் இடத்தில் உள்ளார்.
அதேபோல், பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் பாகிஸ்தானின் ஹசன் அலி முதலிடத்தில் உள்ளார். இலங்கைக்கு எதிரான தொடரில், இதுவரை நடந்து முடிந்துள்ள மூன்று போட்டிகளில் 9 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதனால், பாகிஸ்தான் அணி 3-0 என இத்தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்த வருடத்தில் பவுலிங்கில் முதலிடம் பிடித்த ஐந்தாவது பவுலராக உள்ளார் ஹசன் அலி. இதற்குமுன் டிரென்ட் பவுல்ட், இம்ரான் தாஹிர், காகிஸோ ரபாடா, ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் முதலிடத்தில் இருந்தனர்.
ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில், பாகிஸ்தானின் முஹமது ஹபீஸ் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசன் இரண்டாம் இடத்தில் உள்ளார். தற்போது முதலிடம் பிடித்துள்ளதன் மூலம், ஹபீஸ் ஒன்பதாவது முறையாக மீண்டும் முதலிடத்தை கைப்பற்றியிருக்கிறார்.
அணிகளின் தரவரிசையை பொறுத்தவரை, இந்தியா முதலிடத்தை இழந்திருந்தாலும், நாளைமறுதினம் தொடங்கவுள்ள நியூசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரை வெல்வதன் மூலம், மீண்டும் முதல் இடத்திற்கு வர வாய்ப்புள்ளது.