தங்க மாரியப்பன் உள்ளிட்ட 17 பேருக்கு அர்ஜுனா விருது அறிவிப்பு

பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு உள்பட 17 பேருக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு உள்பட 17 பேருக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய அளவில் விளையாட்டுத் துறைகளில் சிறந்த சாதனைகளைப் படைக்கும் வீரர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில், மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவாக ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதும், அர்ஜுனா விருதும் இந்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நடப்பாண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது மற்றும் அர்ஜுனா விருது பெறுவோரை தேர்வு செய்வதற்கான தேர்வுக் குழு அண்மையில் அமைக்கப்பட்டது. அதில், கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், தடகள வீராங்கனை பி.டி.உஷா உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்த தேர்வுக் குழுவினர், தங்களது அறிவிப்பை இன்று வெளியிட்டனர். அதில், தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு உள்பட 17 பேர் இடம் பெற்றுள்ளனர்.

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோவில் கடந்து ஆண்டு நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன், உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். அவருக்கு ஏற்கனவே பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மாரியப்பன் தங்கவேலு தவிர, மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஹர்மன்ப்ரீத் கவுர், கிரிக்கெட் வீரர் புஜாரா, பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்ற வருண் சிங் பாட்டி உள்ளிட்ட 17 பேருக்கு அர்ஜுனா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற தேவேந்திர ஜஹாரியா, முன்னாள் ஹாக்கி கேப்டன் சர்தார்சிங் ஆகியோருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பாராலிம்பிக்கில் இரு முறை தங்கம் வென்ற தேவேந்திர ஜெஜாரியா, நாட்டின் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் பாராலிம்பிக் வீரர் ஆவார்.

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு மாரியப்பன் தங்கவேலு பெயர் பரிந்துரை செய்த நிலையில் அர்ஜூனா விருது கிடைத்துள்ளது. மாரியப்பன் தங்கவேலுக்கு கிடைத்துள்ள அர்ஜுனா விருது தமிழகத்திற்கு கிடைத்த விருது என அவரது பயிற்சியாளர் சத்ய நாராயணன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

×Close
×Close