ச. மார்ட்டின் ஜெயராஜ்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் (பிசிசிஐ) மற்றும் ராகுல் டிராவிட் - ரோகித் சர்மா தலைமையிலான தற்போதைய அணி நிர்வாகமும் டெஸ்ட் அணியில் "துணை கேப்டன்" பதவியை எள்ளி நகையாடி வருகின்றனர். அந்தப் பதவிக்கு வரும் வீரர்களை 'மியூசிக் ஷேர்' விளையாட்டில் நிகழ்வதைப் போல் அடிக்கடி சுழற்றி கொண்டே இருக்கின்றனர். நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வரை அணியில் 4 வீரர்கள் துணை கேப்டன்களாக நியமிக்கப்பட்டு மாற்றப்பட்டுள்ளனர்.
இதில சுவாரசியமான விஷயம் என்னவென்றால், 2 ஆண்டுக்கு முன் எந்த வீரரை துணை கேப்டனாக நியமித்தனாரோ, அவரை தற்போது மீண்டும் துணை கேப்டனாக நியமித்துள்ளனர். அவர் யார் என்பது நம்மில் பலருக்கும் தெரியும். அவ்வகையில், அஜிங்க்யா ரஹானேவிடமே மீண்டும் துணை கேப்டன் பதவி எப்படி வந்தது?, இந்திய அணி நிர்வாகம் துணை கேப்டன் பதவியை எப்படி மதிப்பில்லாத ஒரு பதவியாக மாற்றியுள்ளது? என்பதை இங்கு பார்க்கலாம்.
செப்டம்பர் 2021ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலிக்கு அஜிங்க்யா ரஹானே தான் சரியான துணைகேப்டன் என்றும், அவர் தான் அடுத்த டெஸ்ட் கேப்டனாக இருப்பார் என்பதும் தெளிவாகத் தெரிந்தது. ஆனால், ரஹானே பேட்டிங்கில் சொதப்பியதால் அணியில் அவரது இடம் குறித்து கேள்விகள் எழுந்தன. இருப்பினும், அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டது.
நவம்பர் 2021ல் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணியின் துணைக் கேப்டனாக புஜாரா நியமிக்கப்படுகிறார்.
டிசம்பர் 2021ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரஹானே தானாக தேர்வு செய்யப்படாததால், இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த துணைக் கேப்டனாக ரோகித் அல்லது கே.எல்.ராகுல் வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.
டிசம்பர் 2021ல் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கு முன் காயம் அடைந்த ரோகித் இல்லாத நிலையில், கே.எல்.ராகுல் இந்தியாவின் துணைக் கேப்டன் ஆனார்.
ஜனவரி 2022ல் 100% உடற்தகுதியுடன் இல்லாத விராட் இல்லாத நிலையில் முதல் முறையாக டெஸ்ட் அணியை ராகுல் வழிநடத்தினார்.
பிப்ரவரி 2022ல் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் அணியின் துணைக் கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டார்.
ஜூன் 2022: எட்ஜ்பாஸ்டனில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு முன் ரோகித்துக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியான நிலையில், பும்ரா கேப்டனாகவும், ரிஷப் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டனர்.
மயங்க் அகர்வால் இந்தியாவின் டெஸ்ட் அணியில் ரோகித்துக்கு பதிலாக சேர்க்கப்பட்டார். இப்போது அவர் டெஸ்ட் அணியிலே இல்லை. அந்த டெஸ்ட் போட்டியில் புஜாரா விளையாடிய நிலையில், அவரை பி.சி.சி.ஐ அல்லது அணி நிர்வாகம் துணை கேப்டனாக நியமிக்கவில்லை. புஜாரா கில் உடன் தொடக்க வீரராக களமிறங்க, ஹனுமா விஹாரி தான் 3வது இடத்தில் பேட்டிங் செய்தார் (இப்போது அவர் அணியில் இல்லை). ரஹானே அந்த அணியில் இடம்பெறவில்லை.
டிசம்பர் 2022ல் ஒருநாள் தொடரில் ரோகித் காயமடைந்தபோது, கே.எல் ராகுல் மீண்டும் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டார், அதே நேரத்தில் ரிஷாப் அணியில் இருந்தபோதும் புஜாரா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
அபிமன்யு ஈஸ்வரனும் இந்த அணியில் இடம்பெற்றிருந்தார். ஆனால் அவர் இப்போது விளையாடாமல் நீக்கப்பட்டுள்ளார்.
துணை கேப்டன் குழப்பங்களுக்கு மத்தியில், ஷ்ரேயாஸ் ஐயர் ரஹானேவுக்கு பேக்-அப் வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நவம்பர் 2021ல் ஷ்ரேயாஸ் ஐயர் நியூசிலாந்துக்கு எதிராக ஒரு சதம் விளாசினார். இதேபோல் மார்ச் 2022ல் இலங்கை அணிக்கு எதிரான பிங்க் பால் டெஸ்டில் 92 மற்றும் 67 ரன்களை எடுத்தார்.
டிசம்பர் 2022ல் வங்க தேச அணிக்கு எதிராக 86, 87, 29* (இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 74/7 என்று சேஸிங்போது) ரன்களை எடுத்தார்.
ஸ்ரேயாஸ் ஐயர் காயம் அடைந்தார் என்ற செய்தி முதலாவது பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட்டுக்கு முன்பே வெளிவந்தது. அதனால் சூர்யகுமார் யாதவுக்கு அறிமுக வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் முத்திரை பதிக்கத் தவறிவிட்டார். இப்போது அணியிலே இல்லை. இங்கு சர்பராஸ் மற்றும் கில் போன்ற வீரர்கள் மிடில் ஆர்டர் இடங்களில் முயற்சிக்கப்படவில்லை என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.
ஷ்ரேயாஸ் பார்டர் - கவாஸ்கர் தொடரில் பெரிய அளவில் சோபிக்கவில்லை. அவர் 4, 12, 0, 26 என்ற சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறி இருந்தார். 4வது டெஸ்டில் அவர் பேட்டிங் செய்யவில்லை, மேலும் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அவர் முழு ஐ.பி.எல்-லையும் தவறவிட்டார். அதே நேரத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் களமாடிய ரஹானே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இந்திய அணியில் மிடில்-ஆர்டரில் மீண்டும் இடம் பிடித்தார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ரஹானே முதல் இன்னிங்சில் 89 ரன்களும், 2வது இன்னிங்ஸில் 46 ரன்களும் எடுத்தார். தற்போது மீண்டும் டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது இந்திய அணி நிர்வாகம் ஆரம்பித்த இடத்திற்கே திரும்பிச் செல்வது போல் இருக்கிறது. மேலும், இந்திய கிரிக்கெட்டுக்கு முன்னோக்கி செல்லும் தொலைநோக்கு பார்வையோ அல்லது பாதையோ இல்லை என்பது போலும் தெரிகிறது.
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அஜிங்க்யா ரஹானே (துணை கேப்டன்), கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், முகமது. சிராஜ், முகேஷ் குமார், ஜெய்தேவ் உனட்கட், நவ்தீப் சைனி.
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய ஒருநாள் அணி
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ஷர்துல் தாக்கூர், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜெய்தேவ் உனத்கட், முகமது. சிராஜ், உம்ரான் மாலிக், முகேஷ் குமார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.