கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா, இலங்கை அணிகள் இடையே நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவானது. 231 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இலங்கை, 75 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்பில் நின்றது. போதிய வெளிச்சமின்மையால் இறுதி நாள் ஆட்டம் மாலை 4.30 மணிக்கு முடிக்கப்பட்டதால், தோல்வியில் இருந்து இலங்கை எஸ்கேப் ஆனது.
முதல் இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகள், இரண்டாம் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் என மொத்தம் 17 விக்கெட்டுகளையும் முழுவதுமாக கைப்பற்றியது இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் தான். அதிலும், புவனேஷ் குமாரும், ஷமியும் பெரும்பாலான விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இத்தனை ஆண்டுகால இந்திய கிரிக்கெட் வராலாற்றில், இந்திய மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டியில், ஸ்பின்னர்கள் விக்கெட்டை வீழ்த்தாமல் போனது இதுதான் முதல்முறையாகும். இதனால், அஷ்வின் மற்றும் ஜடேஜா குறித்து ரசிகர்கள் சமூக தளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
ஆனால், இவர்களை குறை சொல்வதில் ஒரு சிறு முகாந்திரம் கூட இங்கு இல்லை. இப்போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து மொத்தமாக 10 ஓவர்கள் மட்டுமே இருவரும் பந்து வீசியுள்ளனர்.
முதல் இன்னிங்சில் அஷ்வின் 8 ஓவரும், ஜடேஜா ஒரேயொரு ஓவரும் மட்டுமே வீசினார்கள். 2-வது இன்னிங்சில் ஜடேஜா ஒரு ஓவர் வீசினார். அஷ்வின் ஓவர்கள் வீசவில்லை. 110.1 ஓவரில் இருவரும் 10 ஓவர்கள் மட்டுமே வீசினார்கள். இதனால், அவர்களால் விக்கெட்டும் வீழ்த்த முடியவில்லை.
இதற்கு முக்கிய காரணம் ஆடுகளத்தின் தன்மை. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் போட்டி தொடங்குவதற்கு முன்பிலிருந்தே அவ்வப்போது மழை பெய்து வந்தது. இதனால், ஆட்டம் தொடங்கிய போது, பிட்ச் வேகப்பந்து வீச்சுக்கு மிகச் சிறப்பாக ஒத்துழைத்தது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 172 ரன்களில் சுருண்டதே இதற்கு உதாரணம்.
இதனால் தான் கேப்டன் கோலி, ஃ பாஸ்ட் பவுலர்களிடமே பந்தை கொடுத்தார். இவர் மட்டுமல்ல, தோனி இருந்திருந்தால் கூட இதைத் தான் செய்திருப்பார். இதனை இந்திய அணி நிர்வாகம் நன்கு உணர்ந்து வைத்துள்ளது. ஆனால் சிலர், சமூக தளங்களில் 'ஸ்பின்னர்கள் விக்கெட்டே வீழ்த்தவில்லை... அஷ்வின், ஜடேஜா பவுலிங் சரியில்லை' என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.
சாஹல், குல்தீப் யாதவ் வரவுக்கு பிறகு அஷ்வின், ஜடேஜா மெல்ல மெல்ல அணியில் இருந்து ஒதுக்கப்பட்டு வருவதை இங்கு நாம் நினைவில் கொள்ள வேண்டும். ரசிகர்களின் இந்த விமர்சனத்திற்கு இதுவரை பிசிசிஐ-யோ, கேப்டன் விராட் கோலியோ மறுப்பு அறிக்கை ஏதும் வெளியிடவில்லை.
இதுபோன்ற ரசிகர்களின் கருத்துகளுக்கு பதில் சொல்லத் தேவையில்லை என்று நினைக்கிறார்கள் என காரணம் சொன்னாலும், சமீபத்திய நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் தோனியின் ஆட்டம் குறித்து ரசிகர்கள் விமர்சனம் செய்த போது சீறிப் பாய்ந்த கேப்டன் கோலி, இதற்கு மட்டும் வாய்த் திறக்காமல் இருப்பது ஏன்? அஷ்வின், ஜடேஜா வெளியேற்றத்துக்கு இது ஒரு பிள்ளையார் சுழி என்று நினைக்கிறார்களோ தெரியவில்லை.
இன்னும் ஒரு கூடுதல் தகவல்.. இலங்கைக்கு எதிராக அடுத்து நடைபெறவுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கும், மைதானத்தை வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக தயாரிக்குமாறு மைதான அமைப்பாளர்களிடம் இந்திய அணி நிர்வாகமும், கேப்டன் கோலியும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம், இத்தொடரின் முடிவில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பெரிய அளவில் கிரெடிட் கொடுக்கப்பட்டு, ரசிகர்கள் மத்தியில் அஷ்வின் மற்றும் ஜடேஜாவிற்கு இருந்த இமேஜை காலி செய்து அவர்களை சத்தம் போடாமல் ஓரங்கட்ட பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கேப்டன் கோலிக்கு குல்தீப் மற்றும் சாஹல் ஃபேவரைட் வீரர்களாக இருப்பதால் தான் இந்த முடிவாம். தோனியின் சகாப்தம் முடிவடைந்த பிறகு, அவரது ஃபேவரைட் வீரர்களின் சகாப்தமும் கொஞ்சம் கொஞ்சமாக முடிவுக்கு கொண்டுவரப்படுகிறது. (ரெய்னாவை நாம் மறந்து பல யுகங்கள் ஆகிவிட்டது).
பிட்ச்களை வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக தயாரிக்க கோரியிருக்கும் தகவலை அறிந்து அதிர்ச்சியில் உள்ளார்களாம் தோனியின் பழைய சகாக்கள் இருவரும்!.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.