Asia Cup 2022 - indian cricket Tamil News: ஐக்கிய அரபு அமீரக மண்ணில் கோலாகலமாக நடைபெற்ற 15 வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த ஞாயிற்று கிழமையுடன் நிறைவுற்றது. இத்தொடருக்கான இறுதிப்போட்டியில் இலங்கை - பாகிஸ்தான் அணிகள் துபாயில் பலப்பரீட்சை நடத்தின. இதில் 23 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இலங்கை அணி 6 முறையாக ஆசிய கோப்பையை முத்தமிட்டது.
2022 - ஆசிய கோப்பை தோல்வி
நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா அதன் முதலாவது லீக் ஆட்டத்தில் (ஆகஸ்ட் 28ம் தேதி), கிரிக்கெட்டில் பரம போட்டியாளரான பாகிஸ்தானை துபாயில் நேருக்கு நேர் சந்தித்தது. இந்த ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடர்ந்து லீக் சுற்று ஆட்டத்தில் (ஆகஸ்ட் 31) ஹாங்காங் அணியை எதிர்கொண்ட இந்தியா 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்பிறகு சூப்பர் 4 சுற்றுக்கு 2வது அணியாக முன்னேறிய இந்தியா, கடந்த 4 ஆம் தேதி நடந்த ஆட்டத்தில் மீண்டும் பாகிஸ்தானை சந்தித்தது. இம்முறை முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்த பாகிஸ்தான் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை சாய்த்தது. இதனைத் தொடர்ந்து நடந்த சூப்பர் 4 சுற்றில் இலங்கையை எதிர்கொண்ட இந்தியா அந்த அணியிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது.
இப்படி தொடர் தோல்விகளால் துவண்ட இந்தியா, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் (செப்டம்பர் 08) 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆறுதல் வெற்றியுடன் தொடரையும் நிறைவு செய்து, இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமல்லாது, உலக முழுதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை அளிக்கும் வகையில் அமைந்து போனது.
"தோல்விகள் வெற்றியின் முதல் படிக்கட்டு" என்கிற கூற்றுக்கு ஏற்ப இந்திய கிரிக்கெட் அணி தற்போது அக்டோபரில் நடக்கவிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடுவதில் கவனம் செலுத்தி வருகிறது. இருப்பினும், உலக கிரிக்கெட் அரங்கில் பலம் பொருத்திய அணியாக வலம் இந்தியாவால் ஏன் ஆசிய கோப்பையை வசப்படுத்த முடிவில்லை? அப்படி என்ன தவறு நடந்து? அதிலிருந்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் என்ன? என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
இந்தியா கற்றுக்கொள்ள வேண்டிய 3 முக்கிய பாடங்கள்
டாப் ஆடரின் சொதப்பல் பேட்டிங்
நடப்பு ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் வலுவான பேட்டிங் வரிசை இருந்தாலும், ஒட்டுமொத்த ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. குறிப்பாக, பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க வீரர் கே.எல் ராகுல் மொத்தமாகவே 32 ரன்கள் தான் எடுத்தார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக கோலி தனது 71வது சதத்தை பதிவு செய்திருந்தாலும், அதற்கு முந்தைய இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் பூஜ்ஜிய ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறி இருந்தார். இதனால், சிறப்பான மற்றும் வலுவான தொடக்கம் கிடைக்காத இந்திய அணி மிடில் ஓவர்களில் ரன்கள் சேர்க்க தட்டுத் தடுமாறியது.
இலங்கைக்கு எதிராக கேப்டன் ரோகித்தின் அதிரடி ஆட்டம், அவருக்கு பின்னால் களமாடிய வீரர்களால் தொடரப்படவில்லை. இதேபோல் பாகிஸ்தானுக்கு எதிராக கோலி தனி ஒருவனாக போராடி, இறுதியில் ரன் -அவுட் ஆகி வெளியேறினார். ராகுலின் திணறல் ஆட்டத்தால், தொடரின் கடைசி வரையிலும் சிறப்பான தொடக்க ஜோடி ஆட்டத்தை காண இயலாமல் போனது. அதோடு அவரின் ஸ்டரைக் ரேட்டும் வீழ்ந்தது. எதிர் வரும் டி20 உலக கோப்பை தொடரிலும் இதே டாப் ஆடர் மீண்டும் களமாட உள்ள நிலையில், இந்த மும்மூர்த்திகள் தங்களின் தவறுகளை கலைந்து, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், அணிக்கு சொல்லில் அடங்காத தொடக்கம் கிடைக்கும்.
பண்ட் vs டி.கே
ஆசிய கோப்பைக்கான இந்திய அணி மிடில்-ஆடரில் ஜடேஜா இருந்த வரையில், அணி வலுவாக இருந்தது. காயம் காரணமாக அவரின் திடீர் விலகல், அந்த வரிசையில் பெரும் குழம்பத்தை ஏற்படுத்தியது. ஏன்னென்றால், ஜடேஜாவின் விலகலுக்கு முன்பு வரை, இந்தியாவின் டாப் வரிசையில் இருந்த அனைத்து பேட்ஸ்மேன்களும் வலது கை ஆட்டக்காரர்கள். இதனால், ஜடேஜாவுக்கு எந்த இடத்தில் வேண்டுமாலும் களமிறக்கி ஆடும் சுதந்திரம் வழங்கப்பட்டது. ஆனால், அவரது விலகலுக்குப்பின், அந்த வாய்ப்பு இடது கை ஆட்டக்காரரான பண்ட்டுக்கு கொடுக்கப்பட வேண்டுமா? அல்லது வலது கை ஆட்டக்காரரான தினேஷ் கார்த்திக்கு கொடுக்கப்பட வேண்டுமா? என்பதில் குழப்பம் நீடித்தது.
இறுதியில், இடது கை ஆட்டக்காரரான பண்ட்க்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், கிடைத்தை வாய்ப்பை கடைசி வரை உருப்புடியாக பயன்படுத்தாமல் வெளியேறினார் பண்ட். இலங்கை - பாகிஸ்தானுக்கு எதிராக அவர் எடுத்த மொத்த ரன்கள் வெறும் 31 ரன்கள் தான். இதேபோல், பாகிஸ்தானுக்கு எதிரான தொடக்க லீக் ஆட்டத்தில் ஆல்ரவுண்டராக ஜொலித்த ஹர்டிக் பாண்டியா, அந்த அணிக்கு எதிரான சூப்பர் 4 ஆட்டத்தில் டக்-அவுட் ஆகி வெளியேறி இருந்தார். பந்துவீச்சிலும் ஒரு விக்கெட் மட்டும் எடுத்து 44 ரன்களை விட்டுக்கொடுத்தார்.
ஹாங்காங் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 சிக்ஸர் 6 பவுண்டரி என 68 ரன்களை விளாசிய அதிரடி சூர்யகுமார் யாதவ் அதன்பிறகு நடந்த ஆட்டங்களில் பெரிதும் சோபிக்கவில்லை. சூப்பர் 4 சுற்றில் அவர் எடுத்த மொத்த ஸ்கோர் வெறும் 53 ரன்கள் மட்டுமே. மேலும், சுமாரான ஸ்ட்ரைக் ரேட் சராசரியுடனே தொடரை முடித்துக்கொண்டார்.
அயர்லாந்துக்கு எதிராக சதமடித்து 104 ரன்கள் குவித்த ஆல்ரவுண்டரான தீபக் ஹூடாவை இந்திய அணி நிர்வாகம் கடைசி வரை சரியாக பயன்படுத்தவில்லை. மேலும், அணியில் அவருக்கு குறிப்பிட்ட இடத்தை வழங்காமல் போனது, அணியின் பேட்டிங் வரிசையில் குழப்பம் மேலும் அதிகரிக்க செய்தது.
மோசமான பந்துவீச்சு
இந்தியாவை எதிர்கொள்ளும் அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து, வேக மற்றும் சுழல் தாக்குதல் நடத்தும் இந்திய பந்துவீச்சு வரிசை, நடப்பு ஆசிய கோப்பை தொடரில் பெரும் பலவீனப்பட்டு போனது. பவர் பிளே மற்றும், டெத் ஓவர்களில் ரன்களை வாரி வாரி வழங்கினார்கள். பாகிஸ்தானுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் எடுபட்ட புவியின் ஸ்விங் பந்துகள், அதன்பிறகான ஆட்டங்களில் அவருக்கு கை கொடுக்கவில்லை. குறிப்பாக, இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 ஆட்டங்களில் ரன்கள் எடுப்பதை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை.
யுஸ்வேந்திர சாஹல் சுழலில் ஜாலம் செய்தாலும், அவர் அதிக ரன்களை விட்டுக்கொடுப்பவராகவே இருந்தார். அர்ஷ்தீப் சிங் தற்போது தான் டெத் ஓவர்களுக்கு பழக்கப்படுத்தப்பட்டு வருகிறார். அவரின் பந்துவீச்சில் குறிப்பிட்ட முன்னேற்றத்தை எட்டியுள்ளார் என்றே குறிப்பிடலாம். அவேஷ் கானுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைபாடு அணியின் பந்துவீச்சு வரிசைக்கு சற்று பின்னடைவை கொடுத்தது. இவையனைத்தையும் அணி நிர்வாகம் கணக்கில் எடுத்துக்கொள்ளும் என்று நம்பலாம்.
வருகிற அக்டோபரில் நடைபெறவுள்ள டி20 உலக கோப்பை தொடரில் இதே இந்திய அணியே தெரிவு செய்யப்பட்டுள்ளது. அணியின் பந்துவீச்சு வரிசைக்கு பலம் சேர்க்கும் வகையில் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு திரும்பியுள்ளார். அவருக்கு உறுதுணையாக செயல்பட ஹர்ஷல் படேல் அணியில் இடம்பிடித்துள்ளார். எனவே, மேலே குறிப்பிட்ட குறைபாடுகளில் இருந்து இந்திய அணி பாடம் கற்று, டி20 உலக கோப்பைக்கு ஒரு வலுவான அணியைக் கட்டமைக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஆனால், இந்திய அணியில் இதே சூழல் நிலவும் பட்சத்தில் இந்தியாவின் டி20 உலக கோப்பை கனவு, வெறும் கனவாகவே மாறிபோகும்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.