இந்திய அணிக்கு பயிற்சியாளராக தொடரும் கும்ப்ளே?

பிசிசிஐ நிர்வாகிகள் பலரும் இதே கருத்துடன் தான் உள்ளார்களாம்

2016 ஆம் ஆண்டு இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டவர் அணில் கும்ப்ளே. அவருடைய பதவிக் காலம் சாம்பியன்ஸ் தொடரோடு முடியவுள்ளதால், அடுத்த பயிற்சியாளரை நியமிப்பதற்கான பணியில் பிசிசிஐ ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், நடைபெற்றுவரும் சாம்பியன்ஸ் டிராஃபி தொடர் வரும் 18-ஆம் தேதி முடிவடைகிறது. தொடர்ந்து, இந்திய அணி, ஜூன் 20-ஆம் தேதி வெஸ்ட்இண்டீஸ் புறப்பட்டுச் செல்கிறது. அங்கு, அந்த அணிக்கு எதிராக 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரேயொரு டி20 போட்டியில் இந்திய அணி விளையாடுகிறது.

இத்தொடருக்கு முன்பாக பயிற்சியாளரை தேர்ந்தெடுப்பது சிரமம் என்பதால், கும்ப்ளேவையே பயிற்சியாளராக தொடர வைக்க, பிசிசிஐ-யின் பொறுப்புத் தலைவர் சி.கே.கண்ணா முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிசிசிஐ நிர்வாகிகள் பலரும் இதே கருத்துடன் தான் உள்ளார்களாம்.

இது தொடர்பாக, கிரிக்கெட் ஆலோசனை குழுவில் உள்ள சச்சின் டெண்டுல்கர், சவ்ரவ் கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமணன் ஆகியோர் நேற்று இந்தியா – இலங்கை போட்டி முடிந்த பிறகு விவாதித்தனர். எனவே, மற்றுமொரு தொடருக்கும் கும்ப்ளேவே இந்திய அணியின் பயிற்சியாளராக தொடர்வார் என்று கூறப்படுகிறது.

இந்தக் கால இடைவெளியில், பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பித்துள்ள வீரேந்திர சேவாக், முன்னாள் ஆஸ்திரேலிய பவுலர் டாம் மூடி, இங்கிலாந்தைச் சேர்ந்த ரிச்சர்ட் பைபஸ், லால்சந்த், டொட்டா கணேஷ் ஆகியோரிடம் இந்த கிரிக்கெட் ஆலோசனை குழு நேர்காணல் நடத்தும் என தெரிகிறது.

இத்தியா – வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையேயான முதல் போட்டி ஜூன் 23-ஆம் தேதி தொடங்குகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close