/indian-express-tamil/media/media_files/2025/10/16/arulnantha-babu-pro-kabaddi-tamil-nadu-star-defender-tamil-thalaivas-interview-tamil-news-2025-10-16-19-34-32.jpg)
வெற்றி, தோல்வி என மாறி மாறி கண்டு புள்ளிகள் பட்டியலில் ஏற்ற இறக்கங்களை தமிழ் தலைவாஸ் அணி சந்தித்து வரும் நிலையில், தமிழக வீரர் அருளானந்த பாபு-வுடன் நாம் உரையாடினோம்.
ச. மார்ட்டின் ஜெயராஜ்
இந்திய மண்ணில் 12 அணிகள் களமாடி வரும் 12-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்த தொடருக்கான தமிழ் தலைவாஸ் இதுவரை ஆடிய 16 போட்டிகளில் 6-ல் மட்டும் 12 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 9-வது இடத்தில் இருக்கிறது. இதனால், அந்த அணி இந்த சீசனிலும் பிளே-ஆஃப்க்குள் நுழைவது சந்தேகம் தான்.
முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல, ஏலத்தில் பெரிய அளவில் ஈர்க்கப்படாத பவன் செஹ்ராவத்தை வாங்கிய தமிழ் தலைவாஸ், அவரை தொடரின் தொடக்கத்திலே கழற்றி விட்டது. அவரை கேப்டனாக நியமித்தபோதிலும், உள் விவகாரங்கள் காரணமாக பவனை அணியில் இருந்து விலக்கும் முடிவை எடுத்தது. இது இந்திய கபடி வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பவன் செஹ்ராவத் விலகிய நிலையில், அவரது இடத்தை தமிழக வீரரான அருளானந்த பாபு நிரப்பினார். சென்னையை தலைமையிடமாக கொண்ட அணியில் ஒரு தமிழக வீரர் கூட இல்லை என்கிற விமர்சனத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் இது அமைந்து போனது. இத்தொடரை வெற்றியுடன் தொடங்கிய தமிழ் தலைவாஸ் அடுத்தடுத்த தோல்விகளால் துவண்டது. ரைடிங், டிஃபென்ஸ் என இரண்டிலுமே சொதப்பியது. இந்த சூழலில், தமிழக வீரர் அருளானந்த பாபு-வின் வருகை அணிக்கு தெம்பூட்டியது. அவரும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவரை இன்னும் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இப்போது வெற்றி, தோல்வி என மாறி மாறி கண்டு புள்ளிகள் பட்டியலில் ஏற்ற இறக்கங்களை தமிழ் தலைவாஸ் அணி சந்தித்து வரும் நிலையில், தமிழக வீரர் அருளானந்த பாபு-வுடன் நாம் உரையாடினோம். நாட்டின் தென்கோடியில் இருந்து கிளம்பி புரோ கபடியில் தடம் பதிக்க வேண்டும் என்கிற ஆர்வமும், ஆசையும் அவர் பேச்சில் வெளிப்பட்டது. நாம் கேட்ட கேள்விகளுக்கு இன்முகத்துடன் பதில் தந்தார். அவர் நம்முடன் பேசியது பின்வருமாறு:-
உங்கள் கபடி பயணம் தொடங்கியது எப்படி?
என்னுடைய சொந்த ஊர் மேலக்கடையநல்லூர். இது தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் - திருமலை கோவில் ஆகிய ஊர்களுக்கு நடுவில் அமைந்திருக்கிறது. அங்குள்ள நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு வரை படித்தேன். பொதுவாக எங்களது ஊரிலே கபடி ஆடுவார்கள். அதனால், பள்ளியில் நான் 5-ம் வகுப்பு படிக்கும் போதே கபடியில் களமிறங்கி ஆடி வந்தேன்.
8-ம் வகுப்பை முடித்த நான், பிறகு புளியங்குடியில் 12-ம் வகுப்பு வரை படித்தேன். அந்தப் பள்ளியில் நான் படித்துக் கொண்டிருந்தபோது எனக்கு நிவேன்யா என்கிற நண்பர் கிடைத்தார். அவருடன் சேர்ந்துதான் கபடி போட்டியில் தொடர்ந்து ஆடத் தொடங்கினேன். எங்கே போட்டி நடந்தாலும் நானும் அவரும் சென்று விடுவோம். இப்படித்தான் ஒரு போட்டிக்காக ஆட சென்றபோது, அண்ணன் ஒருவர் என்னிடம் 'கன்னியாகுமரி அனத்தங்கரையில் கபடி கிளப் ஒன்று உள்ளது. அதில் சென்று சேர்ந்து கொள்' என்றார்.
சொன்ன கையோடு என்னை அந்த கிளப்பில் சேர்த்து விட்டார். அங்கு ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் இணைந்தேன். கல்லூரி படிப்பை அந்த கிளப் நிர்வாகம் பார்த்துக் கொண்டது. அங்கே எனது ஆட்டத்தில் முன்னேற கடுமையாக உழைத்தேன். அங்கிருந்தவர்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். அப்படியே படிப்படியாக என்னை நானே மெருகூட்டிக் கொண்டேன்.
பி.கே.எல் போட்டியில் நுழைந்தது எப்படி?
குமரி கிளப்பில் ஆடிய எனக்கு யுவ கபடி தொடரில் ஆடும் வாய்ப்பு கிடைத்தது. அதன் 2-வது சீசனில் எங்களது அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இறுதிப் போட்டியில் சிறந்த டிஃபெண்டர் விருதை வென்றேன். பிறகு பெங்களூரு புல்ஸ் அணியில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அப்படியே அந்த அணியில் களமிறங்கினேன்.
தமிழ் தலைவாஸ் அணியில் ஆடும் வாய்ப்பு கிடைத்தது எப்படி?
தமிழ் தலைவாஸ் அணிக்காக ஆட நான் ட்ரையல்ஸில் கலந்து கொண்டேன். அங்கு நடைபெற்ற கேம்ப்பில் 2 நாள் தங்கியிருந்தேன். அப்போது நடந்த போட்டிகளில் எனது ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். என்னை கூப்பிடுவதாக சொன்னார்கள். அதனால், நான் எனது ஊருக்கு சென்று விட்டேன். அங்கு சில நாள் தங்கி இருந்த போது தான் எனக்கு அழைப்பு கிடைத்தது.
தமிழ் தலைவாஸ் அணியின் பயிற்சியாளர்களான சஞ்சீவ் பாலியன் மற்றும் சுரேஷ் குமார் ஆகியோரின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது?
இருவரும் எங்களுக்கு அதிகம் கற்றுத் தருகிறார்கள். நாம் விளையாடும் போது தொடர்ந்து ஊக்குவிப்பார்கள். 'பொறுமையாக இரு, எதுவுவாக இருந்தாலும் தைரியமாக செய்' என்று சொல்லி நம்பிக்கை தருவார்கள்.
கபடியில் காயம் தவிர்க்க முடியாதது. அதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
கபடி என்றாலே காயம் ஏற்படுவது சாதாரணம் தான். அதனால் அதற்கு ஏற்றார் போல் பயிற்சிகளை செய்து கொண்டே இருப்பதன் மூலம் காயத்தை தவிர்க்கலாம்.
ஜெர்சியை இழுப்பது சர்ச்சையை கிளப்புகிறது. ஒரு டிஃபெண்டராக உங்கள் கருத்து என்ன?
கபடியில் ஜெர்சியை இழுப்பது அதிகம் இருக்காது. ஆனாலும், நாங்கள் லேசாக தொட்டால் கூட ஜெர்சியை இழுக்கிறோம் என்று சொல்லி விடுகிறார்கள். அது சில நேரங்களில் சிரமமாக இருக்கிறது.
விளையாட்டில் அழுத்தத்தை சமாளிப்பவர்களுக்கே வெற்றி கனிகிறது. அதனை நீங்கள் எப்படி சமாளிக்கிறீர்கள்?
எதைப் பற்றியும் நான் கவலை கொள்வதில்லை. களத்திற்குள் இறங்கி விட்டால் எனது முழுக் கவனமும் போட்டியில் தான் இருக்கும். வெளியில் இருந்து வரும் சத்தங்கள் பற்றி நான் கண்டுகொள்வதில்லை. அதேபோல் மற்ற எதைப் பற்றியும் அதிகம் சிந்திக்க மாட்டேன். தவிர, அழுத்தத்தை கையாள யோகா, தியானம் போன்றவற்றை செய்வதுண்டு.
சொந்த மண்ணில் ஆடியது எப்படி இருந்தது?
சென்னையில் ஆடியது மிகவும் மகிழ்ச்சியை தந்தது. அதிலும் ஒரே போட்டியில் 50 புள்ளிகளுக்கு மேல் எடுத்தது ரொம்பவும் ஹேப்பியாக இருந்தது. நமது ரசிகர்கள் நன்றாக வரவேற்பு அளித்தார்கள். நாங்களும் சிறப்பாக ஆடினோம்.
புள்ளிகள் பட்டியலில் தமிழ் தலைவாஸ் திரும்பவும் சரிந்து விட்டது? மீண்டு வர உங்கள் முயற்சிகள் என்ன?
மேலே வர கண்டிப்பாக முயற்சிப்போம். மீதமுள்ள போட்டிகளில் வெற்றி பெற கடுமையாக உழைப்போம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.