"வார்னரை வெளியே போகச் சொல்லுங்கள்; இல்லையேல் 'சம்பவம்' நடக்கும்!" - எச்சரித்த ஆஸி., வீரர்கள்

ஆஸ்திரேலிய அணியின் நிலைமை இப்போது எங்கு சென்றுக் கொண்டிருக்கிறது என்றே தெரியவில்லை!.  ஆனால், அடுத்த போட்டியில் விளையாடுவதற்காக ஆஸி., அணி ஜோகன்னஸ்பெர்க் சென்றுள்ளது. அதேசமயம், துணை கேப்டன் பதவியில் இருந்து விலகிய டேவிட் வார்னரின் செயல்பாடு தான் மிகவும் கவலைத்தரும் நிலைக்கு மாறியுள்ளது. அவர் இனிமேல் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடப் போவதில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன. அவரது கடந்த சில நாட்களின் செயல்பாடுகள் இதனை தீர்மானிக்கிறது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்காக, டிம் பெய்ன் தலைமையில் ஆஸ்திரேலிய அணியின் சில வீரர்கள் ஜோகன்னஸ்பெர்க் சென்றுள்ளனர்.

இதுகுறித்து ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியாகி இருக்கும் செய்தியில், “பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய துணை கேப்டன் டேவிட் வார்னரின் செயல்பாடுகள் மிகவும் மூர்க்கத்தனமாக உள்ளது. ஆஸ்திரேலிய அணி வீரர்களின் வாட்ஸ்ஆப் க்ரூப்பில் இருந்து தானாகவே அவர் விலகியுள்ளார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வார்னரின் நெருங்கிய தரப்போ, ‘வார்னர் தான் பான்க்ராஃப்டை தூண்டிவிட்டார் என்று கூறுவது முற்றிலும் தவறானது. ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் உட்பட அனைவருக்கும், இந்த திட்டம் குறித்து முன்கூட்டியே தெரியும்’ என்கின்றனர்.

பான்க்ராஃப்டை தூண்டிவிட்டதாக கருதும் மற்ற ஆஸ்திரேலிய வீரர்கள், வார்னரிடம் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர். இதனால், மற்ற வீரர்களுக்கும், வார்னருக்கும் இடையே இணக்கமான உறவு தற்போது இல்லை.

நேற்றுமுன் தினம் (மார்ச்.25), ஆஸி., வீரர்கள் கேப்டவுனில் தங்கியிருந்த ஹோட்டலின் பாரில், இரவு நேரத்தில் சில நண்பர்களை வரவழைத்து வார்னர் மது அருந்தி இருக்கிறார். அதன்பின் மற்றவர்கள் எழுந்து செல்ல, வார்னர் மட்டும் தனியாக அங்கேயே அமர்ந்து இருந்திருக்கிறார். ஹோட்டல் நிர்வாகம், மற்ற வீரர்களை கூப்பிட்டு, வார்னரை ஹோட்டலை விட்டு வெளியே அழைத்துச் செல்லுமாறு கூறி இருக்கின்றனர்.

அதுமட்டுமின்றி, அவரது நடவடிக்கைகள் பிடிக்காத ஆஸ்திரேலிய வீரர்கள், அணியின் மேலிடத்தை தொடர்பு கொண்டு, ஹோட்டலை விட்டு வார்னரை வெளியேற்றாவிட்டால், இங்கு என்ன ‘சம்பவம்’ வேண்டுமானாலும் நடக்கலாம் என எச்சரித்து இருக்கின்றனர்.

இந்த நிலையில், வார்னர் இனிமேல் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடப் போவதில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன. அணி வீரர்கள் பெரும்பாலானோர் வார்னருக்கு எதிராக திரும்பியுள்ளதால், அவர் இனி ஆஸி., அணிக்காக மீண்டும் களத்தில் கால் பதிக்க போவதில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஸ்மித் மற்றும் வார்னர் மீதான தண்டனை என்ன என்பது குறித்து ஆஸ்திரேலிய விசாரணைக் குழு விரைவில் அறிக்கை வெளியிட உள்ளது. ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும், இந்த விசாரணையின் அறிக்கையையும், அதன் முடிவுகளையும் எதிர்நோக்கி காத்திருக்கிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close