நீண்ட நாள் காதல் அரசல் புரசல்களுக்கு இன்று முற்றுப்புள்ளி வைத்துள்ளது விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா ஜோடி. ஆம்! இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கும், பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவுக்கும் இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது.
இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இருந்து விடுப்பு எடுத்துள்ள விராட் கோலி, தனது குடும்பத்தினருடன் இத்தாலி நகருக்கு சென்றிருந்தார். அனுஷ்கா ஷர்மாவும் தனது குடும்பத்தாருடன் இத்தாலி நகருக்கு சென்றார். இதையடுத்து, இருவரும் திருமணம் செய்து கொள்ளவே இத்தாலி சென்றுள்ளதாக அன்றுமுதல் செய்திகள் றெக்கை கட்டி பறந்தன.
இந்நிலையில், ஃபிலிம்பேர் வெளியிட்டுள்ள தகவலில், அனுஷ்கா ஷர்மாவுக்கும் விராட் கோலிக்கும் திருமணம் நடந்து முடிந்து விட்டதாகவும், இன்று இரவு 8 மணிக்கு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த தகவலில், அனுஷ்கா ஷர்மாவுக்கும், விராட் கோலிக்கும் இத்தாலியின் மிலன் நகரில் திருமணம் நடந்து முடிந்துவிட்டது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்ட இத்திருமணம் இன்று அதிகாலை நடைபெற்றது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.