தோனி விரும்பாத முக்கிய தொழில்நுட்பம் ஐபிஎல்-ல் அறிமுகம்!

இப்போதும் கூட தோனி 'இந்த தொழில்நுட்பத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை' என்றே கூறுகிறார்

11வது ஐபிஎல் தொடர், வரும் ஏப்ரல் 7ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது. இதில், முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. ஏப்ரல் 7ம் தேதி ஆரம்பிக்கும் இந்த ஐபிஎல் திருவிழா, மே மாதம் 27ம் தேதியன்று நிறைவு பெறுகிறது. இறுதிப் போட்டியும் மும்பை வான்கடே மைதானத்திலேயே நடைபெற உள்ளது.

லீக் போட்டிகள் மே 20ம் தேதியோடு முடிவடைகிறது. மே 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை பிளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் நடைபெற உள்ளது. முதல் போட்டி 4 மணிக்கும், இரண்டாவது போட்டி இரவு 8 மணிக்கும் தொடங்குகிறது.

இந்த நிலையில், முதன்முதலாக ஐபிஎல் தொடரில் டிஆர்எஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்த பிசிசிஐ அனுமதி தந்துள்ளது. நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் இந்த டிஆர்எஸ் முறையை ஐபிஎல்-லில் பயன்படுத்த ஆரம்பத்தில் பிசிசிஐ தயக்கம் காட்டியது.

பல அணிகள் டிஆர்எஸ் முறையை அமல்படுத்த கோரிக்கை வைத்தன. இருப்பினும், பிசிசிஐ மவுனம் காத்து வந்தது. ஆனால், நடைபெறவுள்ள 11வது ஐபிஎல் தொடரில், டிஆர்எஸ் முறையை அறிமுகம்  செய்ய பிசிசிஐ ஒப்புக் கொண்டுள்ளது.

இந்தியாவில் உள்நாட்டுப் போட்டிகளில் இதுவரை டிஆர்எஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டதே கிடையாது. முதன்முறையாக, ஐபிஎல் தொடரில் இது அமலாகிறது. இந்திய அணியே கடந்த ஒன்றரை ஆண்டுகளாகத் தான் தொடர்ச்சியாக டிஆர்எஸ் முறையை பயன்படுத்துகிறது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, எப்போதும் டிஆர்எஸ் முறையை ஆதரித்ததில்லை. அவர் கேப்டனாக இருந்த வரை மிகப்பெரிய தொடர்கள் தவிர்த்து, இந்திய அணி டிஆர்எஸ் முறையை பயன்படுத்தியதில்லை.

அதேசமயம், டிஆர்எஸ் முறையை சரியாக கையாள்வதில் தோனி மாஸ்டர் என்றால் அது மிகையாகாது. அவர் அப்பீல் செய்தால், அவுட் நிச்சயம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அம்பயர்களின் கான்ஃபிடன்ட்டான அவுட்களை கூட டிஆர்எஸ் மூலம் உடைத்தெறிபவர் தோனி. இதனாலேயே DRS – Dhoni Review System என்று அழைக்கப்படுவதுண்டு. ஆனால், இப்போதும் கூட தோனி ‘இந்த தொழில்நுட்பத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை’ என்றே கூறி வருகிறார்.

ஆனால், விராட் கோலி அதற்கு நேர் எதிர். எப்போது டிஆர்எஸ் தொழில்நுட்பத்தை விரும்புபவர். இதன் மூலம், அணியை நிச்சயம் தோல்வியில் இருந்து கூட காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை உடையவர் கோலி.

தற்போது, ஐபிஎல்-லுக்கும் இந்த தொழில்நுட்பம் அமலாகியுள்ளது. ஐபிஎல் தொடருக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள நடுவர்களுக்கு டிஆர்எஸ் குறித்து சிறப்பு வகுப்புகள் எடுக்கப்பட உள்ளது. ஐசிசி அம்பயர்கள் குழுவின் பயிற்சியாளர் டெனிஸ் பர்ன்ஸ் மற்றும் பால் ரீபில் ஆகியோர் இந்த வகுப்புகளை ஐபிஎல் அம்பயர்களுக்கு எடுக்க உள்ளனர்.

 

×Close
×Close