இந்தியாவில் நடைபெறும் ஏ.டி.பி டென்னிஸ் போட்டியான சென்னை ஓபன் டென்னிஸ், அடுத்த ஆண்டு புனேவிற்கு மாற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
தமிழக அரசு சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியை நடத்துவதற்கு, இப்போட்டியை நடத்தும் ஐ.எம்.ஜி-யுடன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் 3 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த ஒப்பந்தத்தின் படி சென்னை ஓபன் சுமார் 3 ஆண்டுகளுக்கு சென்னையில் தான் நடைபெறும் என தெரிகிறது. ஆனாலும், தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் குழப்பத்தினால், தமிழக அரசு நிதி நெருக்கடியை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தமிழக டென்னிஸ் சங்கம் சென்னை ஓபன் போட்டியை நடத்துவது குறித்து போடப்பட்ட ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற வேண்டிய நிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
எனினும், தமிழக அரசு மற்றும் தமிழக டென்னிஸ் சங்கம் ஆகியவவை இந்த தகவலை மறுத்துள்ளன. இது குறித்து தமிழக அரசின் உயரதிகாரி ஒருவர் கூறும்போது: சென்னை ஓபன் டென்னிஸை நடத்துவதற்கு, நிதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்பதில் உண்மையில்லை. சென்னை ஓபன் நடத்துவதற்காக தமிழக அரசு ஆண்டு தோறும் ரூ.2 கோடி வழங்கி வருகிறது. எனவே, சென்னை ஓபன் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும். போட்டி ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருக்கும் பட்சத்தில், அது தொடர்பாக அவர்கள் அரசிடம் தெரிவிக்கலாம். அது குறித்து அரசு பரிசீலனை செய்யும். ஆனால், இந்தவிவகாரம் தொடர்பாக இதுவரை யாரும் அரசிடம் தொடர்பு கொண்டு பேசவில்லை என்று தெரிவித்தார்.
தமிழக டென்னிஸ் சங்கமும் இந்த தகவலை மறுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக டென்னிஸ் சங்கத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிப்பதாவது: சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியை நடத்துவதில் எந்த வித பிரச்சனையும் இல்லை.போட்டிகள் பங்கேற்கும் வீரர்கள் குறித்த பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. அடுத்த மாதத்தில் வீரர்களின் பட்டில் ஐஎம்ஜி-யிடம் சமர்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டின் தொடக்கத்தில், அதாவது ஜனவரி மாதத்தின் முதல் வராத்தில் இந்த சென்னை ஓபன் போட்டிகள் கடந்த 21- ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகின்றன. சென்னையின் கிளைமேட் மற்றும் போட்டி நடத்தப்படும் டென்னிஸ் மைதானம் ஆகியவை கிட்டத்தட்ட ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியுடன் ஒத்துபோகும் வகையில் இருந்துவருகிறது. எனவே தான், டென்னிஸ் போட்டிகளின் முன்னணி வீரர்களான சுவிச்சர்லாந்தின் வாவ்ரிங்கா, குரேசியாவின் மரின் சிலிக் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மகராஷ்டிரா டென்னிஸ் சங்கத்தில் இருந்து வெளிவரும் தகவல் தெரிவிப்பதாவது: போட்டியை நடத்தும் ஐஎம்ஜி, புதிய இடத்தை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளது. கடந்த முன்று மாதங்களுக்கு முன்னதாகவே இதற்கான பணியை ஐஎம்ஜி தொடங்கிவிட்டது. இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள பகுதிகளில் சிங்கப்பூர், பாங்காங்-ம் அடங்கும். மேலும், மகாராஷ்ட்ரா டென்னிஸ் சங்கத்துடனும் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது என்று தகவல் தெரிவிக்கின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.