டி20-ல் இரட்டை சதம்; பிரித்து மேய்ந்த ஆப்கன் வீரர்!

இந்த இலக்கை துரத்திய காபூல் ஸ்டார் கிரிக்கெட் கிளப் அணி, 107 ரன்களில் ஆல் அவுட்டானது. இதனால், ஷஃபக் அணி 244 ரன்கள் வித்தியாசத்தில் மெகா...

பத்து வருடங்களுக்கு முன்பு வரை கத்துக்குட்டி அணி என அழைக்கப்பட்ட வங்கதேச கிரிக்கெட் அணி, இன்று உலகில் கிரிக்கெட் விளையாடும் அனைத்து அணிகளையும், அவர்களது சொந்த மண்ணிலேயே எதிர்க்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டது. கடந்த மாதம் நடந்து முடிந்த, உலகின் டாப் எட்டு அணிகள் மட்டும் பங்கேற்கும் சாம்பியன்ஸ் லீக் தொடரில், அரையிறுதி வரை முன்னேறி மீண்டும் தாங்கள் சிறிய அணி அல்ல என்பதை நிரூபித்தது.

வங்கதேசத்திற்கு அடுத்தபடியாக ஆப்கானிஸ்தான், அயர்லாந்து ஆகிய அணிகள் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு கிரிக்கெட்டில் முன்னேற்றம் அடைந்து வருகின்றன. 2011-ஆம் ஆண்டு உலகக்கோப்பையில், இங்கிலாந்து நிர்ணயித்த 328 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக துரத்தி அசத்தியது அயர்லாந்து.

அதேபோன்று, ஆப்கன் அணியும் கிரிக்கெட்டில் நேர்த்தியான முன்னேற்றத்தை அடைந்து வருகிறது. அந்த அணியின் கேப்டன் முஹம்மது நபியும், சுழற் பந்துவீச்சாளர் ரஷீத் கானும் 2017 ஐபிஎல் தொடரில் விளையாடினர். இதில் ரஷீத் கானின் பந்துவீச்சு உலகின் பல முன்னணி பேட்ஸ்மேன்களையும் மிரட்டியது. இதன்மூலம், ரசிகர்களிடையே அதிக கவனம் பெற்றார் ரஷீத்.

இந்நிலையில், ஆப்கன் அணியின் மற்றொரு விக்கெட் கீப்பராக உள்ள ஷஃபிகுல்லா ஷஃபக், ஆப்கானிஸ்தானில் நடந்த உள்ளூர் 20-20 கிரிக்கெட் தொடரில் (Paragon Nangarhar Champion Trophy) கத்தீஸ் கிரிக்கெட் அணிக்காக விளையாடினார். அதில் ஒரு போட்டியில் விளையாடிய ஷஃபக், 71 பந்துகளில் 214 ரன்கள் விளாசி உலக சாதனை படைத்துள்ளார். இதில் 21 சிக்ஸர்களும், 16 பவுண்டரிகளும் அடங்கும். இதனால் அவரது அணி 20 ஓவர்களில் 351 ரன்கள் குவித்தது. (லைட்டா தல சுத்துதா!! சேம் ஃபீலிங்)

இந்த இலக்கை துரத்திய எதிரணியான காபூல் ஸ்டார் கிரிக்கெட் கிளப் அணி, 107 ரன்களில் ஆல் அவுட்டானது. இதனால், ஷஃபக் அணி 244 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியைப் பெற்றது.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில், ஷஃபக் இதுவரை 35 போட்டிகளில் விளையாடி, 392 ரன்கள் எடுத்துள்ளார். அவரது அதிகபட்ச டி20 ஸ்கோர் 51 தான். ஆனால், அவரது ஸ்டிரைக் ரேட் 143.07 ஆகும். 2012, 2014 மற்றும் 2016 டி20 உலகக்கோப்பை தொடர்களில் அவர் அணியில் விளையாடியுள்ளார்.

சர்வதேச டி20 வரலாற்றில், கடந்த 2013-ஆம் ஆண்டு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக 263 ரன்கள் எடுத்திருந்ததே இதுவரை அதிகபட்ச ஸ்கோராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close