இந்திய அணியை உடனடியாக அறிவிக்க பிசிசிஐ-க்கு உத்தரவு... சச்சின், டிராவிட் ஆதரவு

சாம்பியன்ஸ் டிராபில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் கொண்ட அணியை உடனடியாக அறிவிக்க வேண்டும் என நிர்வாகக் குழு பிசிசிஐ-க்கு உத்தரவிட்டுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் கொண்ட அணியை உடனடியாக அறிவிக்க வேண்டும் என நிர்வாகக் குழு பிசிசிஐ-க்கு உத்தரவிட்டுள்ளது.

ஐ.சி.சி என்று அழைக்கப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடரை சராசரியாக இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தி வருகிறது. 50 ஓவர் உலகக்கோப்பையை போல இந்த சாம்பியன்ஸ் டிராபியானது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. வரும் ஜூன் 1-ம் தேதி இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியனான இந்தியா உள்பட 8 அணிகள் பங்கேற்க தகுதி பெற்றன.

ஆனால், ஐசிசி-க்கும் பிசிசிஐ-க்கும் இடையேயான வருவாய் பகிர்வு விவகாரத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனை, சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி பங்கேற்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. மேலும், உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள நிர்வாகக்குழுவிற்கும், பிபிஐ-க்கும் இடையேயும் கருத்து வேறுபாடு நிலவி வருவதாக கூறப்படுகிறது. சாம்பியன்ஸ் டிராபில் பங்கேற்பதற்கான அணியை அறிவிப்பதற்காக ஐசிசி-யின் காலக்கெடு கடந்த ஏப்ரல் 25-ந் தேதி முடிவடைந்து விட்டது. ஆனால், இன்னமும் இந்திய அணி அறிவிக்கப்படவில்லை.

நடப்பு சாம்பியனான இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கும் நிலையில், ஈ.எஸ்.பி.என் கிரிக்இன்போ இணையதளம் முன்னாள் கிரிக்கெட் வீரர்களிடம் இது தொடர்பாக கருத்து கேட்டது. இதில், சச்சின், டிராவிட், ஜாகீர் கான், குண்டப்பா விஸ்வநாத், சந்தீப் பாட்டீல்,ஆகாஷ் சோப்ரா, அஜித் அகர்கர், வெங்கடேஷ் பிரசாத், சஞ்சய் மஞ்சரேக்கர், சபாகரீம், முரளி கார்த்திக் மற்றும் தீப்தாஸ் குப்தா ஆகியோர் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.

வரும் 7-ம் தேதி டெல்லியில் பிசிசிஐ சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், சாம்பியன்ஸ் டிராபில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் கொண்ட அணியை உடனடியாக அறிவிக்க வேண்டும் என நிர்வாகக் குழு பிசிசிஐ-க்கு உத்தரவிட்டுள்ளது.

×Close
×Close