உலககோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ( ஜூன் 9ம் தேதி) லீக் போட்டியில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
இந்திய அணி பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறது. பேட்டிங்கை பொறுத்தவரையில், ரோகித், கோஹ்லி, தோனியும், பவுலிங்கில் பும்ரா, சஹல் என சிறந்தவீரர்கள் உள்ளனர்.
ஆஸ்திரேலிய அணியில் எல்லா வீரர்களுமே ஆல்ரவுண்டர்களாக உள்ளனர்.
இந்திய பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ வாய்ப்புள்ள ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் குறித்து இந்த பதிவில் காண்போம்
ஆஸி., கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் : சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் முக்கியமான நபர். இவருடன் இந்திய கேப்டன் விராட் கோஹ்லியை ஒப்பிட்டு நிபுணர்கள் அவ்வப்போது கமெண்டரியில் பேசுவார்கள்..
பந்தை சேதப்படுத்தியதாக ஓராண்டு தடைக்கு பிறகு வந்தாலும், சர்வதேச கிரிக்கெட்டில் தனக்கென ஒரு இடத்தை கொண்டிருப்பவர். நடந்துமுடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி, அதே வேகத்துடன் உலககோப்பை தொடரையும் விளையாடி வருகிறார். இந்த தொடரில் முதல் போட்டியில் சரியாக விளையாடாத ஸ்மித், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது போட்டியில் தனது தனித்தன்மையை காட்டினார்.
இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஸ்மித் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்தியாவிற்கு எதிரான 14 ஒருநாள் போட்டிகளில் 609 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 50.75 ஆகும். இதில் 2 சதங்கள் மற்றும் 3 அரைசதங்கள் அடங்கும்.
கிளென் மேக்ஸ்வெல்
ஆஸி., அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன். ஸ்பின் பவுலிங்கில் திறம்பட விளையாடுபவர் என்பதால், இந்திய அணியின் பலமான ஸ்பின் பவுலிங்கை, ஒருகைபார்க்க தயாராகி விட்டார்.
மேக்ஸ்வெல், நிலைத்து நின்று விளையாடி, அணியின் வெற்றிக்கு துணைநிற்பவர். ஒருநாள் கிரிக்கெட்டில் இவரின் சராசரி 33.4 தான், ஆனால், இவரின் ஸ்டிரைக் ரேட்டோ 122.1. இந்தியாவிற்கு எதிராக சிறப்பாக விளையாடக்கூடியவர். இந்தியாவிற்கு எதிராக 718 ரன்கள் விளாசியுள்ளார். இதன் சராசரி 34.19. ஸ்டிரைக் ரேட் 128.21.
பவுலர்களின் பந்தை எந்த திசையிலும் விட்டு விளாசக்கூடியவர். குறிப்பாக, ஸ்பின் பவுலிங்கில் அட்டகாசமாக சுவீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடுவதில் கைதேர்ந்தவர். இவரின் ஆட்டத்தை காண இன்றைய போட்டி நடைபெறும் ஓவல் மைதானமே காத்துக்கொண்டிருக்கிறது.
டேவிட் வார்னர்
இந்திய பவுலர்களுக்கு தொடக்கத்தில் இருந்தே சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருபவர் ஆஸி., பேட்ஸ்மேன் டேவிட் வார்னர். ஸ்பின், பாஸ்ட் என எந்தவித பவுலிங்கையும் திறம்பட சமாளித்து விளையாடக்கூடியவர்.
ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 என கிரிக்கெட்டின் எல்லா பார்மேட்களிலும் தனக்கென தனிமுத்திரை பதித்தவர். இந்தியாவிற்கு எதிராக இவர் விளையாடியுள்ள 15 ஒருநாள் போட்டிகளில் 636 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 45.43 ஆகும். இதில் 2 சதங்கள் மற்றும் 3 அரைசதங்கள் அடங்கும்.
பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக, வார்னருக்கு ஓராண்டுத்தடை விதிக்கப்பட்டது. தடைக்கு பிறகு இவர் பங்கேற்ற போட்டிகளிலும் பழைய போட்டிகளில் இருந்த அதே உத்வேகத்துடன் விளையாடினார்.
இத்தொடரின் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியிலேயே 89 ரன்கள் எடுத்து அசத்திய வார்னர், இன்றைய போட்டியிலும் வானவேடிக்கைகளை நிகழ்த்துவார் என்று அவரின் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.