திருடனுக்கு தேள் கொட்டிய நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி! மறக்க முடியாத பாடம்!

ஆக்ரோஷம் என்பது களத்தில் தான் இருக்க வேண்டுமே தவிர, வாயில் இருந்தால் என்ன நடக்கும் என்பதற்கு இப்போட்டி மிகச் சரியான உதாரணம்.

ஆக்ரோஷம் என்பது களத்தில் தான் இருக்க வேண்டுமே தவிர, வாயில் இருந்தால் என்ன நடக்கும் என்பதற்கு இப்போட்டி மிகச் சரியான உதாரணம்.

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
திருடனுக்கு தேள் கொட்டிய நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி! மறக்க முடியாத பாடம்!

ANBARASAN GNANAMANI

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கேப்டவுனில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில், தென்னாப்பிரிக்கா 322 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இதனால், மனரீதியாக ஆஸ்திரேலிய அணியினர் நொந்து போயுள்ளனர்.

Advertisment

பரம எதிரியான இங்கிலாந்திற்கு எதிராக விளையாடிய போது கூட ஆஸ்திரேலியா இவ்வளவு காயங்களையும், அவமானங்களையும் அடைந்தது கிடையாது. ஆனால், தென்னாப்பிரிக்க தொடரில் அடி மேல் அடி ஆஸ்திரேலிய அணிக்கு.

டர்பனில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 118 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. போட்டியின் போது களத்தில் எதிரணி வீரர்களிடம் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடுவது, ரபாடாவுடன் மோதல், ரசிகர்களை உசுப்பேத்துவது என சற்று எல்லைமீறி ஆட்டம் போட்டது ஆஸ்திரேலியா. இதுதான் இன்று அந்த அணி அடைந்திருக்கும் அவமானத்திற்கு பிள்ளையார் சுழி போட காரணமாக அமைந்தது.

முதல் போட்டியில் வெற்றி பெற்ற பின்னர், இரு அணி வீரர்களும் தங்களது அறைக்கு திரும்பிக் கொண்டிருந்த போது, டி காக்கிற்கும், வார்னருக்கும் வார்த்தைப் போர் ஏற்பட்டது. வார்னரின் மனைவி கேண்டிஸ் குறித்து, டி காக் கீழ்த்தரமான வார்த்தைகளை உபயோகித்ததாகவும், இதனாலேயே வார்னர் கோபப்பட்டு அவரை கடுமையாக திட்டியதாகவும் கூறப்பட்டது.

Advertisment
Advertisements

தொடரின் ஆரம்பமே, இவ்வளவு மோசமாக தொடங்கிய பின்னர், போர்ட் எலிசபெத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா வென்று பதிலடி கொடுத்தது.

இதைத் தொடர்ந்து, மூன்றாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் தொடங்கியது. ஆஸ்திரேலியா கொஞ்சம் அடக்கி வாசித்தது. ஆனால், முதல் இன்னிங்ஸில் வார்னர் அவுட்டாகி பெவிலியன் திரும்பிய போது ரசிகர் ஒருவர், வார்னரின் மனைவி குறித்தும், அவரது அந்தரங்க வாழ்க்கை குறித்தும் கீழ்த்தரமாக விமர்சித்தார். இதனால் இருவருக்குள்ளும் வாய்த் தகராறு ஏற்பட்டது. அன்று மட்டும் கிட்டத்தட்ட 10 ரசிகர்கள், வார்னரை கீழ்த்தரமாக விமர்சித்ததற்காக மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

ஆனால், இந்த எல்லா சர்ச்சைகளையும் ஒரே நிமிடத்தில் ஓவர்டேக் செய்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் பேன்க்ரோஃப்ட், பந்தை தங்கள் பவுலர்களுக்கு ஏற்றார் போல சேதப்படுத்தி சிக்கினார். சரி.. இது ஒன்னும் பெரிய விஷயமல்ல... எங்கும் நடக்காததா...? என்று நாம் நினைக்கும் பொழுது, ஆஸ்திரேலிய அணியின் கேப்டன், துணை கேப்டன் ஆலோசனைப்படி தான் அவர் இவ்வாறு நடந்து கொண்டார் என தெரிய வந்தது மாஸ் ஹைலைட்!.

பாப்ரே.. என்ன இப்படி பன்னிட்டானுங்க ஸ்மித்தும், வார்னரும்-னு எல்லோரும் நினைக்க, ஆஸ்திரேலிய ஊடகங்களே ஆஸ்திரேலிய அணியை காய்ச்சி எடுத்துவிட்டது. உலகின் தலை சிறந்த அணி-னு மார்தட்டிய அணிக்கு உலகம் முழுவதிலும் இருந்து விம்சனங்கள் மேகத்தில் இருந்து பொழிந்தன.

கேப்டனையும், துணை கேப்டனையும் பதவியில் இருந்து விலக ஆஸ்திரேலிய அரசே உத்தரவிட, ஆடிப் போனது ஆஸ்திரேலிய நிர்வாகம். இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய, யாரை கேப்டனாக்குவது என்று தெரியாமல், 'முதல்ல அந்த தொடரை முடிச்சிட்டு வந்து சேருங்க-னு' ஆடிக்கு ஒரு முறையும், அமாவாசைக்கு ஒரு முறையும் அணியில் சேர்க்கப்படும் டிம் பெய்னை கேப்டனாக்கியது ஆஸி., நிர்வாகம்.

திருடனுக்கு தேள் கொட்டிய மன நிலையில் இருந்த ஆஸி., அணியால், தென்னாப்பிரிக்காவை எதிர்த்து போராட முடியவில்லை. முடிவில் 3வது டெஸ்ட்டில் 322  ரன்கள் வித்தியாசத்தில் மெகா தோல்வி பெற்றது ஆஸ்திரேலியா. 48 ஆண்டுகளுக்கு பிறகு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மிகப்பெரிய டெஸ்ட் தோல்வியை பெற்றது ஆஸ்திரேலிய அணி. இதற்கு முன்னதாக, 1970ம் ஆண்டு 323 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவிடம் தோற்று இருந்தது.

இப்போது, கூட்டுச் சதியில் ஈடுபட்டிருக்கும் ஸ்மித்தும், வார்னரும் எங்கே தங்களுக்கு ஆயுட்கால தடை விதிக்கப்பட்டுவிடுமோ என்று ஒவ்வொரு நிமிடத்தையும் ஜென்மங்களாக கடத்திக் கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமின்றி, ஐபிஎல்-ல் ராஜஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஸ்மித் நீக்கப்பட்டுள்ளார்.

ஆக்ரோஷம் என்பது களத்தில் தான் இருக்க வேண்டுமே தவிர, வாயில் இருந்தால் என்ன நடக்கும் என்பதற்கு இப்போட்டி மிகச் சரியான உதாரணம்.

டெஸ்ட் உலகில், அதுவும் தற்போதைய நவநாகரீக கிரிக்கெட் உலகில், நம்பர்.1 வீரர் ஸ்டீவ் ஸ்மித் தான். ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் மிகப்பெரிய நம்பிக்கை நாயகனாக வலம் வருபவர் இவர். ஆனால், இப்போது ஸ்மித்தால் 'ஆட்டம்' கண்டிருக்கும் ஆஸி., கிரிக்கெட் வாரியம், மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் உள்ளது. சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில், தங்க ஊசி என்பதற்காக வயிற்றில் குத்திக் கொள்ள முடியுமா? என்ற நிலையில் ஆஸி., கிரிக்கெட் வாரியம் உள்ளது.

அதே சமயம், தென்னாப்பிரிக்க இளம் வீரர்களும், பாடங்களை கற்றுக் கொள்ளும் சரியான வாய்ப்பு இது. ஆஸி., வீரர்களை வெறுப்பேற்றும் விதமாக நடந்து கொண்ட ரபாடா, இவன் நல்லவனா? கெட்டவனா? என்று தெரியாத அளவிற்கு முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு, சந்தில் சிந்து பாடும் டி காக் உள்ளிட்ட சில வீரர்களுக்கு இந்த தொடர் ஒரு பாடம். குறிப்பாக, தங்கள் நாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த, எதிரணி வீரரின் குடும்ப வாழ்க்கையை விமர்சிக்கும் தென்னாப்பிரிக்க ரசிகர்களுக்கும் இத்தொடர் ஒரு பாடம் தான்.

David Warner

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: