இலங்கை அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் ரவிந்திர ஜடேஜாவுக்கு பதிலாக அக்ஷர் பட்டேல் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 5 ஓருநாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டி கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. தற்போதைய நிலையில், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ளது.
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது. அந்த போட்டியில் அஷ்வின், ஜடேஜா தலா 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு வழி வகுத்தனர்.
இந்த நிலையில், ஐசிசியின் விதிமுறைகளை மீறும் வகையில் நடந்து கொண்டதாகக் கூறி, ஜடேஜாவிற்கு அடுத்த டெஸ்ட் போட்டியில் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது. இதனால், பல்லேகல்லேவில் வரும் 12-ஆம் தேதி தொடங்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில், ஜடேஜா பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நடந்து முடிந்த இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில், 58-வது ஓவரை ஜடேஜா வீசினார். அப்போது கருணரத்னே அடித்த பந்தை தடுத்த ஜடேஜா, கருணரத்னே கிரீஸிற்குள் நின்றுக் கொண்டிருந்த போதே, அவரை நோக்கி வேகமாக வீசினார். இதையடுத்தே, ஜடேஜா மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2016-ஆம் ஆண்டு நியூசிலாந்திற்கு எதிராக இந்தூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், விதிமுறைகளுக்கு புறம்பாக நடந்து கொண்டதாக, ஜடேஜாவிற்கு போட்டியின் ஊதியத்தில் 50 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், ஐசிசி-யின் 2.2.11 விதிப்படி, அவருக்கு மூன்று தகுதியிழப்பு புள்ளிகளும் அளிக்கப்பட்டது.
தற்போது இலங்கைக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும், ஜடேஜா மீது இதே புகார் எழுந்த நிலையில், தற்போது அவருக்கு மேலும் 3 தகுதியிழப்பு புள்ளிகள் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் 6 புள்ளிகள் சேர்ந்ததால், ஐசிசியின் 2.2.8 விதிப்படி, ஜடேஜாவிற்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதிலிருந்து அடுத்த 24 மாதத்திற்குள் மீண்டும், ஜடேஜா மீது இதே புகார் எழுந்தால், அவருக்கு மேலும் 4 தகுதியிழப்பு புள்ளிகள் வழங்கப்படும் என்பது கவனிக்கத்தக்கது.
இந்த நிலையில், 3-வது டெஸ்ட் போட்டியில் ரவிந்திர ஜடேஜாவுக்கு பதிலாக மற்றொரு சுழற்பந்து வீச்சாளரான அக்ஷர் பட்டேல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்த அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
ரங்கனா ஹெராத் விலகல்
இலங்கை சுழற்பந்து வீச்சாளரான ரங்கனா ஹெராத் முதுகுவலி காரணமாக 3-வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக புஷ்பகுமாரா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.