சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா பங்கேற்கும்... பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் முடிவு

சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி பங்கேற்கும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி பங்கேற்கும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. தில்லியில் நடைபெற்ற பிசிசிஐ-யின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு அடுத்ததாக முக்கியத்துவம் பெற்ற சாம்பியன்ஸ் டிராபி அடுத்த மாதம் இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதில் இந்தியா உட்பட 8-அணிகள் பங்கேற்கும் தகுதி பெற்றிருந்தன. இந்த தொடரில் பங்கேற்கும் நாடுகள் தங்கள் அணி வீரர்களை கடந்த ஏப்ரல் 25-ம் தேதிக்குள் தேர்வு செய்து அனுப்ப வேண்டும் என ஐசிசி காலக்கெடு விதித்திருந்தது.ஆனால் இந்த காலக்கெடு முடிந்த நிலையிலும்  சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் குறித்து ஐசிசிக்கு அனுப்பப்படவில்லை.

ஐசிசி என்று அழைக்கப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் பிசிசிஐ எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றிற்கு இடையே வருவாய் பகிர்வு தொடர்பாக பிரச்சனை நிலவி வருகிறது. இதன்காரணமாகவே சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியை அறிவிப்பதில் பிசிசிஐ மெத்தனம் காட்டி வந்தது. இதனால், நடப்பு சாம்பியனான இந்திய அணி இந்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்குமா என்ற கேள்வி எழுந்தது.

இதனிடையே உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நிர்வாகக் குழுவானது, சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்கும் இந்திய அணியை உடனடியாக அறிவிக்குமாறு பிசிசிஐ-க்கு சமீபத்தில்  உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று பிசிசிஐ-யின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் தில்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரங் கங்குலி, சிகே கண்ணா, அமிதாப் சவுத்ரி, ராஜிவ் சுக்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் சாம்பியன்ஸ் டிராபில் இந்திய அணி பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய அணி அடுத்த மாதம் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபில் கலந்து கொள்வது உறுதியாகியுள்ளது. மேலும் அணியில் பங்கேற்கும் வீரர்களை தேர்வு செய்ய நாளை தேர்வுக்குழுக் கூட்டம் நடக்கிறது.

ஐசிசி விதித்த காலக்கெடுவானது ஏப்ரல் 25-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், தற்போதுதான் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்பதை பிசிசிஐ உறுதி செய்துள்ளது.  இந்திய அணி  சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்பதற்கு அனுமதி அளிக்கும் அதிகாரம்  ஐஐசி கையில் இருக்கும் நிலையில், நாளை இந்திய அணி அறிவிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close