வீரர்களுக்காக பிசிசிஐ சொந்தமாக விமானம் வாங்க வேண்டும் – கபில்தேவ்

தற்போது பிசிசிஐ சொந்தமாக விமானம் வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு போதுமான அளவு பிசிசிஐ நிர்வாகத்திடம் பணம் உள்ளது.

உலகிலேயே மிகவும் அதிகம் பணம் கொழிக்கும் கிரிக்கெட் நிர்வாகம் என்றால் அது இந்திய கிரிக்கெட் வாரியம் தான். ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகள் மிகவும் வலிமை வாய்ந்த அணிகள் என்றாலும், அந்த நாட்டு வாரியம் மற்றும் வீரர்களுக்கு கிடைக்கும் வருமானத்தை விட, இந்திய வீரர்களின் வருமானம் மிகவும் அதிகமாகும்.

தற்போது இந்திய கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக விளையாடி வருகிறது. இந்திய மண்ணில் 17 டெஸ்ட் போட்டிகளை முடித்த இந்தியா, சாம்பியன்ஸ் டிராபி, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை தொடரை முடித்துள்ளது.

விரைவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கு எதிராக சொந்த மண்ணில் விளையாடுகிறது. அதன்பின் வெளிநாட்டு தொடர்களில் விளையாட இருக்கிறது.

தொடர்ச்சியாக வீரர்கள் பயணம் செய்வதால், அவர்கள் சோர்வின்றி இருக்கவும், பயண நேரத்தை குறைக்கவும் பிசிசிஐ சொந்தமாக விமானம் வாங்க வேண்டும் என்று முன்னாள் இந்திய அணி கேப்டன் கபில்தேவ் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கபில்தேவ் கூறுகையில் ‘‘தற்போது பிசிசிஐ சொந்தமாக விமானம் வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு போதுமான அளவு பிசிசிஐ நிர்வாகத்திடம் பணம் உள்ளது. இது அதிக அளவிலான நேரத்தை மிச்சப்படுத்தும். இந்திய வீரர்களுக்கு எளிதாக இருக்கும். பிசிசிஐ-யால் விமானம் வாங்கக்கூடிய அளவிற்கு தொகையை செலவிட முடியம். ஐந்து வருடத்திற்கு முன்பே இதை செய்திருக்கனும்.

வரவிருக்கும் நாட்களில் கிரிக்கெட் வீரர்கள் தாங்களே சொந்த விமானம் வைத்திருக்கும் நிலைமைய காண விரும்புகிறேன். அமெரிக்காவில் கோல்ஃப் வீரர்கள் சொந்தமாக விமானம் வைத்திருக்கிறார்கள். நேரத்தை சேமிப்பதற்கான நமது வீரர்கள் ஏன் விமானம் வாங்கவில்லை என்பதற்கான எந்த காரணத்தையும் என்னால் பார்க்கமுடியவில்லை. பிசிசிஐ விமானம் வாங்கினால் இரண்டு போட்டிகளுக்கு இடையே வீரர்களுக்கு போதுமான நேரம் கிடைக்கும். விமானத்திற்கான பார்க்கிங் கட்டணத்தை பிசிசிஐ-யால் செலவிட முடியும்’’ என்றார்.

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bcci should have its own aircraft kapil dev

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express