இது நிடாஹஸ் டிராபியா அல்லது 'நாகினி' டிராபியா? அடிதடிக்கு யார் தைரியம் கொடுத்தது? #BANvSL

கிரிக்கெட் ஒரு ஜெண்டில்மேன் கேம் என்பதெல்லாம் இருக்கட்டும்... முதலில் அது ஒரு கேம். அவ்வளவு தான்

நேற்று ஒரு ஆக்வேர்டான கிரிக்கெட்டை நான் பார்த்தேன். ஆம்! நான் மட்டுமல்ல, உலகமே பார்த்தது.

இலங்கை கிரிக்கெட் அணி தற்போது தான் தனது வீழ்ந்து கிடந்த பெருமைகளை கொஞ்சம் கொஞ்சமாக மீட்டெடுத்து வந்தது. ஆனால், அதற்குள் நேற்று ஒரு சிறுபிள்ளைத் தனமான செயல்களில் ஈடுபட்டு வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறது. இலங்கை மட்டுமல்ல, கத்துக்குட்டி அணியாக ஒரு காலத்தில் அழைக்கப்பட்டு, இன்று சாத்திய வளர்ச்சியோடு வளர்ந்து நிற்கும் வங்கதேச அணியும் தான்.

வங்கதேச அணி, உலக டாப் கிரிக்கெட் அணிகளுக்கு ஈடாக வளர்ந்து விட்டதா? என்றால், இல்லை என்பதே நமது உறுதியான கருத்து. ஆனால், உலகின் எந்த அணிக்கு எதிராகவும், எந்த இடத்திலும் தங்களால் சவால் அளிக்க முடியும், அப்போட்டியை சுவராஸ்மானதாக மாற்ற முடியும் என்ற இடத்திற்கு வளர்ந்துள்ளனர் என்பதே இப்போது அவர்களது நிலை.

அதை ஒவ்வொரு முறையும் அவர்கள் தக்க வைத்துக் கொள்கின்றனர். ஆனால், தங்களது மோசமான, சிறுபிள்ளைத்தன பழக்கத்தால் அந்தப் பெருமையை உரிமையோடும், கர்வத்தோடும் கொண்டாடும் நிலையை இழந்து விடுகின்றனர். அவர்களைப் பொறுத்துவரை, போட்டோஷாப்பில் எதிரணி வீரர்களை தரம் தாழ்ந்து விமர்சிப்பதை வெற்றியாகவும், பழித் தீர்த்துக் கொள்வதாகவும் நினைத்தால், பின் எங்கிருந்து வளர்வது?

நேற்றைய ஆட்டத்தைப் பொறுத்தவரை, 160 ரன்களை வங்கதேசம் சேஸிங் செய்து கொண்டிருந்த போது, இறுதி ஓவரில் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்படுகிறது. இசுறு உதானா பவுலிங் செய்கிறார். முதல் பந்து டீசன்ட்டான பவுன்ஸ். இரண்டாவதும் பவுன்ஸ் பந்து தான். நோ-பால் கொடுக்க வேண்டிய பவுன்ஸ் அது. ஸ்கொயர் லெக் அம்பயர் முதலில் அதை நோ-பால் என அறிவிக்கிறார். ஆனால், மெயின் அம்பயருடன் ஆலோசித்த பின்னர், நோ-பால் கொடுக்க மறுக்கிறார். முஸ்தாபிசூர் ரன் அவுட் ஆகிறார்.

இங்கே தான் பிரச்சனை எழுகிறது. முஸ்தாபிசூர் ரன் அவுட் ஆகி, வெளியேற முற்படும் போது, தண்ணீர் கொண்டு வரும் சப்ஸ்டிட்யூட் நூருல் ஹசன், இலங்கை கேப்டன் திசாரா பெரேராவிடம் ஆவேசமாக வார்த்தைகளால் சண்டைப் போடுகிறார். பெரேராவும், சைலண்டாக வார்த்தை போரை தொடர்ந்து கொண்டே இருக்கிறார்.

திடீரென பார்த்தால், எல்லைக் கோட்டின் அருகே, வங்கதேச கேப்டன் ஷகிப் -அல் ஹசன் ஆக்ரோஷமாக அம்ப்யர்களுடன் வாக்குவாதம் செய்கிறார். அதுமட்டுமில்லாமல், தனது வீரர்களை ‘விளையாட வேண்டாம், திரும்பி வாருங்கள்’ என்கிறார். திரும்பத் திரும்ப அவர்களை விளையாட வேண்டாம் என செய்கை காட்டிக் கொண்டே இருக்கிறார். (ஆனால், மேட்ச் முடிந்த பிறகு, நான் அந்த அர்த்தத்தில் கூறவில்லை என ஷகிப் சொல்லியிருப்பது, ‘ஏய்’ படத்தின் ‘கமான்.. கமான்’ வடிவேலு காமெடியைத் தான் நினைவூட்டுகிறது).

சர்வதேச கிரிக்கெட் அரங்கில், இப்படி ஒரு நிகழ்வை நாம் பார்த்ததாக நினைவில்லை. அணியில் இடம் கிடைக்காமல் பெஞ்சில் உட்கார்ந்து இருக்கும் ஒரு இளம் வீரருக்கு, எதிரணி கேப்டனுடன் சண்டை போடும் அளவிற்கு  யார் தைரியம் கொடுத்தது? என்று நாம் நினைப்பதற்குள், வங்கதேச கேப்டன் அதைவிட ஆக்ரோஷமாக சண்டை போடுகிறார். வீரர்களை களத்தை விட்டு வாருங்கள் என்கிறார். இது சர்வதேச கிரிக்கெட்டா? அல்லது மின் கம்பத்தில் கல்லால் கோணல்மாணலாக கோடு (ஸ்டெம்ப்) வரைந்து நாம் சிறுவயதில் விளையாடிய ஸ்ட்ரீட் கிரிக்கெட்டா?-ன்னு நாம் யோசிப்பதற்குள் மேட்ச் முடிந்து, வங்கதேச வீரர்கள் மைதானத்திற்குள் வெற்றியை கொண்டாடிக் கொண்டிருக்க, வங்கதேச கிரிக்கெட் வாரிய நிர்வாகி ‘நாகினி’ டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இப்போது புரிகிறதா, சப்ஸ்டிட்யூட் எப்படி இவ்வளவு சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொண்டார் என்று!.

வங்கதேசம் போன்ற ஏழ்மையான நாட்டில், அவர்கள் கிரிக்கெட் எனும் ஒரு விளையாட்டில் வளர்ந்து நிற்பதை உள்ளபடியே, அவர்கள் பெருமையுடன் கொண்டாட வேண்டும். ஆனால், அவர்கள் சிறுமையுடன் கொண்டாடுவதால் தான், அவர்களை நாம் சிறுபிள்ளைகள் என்று அழைக்கத் தோன்றுகிறது.

இது ஒருபக்கம் என்றால், உலகின் தலை சிறந்த வீரர்களை உருவாக்கிய இலங்கை தேசமும், நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று நடந்து கொண்ட விதம் கிரிக்கெட்டை நேசிக்கும் ரசிகர்களுக்கு வேதனையைத் தந்துள்ளது. நெருப்பில்லாமல் புகையாது!. தண்ணீர் கொண்டு வந்த நூருல் ஹசனிடம், திசாரா பெரேரா என்ன சொன்னார் என்பது தெரியவில்லை. ஏன் நூருல் அவ்வளவு ஆக்ரோஷப்பட்டார்? என்பதும் தெரியவில்லை. அதுகுறித்த விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

மறுபுறம், போட்டி முடிந்த பின்னர் இலங்கை வீரர் குசல் மெண்டிஸ், மிக ஆக்ரோஷத்துடன் வங்கதேச வீரர்கள் மீது பாய்கிறார். கணநேரத்தில், தமீம் இக்பால் வந்து மெண்டிசை பிடித்து இழுத்து தனியாக அழைத்துச் செல்கிறார். இல்லையெனில், அங்கே அடிதடி ஏற்பட்டிருப்பது உறுதி!. அம்பயர்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.

இவ்வளவு கபளீகரத்துக்கு மத்தியில், வங்கதேச ஓய்வு அறையின் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறது. இலங்கை ரசிகர்கள் தான் இதனை உடைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த விசாரணையும் நடந்து வருகிறது.

கிரிக்கெட் ஒரு ஜெண்டில்மேன் கேம் என்பதெல்லாம் இருக்கட்டும்… முதலில் அது ஒரு கேம். அவ்வளவு தான். அது ஒரு விளையாட்டு. விளையாட்டில் சீரியஸ் இருக்கலாம். ஆனால், வீரர்கள் சீரியஸ் ஆகக் கூடாது. தோனி போன்று உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் இருக்கத் தேவையில்லை. அப்படி இருக்கவும் முடியாது. அட்லீஸ்ட், சில்லரைத் தனமான செயல்களில் ஈடுபடாமல் இருக்கவாவது முயற்சிக்க வேண்டும்.

அதைக் கூட விடுங்கள். விராட் கோலியிடம் இல்லாத ஆக்ரோஷமா? சக வீரர், சக மாநிலத்தார் கம்பீரையே நேருக்கு நேர் முறைத்துக் கொண்டு திரிந்தவர். ஆனால், அவரது ஆக்ரோஷம் செயல்பாட்டிலும் இருக்கும். அணியின் வெற்றியில் அது பங்குவகிக்கும். இலங்கை அதிலும் தோற்றுத் தான் போகிறது. எனவே, ஆக்ரோஷத்தைக் குறைத்து, செயல்திறனை அதிகரிக்க வழி செய்வதே, இலங்கையின் தற்போதைய கடமையாக இருக்க வேண்டும். நாகினி டான்ஸுக்கு பதில் சொல்வதற்காக, வெற்றிப் பெற வேண்டும் என்று நினைத்தால், அவர்களுக்கும் வங்கதேசத்திற்கும் வித்தியாசம் இல்லை!.

ஆனால், வங்கதேச வீரர் சௌமியா சர்கர் பற்றி நான் இங்கு இறுதியாக குறிப்பிட விரும்புகிறேன். அவரை நன்றாக கூர்ந்து கவனியுங்கள். அவரிடம் உள்ள பொறுமை நம்மை ஆச்சர்யப்படுத்தும். களத்திற்கு உள்ளேயும் சரி, வெளியேயும் சரி, சக வீரர்களுடன் அவர் பழகும் விதம், எதிரணி வீரர்களுடன் அவர் பழகும் விதம், கோபத்தை கட்டுப்படுத்தும் திறன், வாய்ப் போரில் ஈடுபடாமல் இருக்கும் குணாதிசயம் வியக்க வைக்கிறது.

இந்த அணியில், இப்படியொரு வீரரா என்று ஆச்சர்யப்படுத்துகிறது. ஷகிப், முஷ்பிகுர், தமீம் போன்றோர், இவரை விட சிறந்த கிரிக்கெட் வீரர்களாக இருக்கலாம். ஆனால், ஒரு சிறந்த தலைவனுக்கான அனைத்து தகுதியும் இந்த மனிதரிடம் இருக்கிறது என்றே கூறலாம். பொறுமையாக இருப்பது கேப்டனுக்கான தகுதியா? என்று கேட்டால், வங்கதேசத்திற்கு இப்போது அப்படியான ஒரு தலைவன் வேண்டும் என்பதே என்பது பதில்.

“நான் கிரிக்கெட் வீரனாக ஆகியிருக்காவிட்டால், நிச்சயம் ஆசிரியராகி இருப்பேன்” – மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சௌமியா சர்கர் ஒரு பேட்டியில் சொன்ன வாக்கியம் இது. நாளை நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், அவரின் செயல்பாடுகளை கவனித்துப் பாருங்கள். உங்களாலும் அவரது தனிப் பண்பை உணர முடியும்!.

அதேசமயம், வீரர்கள் மீது மட்டுமில்லாது, நேற்றைய போட்டியில் அம்பயர்களின் செயல்பாடு குறித்தும் விசாரணை நடத்த வேண்டியது அவசியம் என்று எண்ணத் தோன்றுகிறது.

 

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close