IPL 2023 – CSK vs PBKS – Ajinkya Rahane Tamil News: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் மூத்த வீரரான அஜிங்க்யா ரஹானே நடப்பு சீசனில் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் கிரிக்கெட் உலகிற்கு ‘கம்பேக்’ கொடுத்துள்ளார். இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் 224 ரன்களும், 2 அரை சதங்களும் அடித்துள்ளார். 200+ ஸ்டிரைக் ரேட்டை கொண்டுள்ள அவரை பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங் செய்ய அனுப்பப்படாதது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியின் போது, மொயீன் அலிக்கு மாற்றாக வந்த ரஹானே அந்த ஆட்டத்தில் 19 பந்துகளில் அரை சதம் அடித்தார். அவரது அதிரடியான ஆட்டத்தால் சென்னை அணி மும்பை எளிதில் வீழ்த்தி இருந்தது. அந்த போட்டிக்குப் பிறகு, சென்னை அணி அவரை தொடர்ந்து 5 ஆட்டங்களில் ஒன் டவுனில் பேட்டிங் செய்ய அனுப்பியது. ரஹானேவும் 180+ ஸ்ட்ரைக் ரேட்டுடன் தனது நம்பிக்கையை வைத்து ஜொலித்து வருகிறார்.

ஆனால், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அஜிங்க்யா ரஹானேவை அந்த இடத்தில் பேட்டிங் செய்ய அனுப்பவில்லை. அவருக்கு பதில் சிவம் துபேயை ஒன் டவுனில் அனுப்பிய தோனி, மொயீன் அலி மற்றும் ரவீந்திர ஜடேஜாவை பேட்டிங் செய்ய அடுத்தடுத்து அனுப்பினார். கடைசி ஓவரில் அவரே பேட்டிங் செய்தார்.
ரஹானேவுடன் இந்த சீசனில் சிவம் துபேயும் சிறப்பாக விளையாடி வருகிறார். ஆனால் அஜிங்க்யா ரஹானேவை ஒன் டவுனில் அனுப்பியிருந்தால், துபேயை விட 10-15 ரன்கள் கூடுதலாக எடுத்திருப்பார். ஏனென்றால், ரஹானே மந்தமான ஆடுகளங்களில் சிறப்பான பேட்டிங் செய்யக் கூடியவர். இன்றைய ஆட்டத்தில் ஆடுகளம் அவரது பேட்டிங்கிற்கு ஏற்றால் போல் இருந்தது. ஆனால் அவருக்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.

4வது இடத்தில் ஆடிய மொயீன் அல்லியும், அவருக்கு பின் சென்ற ரவீந்திர ஜடேஜாவும் மெச்சும் படியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அந்த இடங்களிலாவது ரஹானேவை பேட்டிங் செய்ய அனுப்பியிருக்கலாம். தரமான ஃபார்மில் இருக்கும் அவர் மீண்டும் ஒருமுறை தனது அதிரடியை வெளிப்படுத்தி இருப்பார். அவரை தோனி ஏன் அனுப்பவில்லை என்பது ரசிகர்களை கவலையடையச் செய்யும் கேள்வியாக மாறியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil