இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் சாம்பியன்ஸ் டிராஃபி தொடர் வரும் ஜூன் மாதம் 1-ஆம் தேதி தொடங்கி ஜூன் 18-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான் ஆகிய எட்டு அணிகள் இதில் பங்கேற்கின்றன.
முன்னதாக, வீரர்கள் பட்டியலை அறிவிக்க வேண்டிய காலக் கெடுவும்(ஏப்ரல் 25 ,2017) முடிந்த நிலையில், பிசிசிஐ இந்திய வீரர்கள் பட்டியலில் அறிவிக்கவில்லை. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் (ஐசிசி) போட்டிகளில் கிடைக்கும் வருமானத்தைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக எழுந்த பிரச்சனையால் தான், இந்திய அணியை அறிவிப்பதில் பிசிசிஐ காலதாமதம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், கடந்த 8-ஆம் தேதி தான் சாம்பியன்ஸ் டிராஃபியில் பங்கேற்கவுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது.
ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா, அஜின்க்யா ரஹானே, மஹேந்திர சிங் தோனி, யுவராஜ் சிங், கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முஹமது ஷமி, உமேஷ் யாதவ், புவனேஷ் குமார், ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் மணீஷ் பாண்டே ஆகியோர் அணியில் இடம் பிடித்திருந்தார்.
இதையடுத்து, நடப்பு சாம்பியன் இந்தியா பங்கேற்கும் அனைத்து போட்டிக்கான டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக ஐசிசி அறிவித்துள்ளது. அதேபோல், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகளும் தீர்ந்துவிட்டதாக கூறியுள்ளது.
குறிப்பாக, இந்தியா - பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான போட்டிகளுக்கு மிகப்பெரிய டிமாண்ட் இருந்ததாகவும் ஐசிசி தெரிவித்துள்ளது.