கடந்த 2018ம் ஆண்டு கேப்டவுனில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் போது, ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பேன்கிராப்ட் தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து மஞ்சள் நிறத்தில் ஒருபொருளை எடுத்து பந்தை சேதப்படுத்தினார். இது கேமிராவில் பதிவானதால் கூண்டோடு சிக்கினார் அப்போதைய ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்.
இந்த விவகாரத்தில், ஸ்டீவ், துணை கேப்டர் டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டது.
இரு மெகா வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கையில் மெகா துக்க நிகழ்வாக இது அமைந்தது. இதற்காக இருவருமே கண்ணீர் விட்டு கதறி மன்னிப்புக் கோரினர்.
ஓராண்டு கழித்து மீண்டும் இருவரும் களமிறங்கிய போது, சந்தித்த கிண்டல், கேலி ஏராளம். பழைய ஸ்மித் வார்னராக இருந்திருந்தால், அதனை அவர்கள் எதிர்கொள்ளும் விதமே வேறு மாதிரியாக இருந்திருக்கும். ஆனால், ரசிகர்களின் கிண்டலை இருவரும் ஏற்றுக் கொண்டு அமைதியாக கடந்து சென்றது, அவர்களின் ஓராண்டு கால கண்ணீரின் விளைவாக ஏற்பட்ட பக்குவமாக நாம் பார்க்க முடிந்தது.
உலகக் கோப்பைத் தொடரில், இந்திய ரசிகர்கள் கூட ஸ்மித்தை கேலி செய்ய, அடுத்த நொடியே ரசிகர்களை மைதானத்திலேயே கண்டித்ததோடு மட்டுமில்லாமல், ஸ்மித்துக்கு கைத்தட்டுமாறு கூறி, ஒரு வீரனுக்கான மரியாதையை கொடுத்திருந்தார் இந்திய கேப்டன் விராட் கோலி. விராட்டின் இந்த செயலுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, கோலியின் முதுகில் தட்டிக் கொடுத்து நன்றி தெரிவித்தார் ஸ்மித்.
அதேபோல், ஆஷஸ் தொடரிலும் ஸ்மித், வார்னர் களமிறங்கிய போது, இங்கிலாந்து ரசிகர்களின் ரஃப் ட்ரீட்மென்ட்டில் இருந்து தப்பவில்லை.
இவ்வளவு அவமானங்களையும் சவாலாக எடுத்துக் கொண்ட ஸ்மித், நடந்து முடிந்த ஆஷஸ் தொடரில், 4 டெஸ்ட் போட்டிகளையும் சேர்த்து மொத்தமாக 774 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம், நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் விளாசிய பேட்ஸ்மேன்கள் பட்டியலில் 2ம் இடத்தில் உள்ள சுனில் கவாஸ்கரின் சாதனையை ஸ்மித் சமன் செய்தார்.
ஆஷஸ் தொடரில் ஸ்மித்தின் ஆவரேஜ் 110.57
இதில் 3 சதம், ஒரு இரட்டை சதம் மற்றும் மூன்று அரைசதங்கள் அடங்கும்.
144, 142, 92, 211, 82, 80, 23
இன்னிங்ஸ்: 7 | ரன்கள்: 774 | ஆவரேஜ்: 110.57 | 100s: 3 | 50s: 3
இங்கிலாந்து வீரர்களின் கேலி, கிண்டலுக்கு 774 ரன்களை பரிசாக, பதிலாக அளித்திருந்தார் ஸ்மித். இவரது இந்த அபார ஆட்டத்தால், ஆஸ்திரேலியா கடைசி டெஸ்ட்டில் தோற்றாலும், ஆஷஸ் தொடரை 2-2 என்ற கணக்கில் டிரா செய்து, கடந்த முறை ஆஷஸ் சாம்பியன் என்ற முறையில் கோப்பையை தக்கவைத்துக் கொண்டது.
இவ்வளவு சாதனைகளையும், ஆக்ரோஷமின்றி, ஆர்ப்பாட்டமின்றி செய்து முடித்த ஸ்மித், கடைசி டெஸ்ட்டில் கடைசி இன்னிங்ஸில் அவுட்டாகி வெளியேறிய போது, மைதானம் முழுவதும் நிரம்பியிருந்த இங்கிலாந்து ரசிகர்கள் எழுந்து நின்று மரியாதை கொடுத்தனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
தோல்வியை வெற்றியாக மாற்றுவது பெரிய விஷயமல்ல.. ஆனால், ஊரே ஒன்று கூடி தூற்றிய ஒருவனை, அந்த ஊரையே கைத்தட்டி வாழ்த்த வைப்பது என்று அவ்வளவு சாதாரணமான காரியம் அல்ல...
ஸ்மித் யூ ஆர் ராக்ஸ்!