நியூசிலாந்தில் நேற்று நடைபெற்ற U-19 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், இந்திய அணி ஆஸ்திரேலியாவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது. நாடு முழுவதும் ரசிகர்கள் இந்த வெற்றியை கொண்டாடித் தீர்த்தனர்.
வெற்றிக்கான இலக்கை இந்திய அணி எட்டிய பின்னர், வீரர்கள் துள்ளிக் குதித்து கிரவுண்டிற்குள் ஓடிவர, ஆஸ்திரேலிய அணியினர் தலையில் கை வைத்து அப்படியே உட்கார, மஞ்சள் ஜெர்ஸி அணிந்த ஒருவர் முகத்தில் மட்டும் சிறு புன்னகை எட்டிப் பார்த்து சில நொடிகள் சஞ்சரித்துவிட்டது சென்றது.
யார்யா அது? என்று பார்த்தால், ஆஸ்திரேலிய கேப்டன் ஜேசன் சங்கா. தனது அணி இறுதிப் போட்டியில் தோற்ற பிறகும், உள்ளுக்குள் வலியும், வேதனையும் இருந்தாலும், உடனடியாக அதை வெளிக்காட்டாமல், எதிரணி வீரர்களை நோக்கி சிறு புன்னகை கொடுத்து, ஒரு கேப்டனுக்குரிய முழு தகுதியை நமக்கு நிரூபித்து இருக்கிறார். இத்தனைக்கு அவரது வயது 18. இந்த இளம் வயதில், தோல்வியையும் பக்குவமாக எடுத்துக் கொள்ளும் பழக்கம் எப்படி இந்த வீரருக்கு வாய்த்தது? என்று யோசித்தால், ஜேசன் சிங்கா இந்திய பூர்விகத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய நமக்கோ ஆச்சர்யம்.
ஆம்! U-19 ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஒரு இந்தியர். இவரது தந்தை பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். பஞ்சாபின் ஜத் சிக் பிரிவைச் சேர்ந்தவர்கள். பல வருடங்களுக்கு முன்பே ஆஸ்திரேலியாவில் குடியேறியதால், அங்கு நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் 1999ம் ஆண்டு ஜேசன் சங்கா பிறந்தார்.
சமீபத்தில் நடந்து முடிந்த ஆஷஸ் தொடருக்கு முன்னதாக, இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய XI அணியுடன் மோதியது. இதில் ஆஸி.,XI அணியில் இடம்பெற்றிருந்த ஜேசன் சங்கா, 2வது போட்டியில் சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் முதல் தர கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்துக்கு எதிராக சதம் அடித்த இரண்டாவது இளம் வீரர் என்ற பெருமையை பெற்றார். முதல் இடத்தில் நம்ம சச்சின் டெண்டுல்கர் உள்ளார் என்பது கூடுதல் தகவல்.
அதேபோல், U-19 உலகக் கோப்பை தொடரிலும், ஆஸ்திரேலிய அணியில் அதிக ரன் அடித்த வீரரும் ஜேசன் சங்கா தான். மொத்தமாக 229 ரன்கள் எடுத்துள்ளார்.