பிசிசிஐ செயலாளர் அமிதாப் சவுத்ரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுத்துள்ளார்.
நடப்பு பயிற்சியாளர் கும்ப்ளேவின் பதவிக்காலம், வரும் சாம்பியன்ஸ் டிராஃபி தொடரோடு முடிவுக்கு வருகிறது. அதன்பின், இந்த பதவிக்கான நேர்முகத் தேர்வு ஆரம்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, விவிஎஸ் லக்ஷ்மன் ஆகிய மூன்று பேர் கொண்ட கிரிக்கெட் ஆலோசனைக் குழு பிசிசிஐ-ஆல் நியமிக்கப்பட்டது. இந்த குழுதான் புதிய பயிற்சியாளருக்கான தேர்வினை கையாண்டு, தாங்கள் இறுதி செய்த நபரின் விவரத்தை பிசிசிஐ-க்கு வழங்கும்.
விருப்பமுள்ளவர்கள், மே 31 2017-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக, 2016-ஆம் ஆண்டு இந்திய அணியின் கோச்சாக நியமனம் செய்யப்பட்ட கும்ப்ளேவின் செயல்பாடும் சிறப்பாகவே இருந்தது. இவரது பயிற்சியின் கீழ், வெஸ்ட் இண்டீசில் நடந்த டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றியது. மேலும், நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் இந்திய அணி வென்றது குறிப்பிடத்தக்கது.