கடந்த ஜூலை 11-ஆம் தேதி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமனம் செய்யப்பட்டார். சச்சின், கங்குலி, லக்ஷ்மன் ஆகியோர் அடங்கிய இந்திய கிரிக்கெட் ஆலோசனைக் குழு இவரை தேர்வு செய்தது. அதேபோன்று, பவுலிங் பயிற்சியாளராக ஜாஹீர் கானும், முக்கியமான வெளிநாட்டு தொடர்களின் பேட்டிங் ஆலோசகராக ராகுல் டிராவிட்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்தது.
இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு சேவாக் மற்றும் ரவி சாஸ்திரி இடையே கடும் போட்டி நிலவியது. ரவி சாஸ்திரியை பயிற்சியாளராக நியமிப்பதில் கங்குலிக்கு ஆர்வமே இல்லை என கூறப்பட்டது. சேவாக் தான் அந்த பொறுப்பிற்கு வரவேண்டும் என விரும்பியிருக்கிறார். ஆனால், கேப்டன் விராட் கோலி, ரவி சாஸ்திரிக்கே முழு ஆதரவு அளித்திருக்கிறார். விராட் அளித்த பரிந்துரை காரணமாக தான் ரவி சாஸ்திரி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார் என கூறப்பட்டது.
இந்த விஷயத்தில், சச்சின் தான் கங்குலியை சமாதானம் செய்திருக்கிறார். அணியின் முடிவுக்கே மதிப்பளிக்க வேண்டும் என்று கங்குலிக்கு சச்சின் அறிவுறுத்தியிருக்கிறார். இருப்பினும், பந்து வீச்சாளர் நியமனத்தை பொறுத்தவரை பரத் அருணை நியமிக்க வேண்டும் என்று ரவி சாஸ்திரி விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால், ஜாகீர் கானை கங்குலி நியமிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளார். இதனால் தான், ஜாகீர் கான் பவுலிங் கோச்சாக நியமிக்கப்பட்டார் என கூறப்பட்டது.
இந்த நிலையில், ஜாகீர் கான் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் அவர்களது பதவிகளில் இருந்து நீக்கப்படுவதாக பிசிசிஐ இன்று அதிரடியாக அறிவித்துள்ளது. அதோடுமட்டுமில்லாமல், ரவி சாஸ்திரி சிபாரிசு செய்த பரத் அருணையே பந்துவீச்சு பயிற்சியாளராக நியமனம் செய்துள்ளது. சஞ்சய் பாங்கர் துணை பயிற்சியாளராகவும், ஆர்.ஸ்ரீதர் ஃபீல்டிங் பயிற்சியாளராகவும் நியமிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் 2019-ல் நடக்கும் உலகக்கோப்பை தொடர் வரை பயிற்சியில் நீடிப்பார்கள் என கூறியுள்ளது.
கடந்த வாரம் ஜாகீர் கான் மற்றும் டிராவிட்டை நியமனம் செய்த பிசிசிஐ, இந்த வாரம் அவர்களை பதவியில் இருந்து நீக்கியிருப்பது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், கிரிக்கெட் ஆலோசனை குழுவில் உறுப்பினராக உள்ள கங்குலி பதவி விலகலாம் என தெரிகிறது.