தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஷ்வின் இந்திய கிரிக்கெட் அணியின் 'பவுலிங் கிங்' என்று சொல்லும் அளவிற்கு மிக முக்கியமான வீரராக விளங்குகிறார். சாம்பியன்ஸ் தொடருக்கு தயாராகும் விதமாக, நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக கலந்து கொள்ளாமல் முழுவதுமாக ஓய்வில் இருந்தார் அஷ்வின்.
இந்தியாவில் நடந்த நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்கதேசம், ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரை வெல்ல முக்கிய காரணியாக அஷ்வின் விளங்கினார். குறிப்பாக கடந்த 12 மாதங்களில் 99 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.
இந்நிலையில், 'ஆண்டின் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான விருது' அஷ்வினுக்கு வழங்கப்பட்டுள்ளது. சியட் கிரிக்கெட் தரவரிசையின் 2017-ஆம் ஆண்டிற்கான சர்வதேச விருது வழங்கும் விழாவில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர், ஹர்ஷ் கோயங்கா ஆகியோர் இந்த விருதினை அஷ்வினுக்கு வழங்கியுள்ளனர்.
தொடர்ந்து பேசிய அஷ்வின், சிறுவயதில் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில், சுனில் கவாஸ்கரிடம் தான் பெற்ற ஆட்டோகிராஃப் குறித்து நினைவு கூர்ந்தார். மேலும், "நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில், தமிழகத்தின் 'வாஷிங்டன் சுந்தர்' சிறப்பாக பந்துவீசியதாகவும், டி20-ல் எப்படி பந்துவீச வேண்டும் என்பதை சுந்தர் நன்கு அறிந்து வைத்திருப்பதாகவும் அஷ்வின் பாராட்டினார்.