நாளை (செப்.,24) இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தூரில் நடைபெற உள்ளது. ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளிலும் வென்றுள்ளதால், நாளையை போட்டியையும் வென்று தொடரைக் கைவசப்படுத்துவதில் கோலி தலைமையிலான இந்தியன் ஆர்மி ஆயத்தமாகி வருகிறது. அதேசமயம், உலக சாம்பியனாக இருந்துக் கொண்டு அவ்வளவு எளிதில் இந்திய அணியை தொடரைக் கைப்பற்ற விட்டுவிடக் கூடாது என்ற தீவிரத்துடன் ஆஸ்திரேலிய அணியினர் உள்ளனர்.
இந்த நிலையில், நாளையை போட்டி குறித்து டேவிட் வார்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், “எங்களது வீரர்கள் இந்திய ஸ்பின்னர்களைக் கணிக்க முடிகிறது என்றே உணர்கிறேன். ஸ்பின்னர்கள் பந்து வீச்சை எப்படி ஆடப்போகிறோம் என்ற திட்டமிடுதல் தேவை. அதாவது நேராக ஆடப்போகிறோமா, அல்லது ஸ்வீப் ஆடப்போகிறோமா என்பதைத் தீர்மானிக்க வேண்டும். அதே போல் விக்கெட்டுகளைக் கொத்தாக விட்டால் வீரர்கள் பதற்றமடைந்து உத்தேசமாக ஆடத் தொடங்குகின்றனர்.
ஆனால் தொடக்கத்தில் நல்ல ரன்களை எடுக்கிறோம் பிறகு ஸ்பின்னர்கள் வீச வருகிறார்கள் என்றால் ஆட்டத்தின் கதை வேறு. இது ஆட்டம் எந்தக் கட்டத்தில் இருக்கிறது, எந்தச் சூழ்நிலையில் இருக்கிறது என்பதைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது.
அதேசமயம், சீனியர் வீரர்களுக்கு இங்கு எக்ஸ்கியூஸ் கிடையாது. துணைக் கண்டத்தில் புதிதாக ஆட வரும் வீரர்கள் திணறலாம். ஆனால், இங்கு நிறையமுறை விளையாடி அனுபவம் பெற்ற வீரர்கள் சாக்குபோக்கு சொல்ல முடியாது. உங்களுக்கு இங்குள்ள நிலைமைகள் புரியும். எப்படி பந்தை எல்லைக் கோட்டிற்கு அனுப்ப வேண்டும் என்பதும், எப்படி ஸ்டிரைக்கை ரொடேட் செய்து ரன்கள் எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதும் சீனியர் வீரர்களுக்கு தெரிய வேண்டும்.
தோல்விகளால் எங்களது வீரர்கள் ஏமாற்றமடைந்து உள்ளனர். தொடக்கத்திலேயே அடித்து ஆட ஆரம்பித்து பந்துவீச்சாளர்களை நெருக்கடிக்கு உள்ளாக்க வேண்டும் என்பதே எங்களது எண்ணமாக உள்ளது.
நாங்கள் உலக சாம்பியன்கள் ஆனபோது அது வேறு அணியாக இருந்தது. அணியின் செயலில் முற்றிலும் வேறுபட்ட அணுகுமுறை இருந்தது.
அடுத்த உலகக்கோப்பையை நோக்கி செயலாற்றப் போகிறோம். இன்னும் 30 போட்டிகளாவது அதற்கு முன்பாக ஆடிவிடுவோம். எனவே ஒர் நிலையான அணியை உருவாக்க வேண்டும். உலகக் கோப்பையைத் தக்க வைப்பதற்கான சிறந்த அணியை தேர்வு செய்து விடுவோம். அதற்கான செயல்பாடுகளில் நாங்கள் இப்போது ஈடுபட்டுள்ளோம்” என்றார் வார்னர்.