இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய 'சூப்பர்ஸ்டார்'.... சச்சினின் சாதனைகளை முறியடிக்க பிறந்த வீரர்..... ரன் மெஷின்...... மாடர்ன் கிரிக்கெட் உலகின் 'சாம்ராட்'....... என்றெல்லாம் அழைக்கப்படுபவர் விராட் கோலி. இந்த நொடிப் பொழுதில், இவருக்கு சரிசம போட்டியாக திகழும் வீரர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு.
ஆனால், தற்போது இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஒரு கேப்டனாகவும், வீரராகவும் விராட் கோலி சந்திக்கவுள்ள மிகப்பெரிய அக்னிபரீட்சை இது. இன்னும் சொல்லப்போனால், இத்தொடருக்குப் பிறகு, தற்போது விராட் கோலிக்கு இருக்கும் இமேஜ், ஒன்று உயரும்... அல்லது சரியும். இது உறுதி!. ஏனெனில், அந்தளவிற்கு மிகக் கடுமையான தொடர் இது.
இதுவரை இந்திய கிரிக்கெட் அணி ஆறு முறை தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது. இதில் ஒருமுறை கூட, இந்திய அணி டெஸ்ட் தொடரையோ, ஒருநாள் தொடரையோ வென்றதில்லை. இரண்டு முறை மட்டும் டி20 தொடரை வென்றுள்ளது.
2010-11ம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என டிரா செய்ததே, அம்மண்ணில் இந்திய அணியின் சிறந்த சாதனையாக உள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். சச்சின், திராவிட், கங்குலி, லக்ஷ்மண், சேவாக், ஜாகீர் என இந்தியாவின் மிகப்பெரும் படையால் கூட, தென்னாப்பிரிக்க மண்ணில் வெற்றிக் கொடி நாட்ட முடியவில்லை.
காரணம், நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். அங்குள்ள வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான பிட்சுகளே, நம் வீரர்களின் திணறலுக்கு காரணம். இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் கூட இதே போன்று வேகப்பந்து வீச்சு கொண்ட மைதானங்கள் தான் அதிகம். ஆனால், அங்கு இந்திய அணி ஓரளவிற்கு கவுரவமான சாதனைகளை தன்வசம் வைத்துள்ளது. ஆனால், தென்னாப்பிரிக்காவில் மட்டும் இந்தியாவால் எதுவுமே செய்ய முடியவில்லை.
இம்முறை, விராட் கோலி தலைமையில் இந்திய அணி களமிறங்கியிருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் 5ம் தேதி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கும் விராட், ரோஹித், தவான் ஆகியோர் தென்னாப்பிரிக்க அணிக்கு சவாலாக இருப்பார்களா என்பதை பொறுத்திருந்தே பார்க்க முடியும்.
இதுநாள் வரை இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் என சாதாரண வெளிநாட்டுத் தொடர்களை மட்டுமே கேப்டனாக எதிர்கொண்டு வந்த கோலி, இம்முறை தான் ரியல் 'போரை' எதிர்கொள்ளவிருக்கிறார்.
ஒவ்வொருமுறையும், தென்னாப்பிர்க்காவுக்கு இந்திய அணி செல்லும் போது, இதுதான் உச்சக்கட்ட பலம் கொண்ட அணி என சொல்லப்படும். ஆனால், ரிசல்ட் என்னவோ தோல்வி தான். இம்முறையும் அதேபோன்றதொரு டாக் தான். ஆனால், ரிசல்ட் என்னவாகப் போகிறது என்பது கணிப்பது கடினமாகவே உள்ளது.
எது எப்படியோ, பேட்ஸ்மேன் கோலிக்கு இத் தொடர் ஒரு சோதனை. கேப்டன் கோலிக்கு இத் தொடர் 'மெகா' சோதனை!.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.