Asian Games 2018: 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி இந்தோனேசியாவில் தொடங்கியது. செப்டம்பர் 2ம் தேதி வரை இப்போட்டிகள் நடைபெற உள்ளது. இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவிலும், தெற்கு சுமத்ரா தலை நகர் பாலேம்பங்கிலும் இப்போட்டிகள் நடைபெறுகிறது. இந்தத் தொடரில், 15,000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்தியா, சீனா, பாகிஸ்தான், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், நேபாளம், ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், வங்கதேசம், பூட்டான், புரூனே, சீன தைபே, கிழக்கு தைமூர், ஹாங் காங், இந்தோனேஷியா, ஈரான், ஈராக், ஜோர்டான், கஜகஸ்தான், வடகொரியா, தென் கொரியா, கிர்கிஸ்தான், லாவோஸ், லெபனான், மக்காவு, மாலத்தீவுகள், மங்கோலியா, மியான்மார், ஓமன், பாலஸ்தீனம், பிலிப்பைன்ஸ், கத்தார், சிரியா, தஜிகிஸ்தான், தாய்லாந்து, துருக்மேனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், வியட்நாம், ஏமன் உள்ளிட்ட நாடுகள் இந்த ஆசிய விளையாட்டுத் தொடரில் பங்கேற்றுள்ளன.
நீச்சல், வில்வித்தை, தடகளம், பாட்மிண்டன், பேஸ்பால், கூடைப்பந்து, குத்துச்சண்டை, சைக்கிளிங், குதிரையேற்றம், வாள்வீச்சு, ஹாக்கி, கால்பந்து, கோல்ஃப் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.
Asian Games 2018: இப்போட்டியின் லைவ் அப்டேட்ஸ் இங்கே,
4.00 pm: பெண்களுக்கான கபடி போட்டியின் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. இந்தியா - சீன தைபே அணிகள் மோதின. இதில், இந்திய வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி 27-14 என வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்கள். இந்தியா இறுதிப் போட்டியில் ஈரானை எதிர்கொள்கிறது.
2.45 pm: துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ஆண்களுக்கான டபுள் டிரப் பிரிவின் இறுதிப் போட்டியில், இந்திய அணியில் பங்கு பெற்ற 15 வயதே ஆன ஷர்துல் விஹான் என்ற சிறுவன், 73 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். 34 வயதான ஹியுன்வூ ஷின் 74 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் வென்றார். ஒரு புள்ளி வித்தியாசத்தில் ஷர்துல் விஹான் தங்கப் பதக்கத்தை தவறவிட்டார்.
12.50 pm: தமிழகத்தைச் சேர்ந்த பளு தூக்கும் வீரர் சதீஷ் குமார் சிவலிங்கம், 77 கிலோ எடைப் பிரிவில் இரண்டாவது சுற்றில் தனது வாய்ப்பை தவறவிட்டுள்ளார்.
12.30 pm : டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா - சீனாவின் சங் ஷுவாயுடன் மோதினார். இதில், 4-6, 7-6 என்ற செட் கணக்கில் சங் வெற்றிப் பெற்றார். இருப்பினும், அரையிறுதியில் தோற்றதால், அங்கிதாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.
12.10 pm : டென்னிஸ் போட்டியில், ஆண்கள் இரட்டையர் பிரிவின், முதல் அரையிறுதிப் போட்டியில் இன்று விளையாடிய இந்தியாவின் போபண்ணா - ஷரன் ஜோடி, ஜப்பானின் உசுகி கைடோ - ஷிமா ஜோடியை 2-1 என்று வீழ்த்தி வெற்றிப் பெற்றது. இதன் மூலம் வெள்ளிப்பதக்கத்தை இந்தியா உறுதி செய்துள்ளது.