ஆசிய தடகள போட்டி: முதலிடம் பிடித்து இந்தியா வரலாற்றுச் சாதனை

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளின் பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்து இந்தியா வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளின் பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்து இந்தியா வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் 22-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி, கடந்த 5-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. 45 நாடுகளை சேர்ந்த மொத்தம் 800 வீரர்கள் பங்கேற்ற இந்த போட்டியில், இந்தியாவிலிருந்து 49 வீரர்கள், 46 வீராங்கனைகள் என மொத்தம் 95 பேர் பங்கேற்றனர். இந்த போட்டியில் தொடக்கத்தில் இருந்தே இந்திய வீர, வீராங்கனைகள் பதக்க வேட்டையில் இறங்கினர்.

மகளிருக்கான குண்டு எறிதலில் முதலாவது தங்கப்பதக்கத்தை இந்தியா கைப்பற்றியது. பஞ்சாப்பை சேர்ந்த மன்ப்ரீத் கௌர் 18.28 மீட்டர் தூரம் குண்டை வீசி பதக்கத்தை கைப்பற்றினார். நீளம் தாண்டுதலில் இந்திய வீராங்கனை நீனா வெள்ளிப் பதக்கத்தையும், நைனா ஜேம்ஸ் வெண்கல பதக்கத்தயைும் வென்றனர். மகளிருக்கான 5000 மீட்டர் ஓட்டத்தில் மகாராஷ்டிரத்தை சேர்ந்த சஞ்சு யாதவ் 3-ம் இடத்தை பிடித்தார்.

4 x 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் குனு முகமது, முகமது அனாஸ், ஆரோக்ய ராஜீவ், அமோஜ் ஜாக்கப் ஆகியோர் அடங்கிய இந்திய ஆண்கள் அணியும், நிர்மலா ஷெரான், பூவம்மா, ஜிஸ்னா, தபஸ்ஸ்ரீ ஆகியோரை கொண்ட இந்திய பெண்கள் குழுவினரும் தங்கப் பதக்கத்தை வென்றனர்.

ஆண்களுக்கான குண்டு எறிதலில் நடப்பு சாம்பியன் விகாஸ் கும்ரா, வெண்கல பதக்கம் வென்றார். முதல் நாளில் 2 தங்கம், ஒரு வெள்ளி உள்பட 7 பதக்கங்களை இந்தியா கைப்பற்றியது. இறுதி நாளான நேற்று 2 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் என ஐந்து பதக்கங்களை இந்தியா கைப்பற்றியது.

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஜொலித்த தமிழக வீரர் லட்சுமணன், ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில், 29 நிமிடம் 55.87 வினாடிகளில் இலக்கை அடைந்து தங்கப் பதக்கத்தை தனதாக்கினார். முன்னதாக, ஆடவருக்கான 5000 மீட்டர் ஓட்டத்திலும் இவர் முதலிடம் பிடித்து அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

நேற்றுடன் முடிவடைந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில், 12 தங்கம், 5 வெள்ளி, 12 வெண்கலம் என்று மொத்தம் 29 பதக்கங்களுடன் இந்தியா முதலிடம் பிடித்தது. ஆசிய தடகள சாம்பியன்ஷிப் வரலாற்றில் இந்தியா பதக்கப்பட்டியலில் முதலிடத்தை பிடித்திருப்பது இதுவே முதல் முறையாகும். 8 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம் என்று 20 பதக்கத்துடன் சீனா 2-வது இடத்தையும், தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலத்துடன் கஜகஸ்தான் 3-வது இடத்தையும் பெற்றது.

இதற்கு முன்னதாக, கடந்த 1985-ஆம் ஆண்டு போட்டியில் 10 தங்கம் உள்பட 22 பதக்கங்களை இந்தியா வென்றிருந்தது.

×Close
×Close