இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை மறுதினம்(அக்.7) ராஞ்சியில் தொடங்குகிறது. இத்தொடருக்கான இந்திய அணியில் அஜின்க்யா ரஹானே சேர்க்கப்படவில்லை. இதுகுறித்து கருத்து தெரிவித்த ரஹானே, 'தேர்வுக்குழுவின் முடிவுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்' என்றார்.
இந்த நிலையில், ரஹானே அணியில் சேர்க்கப்படாதது குறித்து, கடுமையாக விமர்சித்துள்ள முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர், பிசிசிஐ தேர்வாளர்களின் ஞானம் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து சுனில் கவாஸ்கர் அளித்துள்ள பேட்டியில், "ரஹானேவை எதற்காக வெளியேற்றினார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நடந்து முடிந்த ஒருநாள் தொடரில் தொடர்ச்சியாக நான்கு அரைசதங்களை விளாசியுள்ளார். ஆனால், ஏன் அவர் அணியில் இல்லை? இப்போது, லோகேஷ் ராகுல் ஒரு நல்ல பேட்ஸ்மேன் தான். ஆனால், ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், ஒரு போட்டியில் கூட அவர் விளையாடவில்லையே. அவர் ஏன் டி20 தொடரில் சேர்க்கப்பட்டார்? நான்கு அரை சதங்கள் எடுத்த ரஹானே ஏன் அணியில் இல்லை? ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ரஹானேவை விட ராகுல் சிறந்த வீரர் தான் என்பதற்கு தேர்வுக்குழு சில காரணங்களை தெரிவிக்க வேண்டும்" என்றார்.
ரஹானேவின் பயிற்சியாளர் ப்ரவீன் ஆம்ரே இதுகுறித்து பேசுகையில், "நாட்டுக்காக எப்போது வேண்டுமானாலும் பணியாற்ற விரும்பும் ஒரு போர் வீரரைப் போன்றவர் ரஹானே. டி20 தொடரில், அணியில் இடம் பெற முடியாவிட்டாலும், அதுகுறித்த அவரது பதில், ஒரு வீரராக ரஹானேவின் முதிர்ச்சியைக் காட்டுகிறது. அணியில் அவரது இடம் குறித்து அவருக்கு எந்த பயமும் இல்லை. தேர்வுக்கு குழுவினரின் முடிவுகள் சரியா, தவறா என்று கூறும் அளவிற்கு நான் பொறுப்பில் இல்லை. ஆனால், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடருக்காக ரஹானே ஏற்கனவே தயாராகியிருந்தார் என்பதை மட்டும் என்னால் சொல்ல முடியும்" என்றார்.