கிரிக்கெட் பேட்ஸ்மேனுக்கா? பவுலருக்கா? இந்தியா vs இங்கிலாந்து இறுதிப் போட்டி! ஒரு பார்வை

இந்தியா முதலில் பேட்டிங் செய்து 240 ரன்கள் அடித்திருந்தாலும், இங்கிலாந்து அதை சேஸிங் செய்திருக்கும் என்பது உறுதி

அன்பரசன் ஞானமணி

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 2019 உலகக் கோப்பைக்கு இன்னும் 10 மாதங்களே உள்ளன. அந்தத் தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கு வெற்றிப் பெற்ற இப்பொழுது ஒரு அருமையான க்ளூ கிடைத்துள்ளது. சேஸிங்!. தற்போது தயாரிக்கப்பட்டு வரும் பெரும்பாலான இங்கிலாந்து ஆடுகளங்களில் சேஸிங் நன்றாக ஒர்க் அவுட் ஆகிறது என்பதை சமீபத்திய போட்டிகளின் முடிவுகள் நமக்கு காட்டுகின்றன. ஆனால், நமக்கு ஏற்படும் சந்தேகம் என்னவெனில் அங்குள்ள  ஆடுகளங்கள் ரியல் கிரிக்கெட்டை சிதைக்கும் வகையில் அமைந்துள்ளதா? என்பதே.

நேற்று இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதிய இறுதி டி20 போட்டி இங்கிலாந்தின் பிரிஸ்டல் (Bristol)  மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, ‘இந்த விக்கெட் மிகவும் கடினமானதாக உள்ளது. இதனால் நாங்கள் பவுலிங் தேர்வு செய்கிறோம் என்றார்.

இங்கிலாந்து கேப்டன் மோர்கன் கூறுகையில், ‘இதுவொரு நல்ல விக்கெட். ஆனால், நாங்களும் சேஸிங் செய்யவே விரும்பினோம்’ என்றார்.

முதலில் களமிறங்கிய இங்கிலாந்து, இந்திய பவுலர்களை சிதற அடித்துக் கொண்டிருந்தது. மைதானம் சற்று சிறிய அளவு என்பதால், பவுண்டரிகளை பந்துகள் எளிதாக கடந்தன. ‘தொட்டால் சிக்ஸ்’ என்கிற ரீதியில் தான் இருந்தது கிரவுண்ட்டின் அளவு. அது பரவாயில்லை… பல நாடுகளில் சில சிறிய கிரவுண்டுகள் உள்ளன.

ஆனால், நேற்று ‘வருவோர் போவோர்’ எல்லாம் சிக்ஸர் அடித்ததை தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஜேசன் ராய் தொடங்கி, எட்டாவது விக்கெட்டாக அவுட்டாகி சென்ற பிளங்கட் வரை அனாயசமாக சிக்ஸர்கள் அடித்தனர். இந்திய பவுலர்களை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. தீபக் சாஹர், உமேஷ் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, சாஹல், சித்தார்த் கவுல் என பவுல் செய்த அத்தனை பேரின் ஓவர்களும் விளாசப்பட்டது.

இங்கிலாந்து வீரர்கள் அடித்த அடியிலேயே தெரிந்து விட்டது, பிட்சின் தரம் பற்றி. இதனால், இந்தியாவும் திருப்பி செமத்தியாக அடிக்கும் என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்யாத குறையாக நம்பப்பட்டது. எதிர்பார்த்தது போலவே, துளி சிரமம் இன்றி, இந்திய பேட்ஸ்மேன்கள் டீப் ஃபைன் லெக், லாங் லெக், டீப் மிட் விக்கெட், லாங் ஆன், லாங் ஆஃப், டீப் எக்ஸ்ட்ரா கவர் என மைதானத்தின் அனைத்து திசையிலும் பந்துகளை பறக்கவிட்டனர்.

இங்கிலாந்து பேட்ஸ்மேன்களாவது, இந்திய பந்துவீச்சுக்கு 9 விக்கெட்டுகளை தாரை வார்த்து சற்று மரியாதை செலுத்தினர். ஆனால், இந்திய பேட்ஸ்மேன்கள் இரக்கமே காட்டவில்லை. ரோஹித் ஷர்மா தனது மூன்றாவது சர்வதேச டி20 சதத்தை பூர்த்தி செய்ய, ஹர்திக் பாண்ட்யா 14 பந்துகளில் 33 ரன்கள் விளாச இந்திய அணி 18.4வது ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 201 ரன்கள் எடுத்து வென்றது.

ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்… வெற்றி தான்… கோப்பை தான்.. ஹேப்பி தான்…! ஆனால், பவுலர்களின் நிலைமை?

வேகப்பந்து, ஸ்பின் என இரண்டு பந்துவீச்சுக்குமே நேற்றைய ஆடுகளம் ஒத்துழைக்கவில்லை. பந்துவீச்சாளர்களால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. Bristol-ல் நேற்று காற்று நன்றாக அடித்ததால் தான் குல்தீப் உட்கார வைக்கப்பட்டு, தீபக் சாஹர் அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால் என்ன பயன்? விக்கெட் எடுக்கவில்லை என்றால் கூட பரவாயில்லை, அவரது ஸ்விங் எடுபடவே இல்லையே!. Flat Wicket-ஆக இருந்ததே இதற்கு காரணம். இதுபோன்று Flat விக்கெட்டுகள் தயாரித்தால் அது பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரியாக தான் இருக்குமே தவிர, பவுலர்களுக்கு நரகம் தான்.

க்ரிஸ் ஜோர்டன், பிளங்கட், ஜேக் பால், டேவிட் வில்லே, அடில் ரஷித் என்ற இங்கிலாந்தின் பவுலிங் கூட்டணியால் ஒரு கல்லை கூட நகர்த்தி வைக்க முடியவில்லை. அந்தளவிற்கு பிட்ச் பேட்ஸ்மேன்களுக்கு சப்போர்ட் செய்தது.

ஏதோ நேற்று நடந்த ஒரு போட்டியை வைத்துக் கொண்டு இதனைச் சொல்லவில்லை. சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து, 50 ஓவர்களில் 481 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தது. அன்று, 500-ஐ தாண்டி சென்றிருக்க வேண்டியது. ஜஸ்ட் மிஸ்…  இந்தப் போட்டி இங்கிலாந்தின் டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றது. இவ்வளவு ரன்களை ஒருநாள் போட்டியில் ஒரு அணி அடிக்கிறது என்றால், பிட்ச் எவ்வளவு மோசமானதாக இருந்திருக்கும் என கற்பனை செய்து பாருங்கள். ஆஸ்திரேலியா பலவீனமாக உள்ளது என்பதெல்லாம் தனிக் கதை. அதற்காக இப்படியா!?.

இந்த லட்சணத்தில், இங்கிலாந்தில் தான் இன்னும் 10 மாதத்தில் உலகக் கோப்பை தொடங்க உள்ளது. இதுபோன்ற விக்கெட்டுகளை இங்கிலாந்து தயாரிக்கும் பட்சத்தில், முதலில் பேட்டிங் செய்யும் அணி சர்வ சாதாரணமாக 400 ரன்கள் அடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அந்த டார்கெட்டை இந்தியா போன்ற அணிகள் 40 ஓவர்களில் கடக்கும் என்பதிலும் சந்தேகமில்லை.

பேட்டிங் + பவுலிங் ஆகிய இரண்டிற்கும் மரியாதை கொடுக்கும் வரை தான் கிரிக்கெட் வாழும். இல்லையேல், அழிவுப் பாதையை நோக்கி விரைவில் அது செல்லும். ஏற்கனவே, நம்மூரு பசங்க ஃபுட்பால் பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. சோஷியல் மீடியாவின் தாக்கம், மொபைல் நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொடுக்கும் இன்டெர்நெட் போன்ற பல காரணங்களால் நடந்து வரும் ஃபிபா உலகக் கோப்பையை, இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு பெருமளவு ரசிகர்களை பார்த்துவருவதாக கணக்கெடுப்பு சொல்கிறது. குறிப்பாக, தமிழகத்தில் நள்ளிரவு நேரங்களில் ஃபிபா உலகக் கோப்பை போட்டிகளை ரசிகர்கள் அதிகம் பார்ப்பதால், வழக்கத்தைவிட அதிகமான மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது என மின் வாரியமே அறிவித்துள்ளது.

இப்படி, காலங்கள் மாறிக் கொண்டிருக்கும் வேளையில், கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கானது என்று மாறினால், வீடியோ கேமில் மட்டுமே கிரிக்கெட் வாழும் என்பதை தவிர்க்க முடியாது!.

இறுதியாக ஒன்று… நேற்று இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்ததால் இந்தியா வென்றது. ஒருவேளை மோர்கன் டாஸ் வென்று, இந்தியா முதலில் பேட்டிங் செய்து 240 ரன்கள் அடித்திருந்தாலும், இங்கிலாந்து அதை சேஸிங் செய்திருக்கும் என்பது உறுதி!.

இந்தியா வெற்றி பெற்ற மகிழ்ச்சியை காட்டிலும், கிரிக்கெட் இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டும் என்பதே நமது விருப்பமாகும்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close